Thursday, October 20, 2016

பா.விஜய்யின் மறக்க முடியாத அனுபவம்!

பா.விஜய்யின் மறக்க முடியாத அனுபவம்! - பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

‘‘ஒரு தோல்வி ஒன்பது வெற்றிகளுக்குச் சமம்’’ என்றவர் வித்தகக் கவிஞர் பா.விஜய். அவருடைய பிறந்த தினம் இன்று.

இவர், ‘கோயில் நகர’மான கும்பகோணத்தைச் சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரே அவரது பிறந்த ஊர். அங்கு பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கு சரஸ்வதியாய் இருந்து... பாடம் புகட்டிய சரஸ்வதி என்ற ஆசிரியைக்கும் 1974-ம் ஆண்டு மகனாய் பிறந்தார். அவர்களின் ஒரே மகனான பா.விஜய், பெற்றோரிடம் தான் என்ன கேட்டாலும் வாங்கித் தரும் அளவுக்குச் செல்லமாக வளர்க்கப்பட்டார். அவர்களுடைய கனவு, பா.விஜயை நோக்கியே இருந்தது. படிப்பைவிட கவிதை, கதை, கட்டுரை எழுதுவதில் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார்; எல்லாப் போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளைச் சுமந்து வந்தார். பரிசுகளும், சான்றிதழ்களும் பா.விஜய்யை பள்ளியில் பிரபலமாக்கின. இதர போட்டிகளில் போட்டி போட்டு வெற்றிபெற முடிந்த பா.விஜய்யால், இவர் படித்த வகுப்பில், பாடத்தில் முன்னொக்கிச் செல்லமுடியவில்லை.

‘‘பேப்பர் என்பதால், நம்பர் விடுபட்டிருக்கும்!’’
1993-94-ம் ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காகக் காத்திருந்தார். அதற்குள் அவருடைய பெற்றோர், என்ஜினியரிங் படிப்பதற்காக விண்ணப்பப் படிவத்தை வாங்கி வந்துவிட்டனர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அன்று, பேப்பரில் நம்பர் வரும் காலம் என்பதால், பிரபலமான பேப்பர் நிறுவனத்துக்கே சென்று பேப்பரை வாங்கிப் பார்த்தவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அவர் நம்பரைத் தவிர, மற்ற நம்பர்கள் இருந்தன. கண்ணீரும் கவலையும் அவர் மனதை வாட்டியபோதிலும்... அதே நிலையில், வீட்டுக்குச் சென்றவரை தன் மனக்கண்ணால் புரிந்துகொண்டார் அவரது அன்னை. பிள்ளையின் மனம் எப்படியிருக்கிறது என்பது பெற்றவருக்குத்தானே தெரியும். பல மாணவர்களின் மனதைப் புரிந்துகொள்ளும் ஓர் ஆசிரியைக்கு, தன் மகனின் மனநிலையைப் புரிந்துகொள்வதிலா கஷ்டம். அதற்கான காரணம் தெரிந்தது, அவரது அன்னைக்கு. ‘‘பேப்பர் என்பதால், நம்பர் விடுபட்டிருக்கும்’’ என்று ஆறுதல் கூறினர் உறவினர்கள்.

‘‘அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம்!’’
ஒருவேளை, அப்படிக்கூட நடந்திருக்கலாம் என்கிற ஆசையில் பள்ளிக்கு ஓடிப்போய்ப் பார்த்தார் பா.விஜய். அங்கேயும் ஏமாற்றமே மிஞ்சியது. இயற்பியல், வேதியியல், கணிதம் இவை மூன்றைத் தவிர மற்ற பாடங்களில் தேர்ச்சி. அப்புறம், எப்படி என்ஜினியரிங் படிக்க முடியும்? பெற்றோரின் கனவுக் கோட்டை தகர்ந்தது. தேர்வில் தோற்றதால், தாம் எதற்கும் தகுதியில்லை என்று எண்ணினார்; எதிர்காலம் சிதைந்து விட்டது என்று ஏங்கினார்; வாழ்க்கையே முடிந்து விட்டது என்று வருந்தினார்; எங்கும் நகர முடியாமல் மனம் நொந்துபோனார். அந்தச் சமயத்தில், ‘உற்றநேரத்தில் தோள் கொடுப்பான் தோழன்’ என்கிற முதுமொழிக்கு ஈடாய் அவருக்கும் ஒரு தோழன் கிடைத்தார். அது, வேறு யாருமல்ல. அவருடைய அப்பா. தோழனாய்ச் சென்று... அவருடைய தோளைத் தொட்டு, ‘‘அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம். நீ வருத்தப்படாதே’’ என்று அவரின் மனதைத் தேற்றினார்.

‘‘உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் எழுத வருதே...’’
அவருடைய வார்த்தைகளிலிருந்து நம்பிக்கை பிறந்தது. பின்வந்த நாட்களில் மீண்டும் அந்தப் பாடங்களைப் படித்தார்; தேர்வெழுதினார். ஆனாலும், அவர் மீண்டும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. தோல்வியிலிருந்து விடை காண முற்பட்டார்; தொன்மையான தமிழ்மொழியில் உள்ள இலக்கிய, இலக்கண நூல்களுடன் உறவாடினார்; அதற்கு, தூண்டுகோலாய் அவரது தந்தை விளங்கினார். அவர்தான், ‘‘உனக்குத்தான் கவிதை, கதையெல்லாம் நல்லா எழுத வருதே... திரைப்படங்களுக்குப் பாட்டு எழுத முயற்சி செய்யலாமே’’ என்று ஊக்கப்படுத்தினார். அதற்கான பாதையில்... தேடலில்... பயிற்சியில் பா.விஜய்யும் நகர ஆரம்பித்தார்.

பாக்யராஜ் மூலம் வாய்ப்பு!
அந்தத் தேடலுக்கான திரைப்பயணம் திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜ் மூலம் கிடைத்தது. காலம் காலமாய் காதலின் சின்னமாய் போற்றப்படும் தாஜ்மஹாலைப் பற்றி... அதாவது, அதன் மாதிரிப் படம் எப்படி வந்தது என்பதைப் பற்றி பாக்யராஜிடம் விளக்கினார் பா.விஜய். அப்படியொரு கதையைச் சொனனதோடு மட்டுமின்றி, அடுத்தடுத்து நீரோ, கஜினி, பிரிதிவிராஜன், சரபோஜி மகாராஜா போன்றவர்களைப் பற்றியும் கூறிப் பிரமிப்பூட்டினார் பா.விஜய். இவ்வளவு விஷயங்களைக் கையில் வைத்திருந்த கவிஞரைத் தன் கூட வைத்துக்கொண்டார் பாக்யராஜ். திரைவானில் உலா வருவதற்கு வழிகாட்டினார்; தன்னுடைய படத்தில் பாடல் எழுத வாய்ப்புத் தந்தார்.
‘உன்னைப்போல் ஒருத்தி
மண்ணிலே பிறக்கவில்லை...
என்னைப்போல் யாரும்
உன்னைத்தான் ரசிக்கவில்லை’ - என்ற ஒரு காதல்மயமான பாடலை ‘ஞானப்பழம்’ என்ற படத்தில் எழுதினார்.

அந்தப் பாடல், அவரை திரை உலகில் மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து பாடல்கள் எழுதிய பா.விஜய், தன்னம்பிக்கைக்கான ஒரு பாடலை இயக்குநர் சேரன் மூலம் படைத்தார். ‘ஆட்டோகிராஃப்’ படத்தில், ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ என்கிற பாடல்தான் அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. பட்டிதொட்டி மட்டுமல்லாது, பலருடைய உதடுகளிலும் அந்தப் பாடல் முணுமுணுக்கத் தொடங்கியது. போராடும் மனிதர்களுக்கு நம்பிக்கையைத் தந்த அந்தப் பாடல், தேசிய விருதுபெற்றது. அது மட்டுமல்லாது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாடநூலிலும் இடம்பெற்றது.

‘‘வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்!’’
‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ பாடலுக்காக... தேசிய விருது வாங்குவதற்கு முன், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை தன் குடும்பத்துடன் சந்தித்து உரையாடினார் பா.விஜய். அப்போது, அந்தப் பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டாராம் அப்துல் கலாம். பாட்டுப் பாடுவது பற்றி யோசிக்காத பா.விஜய், கொஞ்சம் அதிர்ச்சியோடு பாடியிருக்கிறார். அவரோடு, அவர் மனைவியையும் சேர்ந்து பாடச் சொல்லிக் கேட்டிருக்கிறார் கலாம். இது தவிர, ‘‘சுதந்திர இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதை பாரதி, தன்னுடைய ‘வெள்ளிப் பனி மலையின் மீது...’ என்ற பாடலில் சொல்லியிருப்பார். அதேபோன்று, நீங்களும் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்கிற ஒரு கனவுப் பட்டியலுடன் ஒரு திரைப் பாடல் எழுதுங்கள்’’ என்று வேண்டுகோள் வைத்தாராம். ‘‘இது என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்’’ என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் நம் கவிஞர்.

அதில் வரும்,
‘ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்’ - என்கிற வரிகள் நிச்சயமாக எல்லாருடைய வாழ்விலும் நிஜமாகுபவை. இதுதவிர, ‘இளைஞன்’ படத்தில், தோழா... வானம் தூரம் இல்லை என்கிற பாடலும், ‘ஏழாம் அறிவு’ படத்தில் இடம்பெற்ற இன்னும் என்ன தோழா என்ற பாடலும் தன்னம்பிக்கைக்குரிய பாடல்களாக உள்ளன. மனம் உடைந்த நிலையில், வாழ்வே வெறுத்துவிட்டதாக விரக்தி அடைபவர்களுக்கு ஆறுதல் கூறும் அளவுக்குத் தன்னம்பிக்கை கவிதைகளைப் படைத்தவர் பா.விஜய். அந்த வகையில் கீழுள்ள இரண்டு கவிதைகளைச் சொல்லலாம்.
‘காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது...
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது!’ - என்கிற கவிதை வாழ்க்கையில் வலி இருந்தால்தான் வசந்தம் வரும் என்பதை மெய்ப்பிக்கிறது.

‘துடியாய்த் துடி
சாதிக்க!
படியாய்ப் படி
வாதிக்க!
மரம் குடைய கோடாலி
கொண்டுபோவதில்லை
மரங்கொத்தி...
அவனவன் கையில்
ஆயிரம் ஆயுதம்’ - என்று சொல்லும் இந்தக் கவிதையில், நம்பிக்கையே மனிதனின் ஆயுதம் என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். காதல் மனதைக் காயப்படுத்தும் ஒரு செயல் என்பதை ஒரு கவிதையில் மிகவும் அழகாகச் சொல்லியிருப்பார். அந்தக் கவிதை...
‘மண்ணைப் பிசைந்தால் பாண்டம்...
மனசைப் பிசைந்தால் காதல்...
உடையக்கூடியவை எல்லாம்
உருவாவது இப்படித்தானோ?’

இதுதவிர, 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். ‘கறுப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு’ என்று ஆரம்பிக்கும் ஒரு பாடலில் கறுப்பு நிறத்தின் வலிமையை நன்கு உணர்த்தியதோடு, அந்த நிற மனிதர்களையும் தன் ரசிகர்களாக்கினார்.

கவிதைதான் கவிஞனாக்கியது!
தன்னுடைய பாடல் வரிகளால், தன் ரசிக நெஞ்சங்களை வளைத்துக்கொண்ட கவிஞர், ‘‘பள்ளி நாட்களுக்கும் கல்லூரி நாட்களுக்கும் இடையில் நிகழ்ந்த அந்த மிகப்பெரிய மனப் போராட்டத்துக்கான விடைதான் நான் கவிஞனாகியது. எனக்குள் இருந்து கவிதை வந்தது. ஆக, கவிதைதான் என்னை முந்தி கவிஞனாக்கியது’’ என்று அவரே ஒரு நேர்காணலில் பெருமைப்படச் சொல்லியிருக்கிறார்.

கதாநாயகர்களுக்கு ஏற்றபடி டூயட் பாடல்களும், தனிப் பாடல்களும் எழுதுவதில் புகழ்பெற்றவர்கள் கவிஞர்கள். அதில், பா.விஜய்யும் கைதேர்ந்தவர். அதனால்தான் குறுகிய காலத்திலேய திரை உலகில் முன்னோக்கிப் பயணித்தார். இயக்குநர்கள் எல்லாம் நடிகர்களாக மாறிக்கொண்டிருந்த காலத்தில், கவிஞர்களைக் கதாநாயனாக்கியது திரை உலகம். மற்ற கதாநாயகர்களுக்கு பாடல்களை எழுதிக்கொண்டிருந்த நம் கவிஞரையும் அவருடைய எழிலே அவரை கதாநாயகனாக்கியது. கதாநாயகர்களைத் தேடிப்பிடித்துப் படம் எடுக்கும் காலத்தில்... பாடல் எழுதும் எழில்மிக்க ஒரு கவிஞரே கதாநாயகராய் தோற்றமளித்தால், திரை உலகம் என்ன சும்மாவா விட்டுவிடும்?

‘‘உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்!’’
‘‘ ‘பராசக்தி’ படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என்று இருக்கிறேன்’’ என தன் ஆசையை முத்தமிழ் அறிஞர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளார் பா.விஜய். அதற்கு அவர், ‘‘ஏன் இந்த விபரீத முயற்சி’’ எனக் கேட்டுள்ளார். அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்துள்ளார், நம் கவிஞர். ‘‘படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் உன்னை சிவாஜியுடன் ஒப்பிட்டுச் சரியாகச் செய்யவில்லை என்று கூற மிக அதிக சதவிகித வாய்ப்பு இருக்கிறது’’ என்று சொல்லியுள்ளார் கருணாநிதி. உடனே, அந்த எண்ணத்தைக் கைவிட்டார் நம் கவிஞர். பிறகு கருணாநிதியே, ‘‘ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி எழுதிய, ‘தாய்’ நாவலைப் பண்ணலாமே... அது, உனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்’’ என்று சொல்ல... அப்போதே அவருடைய எழுத்தோவியத்தில் (‘தாய்’ நாவலின் தமிழாக்கத்தில்) ‘இளைஞனி’ல் கதாநாயகனாய் களமிறங்கினார் நம் பாடலாசிரியர் பா.விஜய். அதன்பிறகு, இளையோர்களும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் வெள்ளித் திரைக்கு ஒரு புதுமுகம் கிடைத்தது; ‘ஞாபகங்கள்’, ‘ருத்ர மாதேவி’, ‘நையப்புடை’, ‘ஸ்ட்ராபெர்ரி’ என அவரது நடிப்புப் பயணம், தொடர்ந்து பிரவேசித்துக்கொண்டிருக்கிறது.

‘‘என் திருமணமே மரபுக்கவிதையை எழுதிய ஒரு மனநிலைதான்!’’
எவருக்குமே ஒரு பயணத்தோடு மற்றொரு பயணம் சேர்ந்துகொள்வது வழக்கம். அதுபோல் நம் கவிஞரையும், வாழ்க்கை என்ற பயணம் வளைத்துக்கொண்டது. உட்கோட்டை என்ற ஊரில் இருந்த அவரது உறவுப் பெண்ணான லேனா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களுடைய விருப்பத்துக்கு இணங்க நடைபெற்ற அவருடைய திருமணத்தில் நடிகர்கள் பாக்யராஜ், சத்யராஜ், சேரன், ரமேஷ் கண்ணா, திலகவதி ஐ.பி.எஸ் போன்றவர்கள் கலந்து கொண்டனர். தன்னுடைய திருமண நிகழ்வைக்கூட, ‘‘மிக அற்புதமான ஒரு மரபுக்கவிதையை எழுதிய ஒரு மனநிலையில் அந்தத் திருமணம் நடைபெற்றது’’ என்று வர்ணிக்கிறார் நம் கவிஞர். அவர்களுடைய இல்லற வாழ்வின் வெளிச்சமாய் விஷ்வா, விஸ்ணா என்ற இரண்டு விதைகள் விருட்சம் பெற்றன.

ஒரே நாளில் 12 நூல்கள்!
‘உடைந்த நிலாக்கள்’, ‘கண்ணாடி கல்வெட்டுகள்’, ‘காட்டோடு ஒரு காதல்’, ‘நந்தவனத்து நட்சத்திரங்கள்’, ‘வானவில் பூங்கா’, ‘ஒரு கூடை நிலா’, ‘தூரிகை துப்பாக்கியாகிறது’, ‘நிழலில் கிடைத்த நிம்மதி’, ‘வள்ளுவர் தோட்டம்’, ‘அரண்மனை ரகசியம்’, ‘மஞ்சள் பறவை’, ‘கடவுள் வருகிறான் ஜாக்கிரதை’, ‘கறுப்பழகி’, ‘ஐஸ்கட்டி அழகி’,  ‘நம்பிக்கையுடன்’, ‘தோற்பது கடினம்’, ‘செய்’ போன்ற சமூகம், காதல், காவியம், தன்னம்பிக்கை, சினிமா சார்ந்த 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஒரே நாளில் தன்னுடைய 12 நூல்களை வெளியிட்டுச் சாதனை படைத்தார் பா.விஜய். அந்த வெளியீட்டின்போதுதான் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியால், ‘வித்தகக் கவிஞர்’ என்று பட்டம் சூட்டப்பட்டார். சமூகப் பணிகளுக்காக, ‘இ3’ என்ற இளைஞர் இலக்கிய இயக்கத்தை நிறுவிச் செயலாற்றி வருகிறார்.

ஒரு விழாவின்போது வாலிப கவிஞர் வாலி, ‘‘சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய். அவர் மட்டுமே என்னுடைய வாரிசாக இருக்க முடியும்’’ என்று தனது கலையுலக வாரிசாக பா.விஜய்யை அறிவித்தார்.

‘‘வாழ்க்கையில் ஒரே இடத்தில் தேங்கி நிற்பது எனக்குப் பிடிக்காத ஒன்று. அடுத்தடுத்து என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும்’’ என தன்னம்பிக்கையுடன் சொல்லும் பா.விஜய், அதற்கான பயணங்களில் இன்றும் சென்றுகொண்டிருக்கிறார்.

பா.விஜய்யின் பயணம் சிறக்க வாழ்த்துகள்!

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment