Tuesday, October 25, 2016

'காவல் துறை உங்கள் நண்பன்' என்பது சரியா?

அது ஒரு மழைக்காலம். ஆனாலும் சென்னை மக்கள், அதைப் பொருட்படுத்தாது தத்தமது பணிகளுக்காகப் பறந்துகொண்டிருந்தனர். சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் வாகனங்கள் தவழ்ந்து சென்றன. அதில்தான் அதிக கட்டணம் வசூலிக்கும் அரசுப் பேருந்து ஒன்றும் நீந்திவந்தது. சென்னை அயன்புரம் இ.எஸ்.ஐ பஸ் நிறுத்தத்தில் நின்ற அந்தப் பேருந்தில், ஜன்னலோர இருக்கைகள் நனைந்து இருந்தன. அதில், அவசர அவசரமாக ஏறினார் காவல் துறை அதிகாரி ஒருவர். ஏறியவர், நனையாத சீட்டில் அமர்ந்திருந்தவரிடம், ‘‘நீங்கள் ஜன்னலோர சீட்டில் உட்காருங்கள். நான் இதில் உட்கார்ந்துகொள்கிறேன்’’ என்றார். உட்கார்ந்திருந்தவருக்குக் கோபம் வந்தாலும்... அதைக் காட்டிக்கொள்ளாது, ‘‘நீங்கள் போய் அந்த சீட்டில் உட்காருங்கள். நான் உட்கார முடியாது’’ என்றார். ‘‘நான் டூட்டிக்குப் போகிறேன். என் சீருடை அழுக்காகிவிடும்’’ என்றார் போலீஸ் அதிகாரி. ‘‘அப்போ, நாங்க மட்டும் என்னா பீச்சுக்குக் காத்துவாங்கவா போறோம்... எங்க டிரஸ் அழுக்காகாதா?’’ என்றார் அந்தப் பெரியவர் சற்றே கோபத்துடன். உடனே போலீஸ் அதிகாரி, ‘‘நான் போலீஸ்’’ என்றார். அதற்குப் பெரியவர், ‘‘நீங்க போலீஸ்னா... நீங்க சொல்றபடி நடக்கணுமா? போலீஸ்னா, பொதுமக்களுக்குத்தான் சேவை செய்யணும்ங்கிறத முதல்ல தெரிஞ்சுக்கங்க’’ என்றார் அதே கோபத்துடன். அதற்குமேல் அந்த போலீஸ் அதிகாரியால் எதுவும் பேச முடியவில்லை. எல்லோரும் அவரையே பார்த்தனர். ஆகையால், அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நடையைக் கட்டிவிட்டார்.  

‘‘ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்கும் இவர்கள் படிக்கட்டிலேயே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார்கள். இவர்களும் உள்ளே செல்லாமல், மற்றவர்களையும் உள்ளேவிடாமல் தடுப்பணைபோல் நின்றுகொள்கிறார்கள். அதிலும் பெண் போலீஸார், அறவே உள்ளே தள்ளிச்செல்வது இல்லை. சீருடையில் இருப்பதால் பயணிகளும் அவர்களிடம் பேசப் பயப்படுகின்றனர். ஆனால், கூட்டநெரிசலின்போது படியில்தொங்கும் இளைஞர்களை மட்டும் பிரம்பால் பதம்பார்த்துவிடுகிறார்கள், அதே காவல் துறையினர். இப்படித்தான் தினந்தோறும் போலீஸார் செய்யும் பயணத்தின்போது, அட்டூழியங்கள் கணக்கு வழக்கில்லாமல் போகின்றன. அவர்களின் பயணங்களின்போதுதான் இந்த அவலட்சணங்கள் அரங்கேறுகின்றன என்றால், காவல் நிலையத்திலோ அதற்கு மேல்தான்.  

‘‘ஃபில்டர் கோல்டு ஓர் அரை பாக்கெட் வாங்கிக்க...’’
யாராவது புகார் ஒன்றைக் கொடுக்கச் சென்றுவிட்டால்போதும்... அந்தப் பரிதாப புகார்தாரர்தான் வெட்டப்படுவதற்கான அன்றைய வெள்ளாடு. முதலில், ‘தம்பீ, அந்தா தெரியுது பாரு... அதுல போயி ஒரு டீயைச் சொல்லிட்டு, அப்படியே ஃபில்டர் கோல்டு ஓர் அரை பாக்கெட் வாங்கிக்க... இப்போதைக்கு அதுபோதும்’ என்று தொடங்கும். பின்னர், அதிலிருந்து வால்பிடித்து... ‘அப்படியே ஒரு கொயர் நோட்... எங்கே சொல்லு?’ ‘ஒரு கொயர் நோட்.’ ‘அதை, ஒரு பண்டல் வாங்கிக்க’ என்று போகும். பின்னர், புகார்தாரரின் அப்பாவித்தனத்தைப் பொறுத்து... அது காலை டிபன், மதிய உணவு வரை கொண்டு போய்விடும். அப்படிக் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்தும் ஒரு பிரயோஜனமுமில்லை என்கிற நிலைதான் சமீபகாலங்களாக நடந்துவருகிறது. ‘தன்னை, தினமும் ஒருவன் ஃபாலோ செய்கிறான்’ என்று ஒரு பெண் கொடுத்த புகாரை அவசரகதியில் கவனிக்காமல் மெத்தனமாய் இருந்ததன் விளைவு, அந்தப் பெண்ணின் உயிரே காவு வாங்கப்பட்டுவிட்டது. புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி போனையே லஞ்சமாகப் பெற்ற கிரைம் பிராஞ்ச் போலீஸ் ஒருவரால், ஒரு பெண்ணின் உயிரே பரிதாபமாகப் பறிக்கப்பட்டது. 

வார - மாத ரெகுலர் மாமூல்!
ஸ்டேஷனில் இருக்கும் போலீஸாரின் நிலை இதுவென்றால்... ரோந்து என்று இரவு நேரத்தில் சுற்றும் போலீஸாரின் தொல்லையும் சொல்லிமாளாது. நடைபாதை வியாபாரிகளிடமும், தள்ளுவண்டி கடைக்காரர்களிடமும் தினப்படியாகச் சில்லறை மாமூலையும், வார - மாத ரெகுலர் மாமூலையும் வசூலிப்பது மிகவும் சாதாரணமான ஒன்றே இவர்களுக்கு.  இதுதவிர, நடைபாதை உள்ளிட்ட அத்தனை வணிகர்களின் வருமானத்திலேயே இவர்கள், தினந்தோறும் தன் வயிற்றை நிரப்பிக்கொள்வதும்... குடும்ப உறுப்பினர்களுக்கு பார்சல் கட்டி எடுத்துச்செல்வதும் வாடிக்கையாகி வருகிறது. சில சமயங்களில் மாமூலைக் கொடுக்கத் தவறினால், அதைவைத்துப் பிழைப்பு நடத்திவந்த கடையையே காலி செய்துவிடுகிறார்கள். அவர்களை, அனுசரித்துச் செல்வோரை ஆரத்தி எடுக்கிறார்கள். அடிபணியாதவர்களை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். ஆளும் கட்சிப் பிரமுகரோ, அந்த ஏரியாவின் முக்கியஸ்தரோ அல்லது அந்தப் பகுதியின் பெரிய செல்வந்தரோ காவல் நிலையத்துக்கு வந்துவிட்டால்போதும். தன்னுடைய பதவி, உடுத்தியிருக்கும் காக்கிச் சட்டையின் பாரம்பர்யத்தையும் பாராது வழியச் சென்று வரவேற்று உபசரிப்பார்கள். அவர்களிடம் கைகட்டி வேலை பார்க்கும் ஆட்களைப்போன்று நின்று வேடிக்கை பார்ப்பார்கள். நேர்மையாய் சில அதிகாரிகள் இருந்தாலும் அவர்களையும் உயர் அதிகாரிகள் விட்டுவைப்பதில்லை. அதை உலகுக்கு உணர்த்திய கதையும் உண்டு. 

திருடன் ஒருவன், ‘நான் திருந்திவிட்டேன்’ என்று சொன்னால்கூட அவனை விடுவதில்லை. ‘நீ திருடி, எங்களுக்குப் பங்கு கொடுக்காவிட்டால்... பழைய வழக்குகளை எல்லாம் உன்மீது போட்டு மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம்’ என்று மிரட்டியே திருந்தி வாழநினைக்கும் முன்னாள் திருடர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றனர். விசாரணை என்று அழைத்துச் சென்று விடியவிடிய விசாரித்து, (அடித்துத் துன்புறுத்தி) ஆளையே (லாக்கப் டெத்) முடித்துவிட்டு, ‘அக்யூஸ்ட் தற்கொலை செய்துகொண்டான் என்றோ அல்லது மாரடைப்பால் இறந்துவிட்டான்’ என்றோ கச்சிதமாக காரியத்தை முடிப்பதும் காவல் துறையின் கைதேர்ந்த கலைகளில் ஒன்று. 

மறக்க முடியாத சம்பவங்கள்!
முடிக்கப்படாத வழக்குகள், பெரிய மனிதர்களால் முடக்கப்படுவது; வேலியே பயிரை மேய்ந்த கதையாய், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பலிகடாவாக்கப்படுவது; தெருவில் வாதிட்டுக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தையே, போலீஸ் லத்தியால் கண்டபடி தாக்கியது; ‘ஓசி’ புரோட்டா கொடுக்கவில்லை எனபதற்காக, பரோட்டா மாஸ்டரில் தொடங்கி... அந்தக் கடையை நடத்திய முதலாளிவரையில்  லத்தியால் அடித்து, காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றது... எல்லாம் காவல் துறை வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்கள். 

பயிற்சிக்கான விடை!
முழங்கால் அளவு ஷூ, முழுவதும் நனையாமல் இருக்க ரெயின் கோட் என மழைக்காலத்துக்குத் தேவையான அனைத்தையும் வைத்திருந்தாலும் பொதுமக்களுக்குச் சேவை செய்கிறவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கிறார்கள். பிரதமரோ, முதலமைச்சரோ, பிரபலங்களோ வருவதாக இருந்தால் மட்டும் போதும். நம் காவல் துறையினர், அன்றுதான் மொத்த உழைப்பையும் காட்டுவார்கள்; மழை கொட்டினாலும், வெயில் கொளுத்தினாலும் அசையாமல் நிற்பார்கள். அவர்கள் எடுத்த பயிற்சிக்கு அன்றுதான் விடை கிடைக்கும். இரண்டு கி.மீ தொலைவுக்கு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்களை நிறுத்திவைத்துவிடுவார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்கள்கூட, அவர்கள் கண்களுக்கு அப்போது அவசியமில்லாததாகவே தெரியும். அந்த இடைவெளியில் பொதுமக்கள் படுத்தும் தூங்கிவிடலாம். ஓர் இளைஞர் சென்னை அண்ணா சாலையில் இதுபோன்று படுத்துத் தூங்கிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

வசூலிப்பதில் கில்லிகள்!
போக்குவரத்து ஒழுங்கைச் சரிசெய்ய வேண்டிய காவலர்களைக் கோடைகாலத்தில் உச்சிவெயில் வேளையின்போது பார்க்கவே முடியாது. ஏதாவது ஒரு மரத்தின் நிழலிலோ... எவரும் சற்றென்று பார்த்திர முடியாத கடைக்குள்ளேதான் நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால், மாதக் கடைசியில் மாலை வேளை வந்துவிட்டால் போதும். இரும்புத் தடுப்பை எங்கிருந்துதான் தள்ளிக்கொண்டு வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. வேலையைக் கச்சிதமாக முடிப்பதற்கு வசதியாகத் தடுப்புகளைப் போட்டு வசூலிப்பதில் வருமானவரித் துறை அதிகாரிகளைவிட இவர்கள் கில்லிகள். ‘லைசென்ஸ் இல்லை; இன்சூரன்ஸ் இல்லை; ஹெல்மெட் போடவில்லை; நம்பர் பிளேட் மாற்றவில்லை’ என ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி காசைக் கறந்துவிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஓட்டிச்செல்லும் டூவீலர்களில் இவை அனைத்தும் முறையாக இருக்கிறதா என யாரும் பார்ப்பதில்லை. முக்கால்வாசி காவலர்கள் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டிச்செல்கிறார்கள். அவர்களை யாராவது தடுத்து நிறுத்தி அபராதம் விதித்திருக்கிறார்களா.... இல்லையே? 

அதுபோல் ஒரு பைக்கில், குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களையும் (நான்கு பேர்) ஏற்றிக்கொண்டு சவாரி செய்கிறார்கள். இவர்களைக் கேட்க எந்த விதிமுறையும் நாட்டில் இல்லையே? கேட்டால், இவர்கள் காவலர்கள்... நாட்டு மக்களுக்குச் சேவை செய்பவர்கள். ‘காவல் துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லும் போலீஸார், முதலில் தம்மைத் திருத்திக்கொண்டு... அப்புறம் அல்லவா நண்பர்களைத் திருத்த வேண்டும். நண்பர்களிடமே பிடுங்கித் தின்று, நண்பர்களையே வேட்டையாடி நயவஞ்சகச் செயல் செய்யும் போலீஸார்தான் நம்மைக் காப்பவர்களா’’ என புலம்பித் தீர்க்கின்றனர் அவர்களிடம் காயம்பட்ட பொதுமக்களில் சிலர்.

‘‘இந்தத் துறைக்கு ஒத்துவராத ஒன்று!’’
‘‘உங்கள் மீது இப்படியான கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே. அதை, எப்படி நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எடுத்துக்கொள்கிறீர்கள்?’’ என்று காக்கிச் சீருடைக்குள் அடைந்திருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மற்ற அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள்போல் எங்களுக்குக் கிடைப்பதில்லை. அதனால், குறுக்குவழியில் சம்பாதிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. லஞ்சம் கொடுத்து வேலைக்குவரும் காவலர்கள், இதுபோன்றுதான் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இரவு, பகல் என்று டூட்டி இருக்கிறது. கொலை, கொள்ளை, விபத்து, பந்தோபஸ்து என பலதரப்பட்ட கேஸ்களுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், அரசியல்வாதிகளிடமும், அட்ரஸே இல்லாத ரவுடிகளிடமும் அவப்பெயர் வாங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. ‘நேர்மையாக இருக்க வேண்டும்’ என்பது இந்தத் துறைக்கு ஒத்துவராத ஒன்று. அதனால்தான் பொதுமக்கள் போலீஸைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். நமக்கும் பொதுமக்களுக்கும் புரியாதது ஒன்றுதான். இதுபோன்ற தவறுகளுக்குக் காரணம், அதிகாரிகளா... ஆட்சியாளர்களா?’’ என்றார் ஒன்றுமே தெரியாதவாறு.

இப்போது சொல்லுங்கள்! காவல் துறை உங்கள் நண்பனா..?

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment