Monday, March 28, 2016

நாம் வாழ்வோமடி!

ஸ்மார்ட் போன் நீயடி...
உன்னைச் சுமந்திருக்கும்
பேட்டரி நானடி...

வாட்ஸ்அப்பில் 
உன் குரலும்  
வைரலாகுதடி!

ஃபேஸ்புக்கிலும்
உன் போட்டா
ஃபேமஸ் ஆகுதடி!

இணையம் போன்ற 
உன் இதயத்தில் 
அனுதினமும் 
இணைந்திருப்பேனடி...

நீயின்றி 
நான் இல்லையடி...
அந்த நினைவோடு 
நாம் வாழ்வோமடி!

Thursday, March 17, 2016

ஒரு ஏழை விவசாயியின் இறுதிக்குரல்!

(இந்தக் கட்டுரை 25-04-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


'கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி  - விவசாயி' என்றார், மருதகாசி. அப்படிப்பட்ட விவசாயிகள் நம் நாட்டில் தற் கொலை செய்துகொள்வதுதான் வெட்கக்கேடானது. 

'ஆண்டொன்றுக்கு குறைந்தது 183 நாட்கள் விவசாயத்தில் ஈடுபடு கிறவரே பிரதானமான விவசாயி' என்று மக்கள்தொகைக் கணக் கெடுப்பில் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவர்தான் முழுமை யாக தன்னுடைய தொழிலில், வாழ்வாதாரத்தில் மற்றும் வருமா னத்தில் விவசாயத்தை சார்ந்திருப்பவராகக் கருதப்படுகிறார். 

அப்படியான இந்த விவசாயிகளின் வாழ்க்கைதான் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. இந்தியா ஒரு வேளாண்மை நாடு. அதில், 60 சதவிகித மக்கள் வேளாண்மையுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்து இருக்கின்றனர். இந்தியாவில் வேளாண்மை, பெரும்பாலும் பருவ மழையையே சார்ந்திருப்பதால், பருவமழை தவறுவது, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லாதது, நிலம் கையகப்படுத் துதல், இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற காரணங்களால் விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கஜேந்திர சிங் என்ற விவசாயி, டெல்லியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. 1991 மற்றும் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு இடைப் பட்ட 20 ஆண்டுகளில், விவசாயிகளின் எண்ணிக்கையில் 72 லட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது. திட்டக் கமிஷன் புள்ளி விவரத்தின்படி 2005 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் விவசாயத் துறையில் 140 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Records Bureau) 2013-ம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் வெளி யிட்ட புள்ளி விவரங்களின்படி, 1995 முதல் 2013 வரையிலான 18 ஆண்டுகளில் 2,84,694 இந்திய விவசாயி கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

1995-ல் தேசியக் குற்றங்கள் பதிவு அமைப்பானது, விவசாயத் தற்கொலைகளைப் பட்டியலிட்டது. பத்திரி கையாளர் சாய்நாத் என்பவரால் 1990-ல் விவசாயத் தற்கொலைகள் வெளிச்சத்துக்குத் தெரிய ஆரம்பித்தன. 1990-ம் ஆண்டிலிருந்து இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள் ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங் களில்தான் பெரும்பாலான விவசாயத் தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
இதன்படி மேற்கண்ட மாநிலங் களில் 2009-ல் 62 சதவிகிதமாக இருந்த தற்கொலை செய்துகொண்ட விவ சாயிகளின் எண்ணிக்கை, 2010-ல் 66.49 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில், 1995 முதல் 2002 வரையிலான காலத்தில் 20,066 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்படி கடந்த 2011-2013-ம் ஆண்டுகளுக்குள் 39,553 விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர்.  2014-ம் ஆண்டில் மகாராஷ்டிரத்தில் மட்டும் 1,981 விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டுள்ளனர். அதுவே இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள் 601-ஆக ஆகி யிருக்கிறது. இப்படியே இந்த மாநிலம் போய்க்கொண்டிருந்தால், விவசாயிகளின் தற்கொலை மாநிலமாகக்கூட அது மாறிவிடும்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலையில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்த அதாவது, ஆண்டுக்கு சராசரியாக 1,567 தற்கொலைகள் நடந்துகொண்டிருந்த சத்தீஸ்கரில்கூட தற்கொலைகள் குறைந்துள்ளன என்கிறது புள்ளிவிவரம். மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மட்டும் 2009-ஐக் காட்டிலும் 2010-ல் விவசாயத் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. சத்தீஸ்கர், தமிழ்நாடு, ராஜஸ் தான் ஆகிய மாநிலங்களில் குறைந்துள்ளன.

கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில்கூட காவிரியில் தண்ணீர் இல்லாமல், பயிர்கள் கருகியதால் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தத் தற்கொலைகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, தேசிய அளவில் உள்ள புள்ளி விவரங்களைக் கணக்கிட்டால், 2004-ம் ஆண்டிலிருந்து விவசாயிகளின் தற்கொலை என்பது சராசரியாக 30 நிமிடங்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைந்திருக்கிறது.

விவசாயிகளின் தற்கொலைகளுக்கு பருவமழை, வறட்சி, கொள்முதல் விலை, கடன் பிரச்னை, நிலம் கையகப்படுத்தல் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதை களைவதுதான் அரசின் கடமை. அதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருந்தால் விவசாயிகளுக் கோ அல்லது அவர்களின் குடும்பங்களுக்கோ எதுவும் ஆகப்போவதில்லை. விவசாயிகளின் தற்கொலை யைத் தடுக்க மத்திய அரசு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.

''விளைபொருட்களுக்கு 50 சதவிகித கூடுதல் கொள்முதல் விலை, மானிய விலையில் உரங்கள், வட்டி யில்லா கடன், பயிர் சேதத்துக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு ஆகியவை அடங்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அதை மத்திய அரசு செயல்படுத்தினால் விவசாயிகள் வாழ்வில் இருள் நீங்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.சண்முகத்திடம் பேசினோம். '' விவசாயம் லாபகரமாக இல்லை என்று சொல்லிவிட்டுத்தான் கஜேந்திர சிங் தற்கொலை செய்துகொண்டார். அவரைப் போன்றுதான் லடசக்கணக்கான விவசாயிகள் இந்தியாவில் உள்ளனர். மத்திய அரசின் வட்டி விகிதம் அதிக ரிப்பு என்கிற அணுகுமுறையால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். தேசிய விவசாயி கள் கமிஷன் குழுவில் இடம்பெற்றிருந்த எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைத்த 4 சதவிகிதம் வட்டி விகிதம் தற்போது 11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக தனியார் துறையில் கந்துவட்டி வாங்கி விவசாயம் செய்யப்படுகிறது. பி.ஜே.பி தேர்தல் அறிக்கையின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு 50 சதவிகித லாபம் உறுதி' என்றது. ஆனால் அவர்கள் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. கரும்புக்குக்கூட டன்னுக்குக் கட்டுப்படியான விலையைக் கொடுப்பதில்லை. தோராயமாகக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. வேளாண் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் தற்கொலை அதிகம் நடக்கிறது. இதை மத்திய அரசு மாற்றவேண்டும்'' என வலியுறுத்துகிறார் அவர்.   

'இந்த நாட்டில் விவசாயிகளுக்கு மதிப்பு இல்லை' என்று கத்திவிட்டு உயிரைவிட்ட கஜேந்திர சிங்கின் வார்த்தைகள்தான், ஒட்டுமொத்த விவசாயிகளின் உரிமை முழக்கமாய் உள்ளது. இதை உணர்ந்து இனிவரும் காலங்களுக்காக, விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு செயல்பட வேண்டும்.

- ஜெ.பிரகாஷ்

பள்ளியை மறந்தான்... பஞ்சாலையில் சேர்ந்தான்: குழந்தை தொழிலாளர் அவலம்!



(இந்தக் கட்டுரை 16-07-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)
''பள்ளியை மறந்தான்

பஞ்சாலையில் சேர்ந்தான்

பட்டினியை வென்றான்!''


- என்று குழந்தைத் தொழிலாளியைப் பார்த்து தன் எண்ணக் குமுறலைக் கொட்டினான் ஒரு கவிஞன். உலகத்திலேயே அதிக குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு நம் இந்தியா என்பது வேதனைப்பட வேண்டிய விஷயமாகும்.
இத்தகைய நிலையில்தான்  14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குலம் சார்ந்த தொழில்களை (விவசாயம், நெசவு) செய்யலாம் என்று குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1986-ல்  சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதற்கு பல்வேறு கட்சியினரும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குழந்தைகள் அமைப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து இம்மசோதா குறித்து டெல்லியில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

இந்தியாவில் மட்டும் 70 முதல் 80 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள்  இருப்பதாக சிஏசிஎல் தெரிவித்திருக்கிறது. இதேபோல் வங்காளதேசத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது. உலக அளவில் எடுத்துக்கொண்டால் ஆசியாவில் 61 சதவிகிதமும், ஆப்பிரிக்காவில் 32 சதவிகிதமும், லத்தீன் அமெரிக்காவில் 7 சதவிகிதமும், அமெரிக்காவில் 1 சதவிகிதமும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதுதவிர கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் உள்ளனர். ஆசியாவில் நடைபெறும் வேலைகளில் 22 சதவிகிதமும், லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் வேலைகளில் 17 சதவிகிதமும் அங்குள்ள குழந்தைத் தொழிலாளர்களால் செய்யப்படுகின்றன. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபட்டு இருந்தாலும், தேசிய அளவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணியமர்த்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படவில்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 10-19 வயதுடையோர் இந்தியாவில் 25 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 15 முதல் 25 வயது வரை உள்ளவர்கள், விவசாயப் பணிகளில் 18 சதவிகிதமும் விவசாயக் கூலிகளாக 48 சதவிகிதமும் உள்ளனர். 15 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள சுமார் 75 சதவிகிதக் குழந்தைகள் உழைப்புச் சந்தையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் பட்டாசுத் தொழிற்சாலைகள், பஞ்சு நூற்பாலைகள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள், திரையரங்குகள் போன்றவற்றில் பணிபுரிபவர்களாவும், ஷூ பாலீஸ், பேப்பர், பால் பாக்கெட், வாட்டர் கேன் போடுபவர்களாகவும், ரயில்வே கூலிகளாகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறார்கள் என்றபோதிலும், முழுநேர தொழில் செய்தவர்கள் பகுதிநேர தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான். வேலூர் மாவட்டத்தில் தினமும் காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் பீடி சுற்றும் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சேலம், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலித் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக நடத்தப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்த 22 குழந்தைகளை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார குழு, ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
"திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 76-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் 13 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 8-ம் வகுப்பு முடித்த பின்னர் நூற்பாலைகளில் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். 20 முதல் 100 குழந்தைகள் வரை பகல், இரவு என இரண்டு வேளைகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்'' என்கிறது அந்த அறிக்கை.

"பல இடங்கள்ல சின்ன பசங்களதான் வேலைக்கு வெச்சு இருக்குறாங்க. அவங்க கஷ்டபடுறதா பார்த்தா எங்களாலேயே தாங்க முடியல. சில இடத்துல பொருள தூக்க முடியாம சிரமப்படுறாங்க. காலையில வேலைக்கு வர்ற பசங்க நைட்டுதான் வீட்டுக்குப் போறாங்க. பாவம் அந்தப் பசங்க'' என்று ஆதங்கப்படுகின்றனர் அதைப்பார்த்த மக்கள்.
இதுகுறித்து சென்னை ஹோட்டல் முதலாளி ஒருவரிடம் பேசினோம்.
“ திருச்சியிலே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர், ஸ்கூல் முடிச்சுட்டு சும்மா இருக்கானுங்க. அவனுகளுக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுனு போன்ல சொன்னார். நானும் அவர்களை வரச் சொல்லி சப்ளையர்களாச் சேத்துக்கிட்டேன். தினமும் 150 ரூபா சம்பளம் கொடுத்து, மூணுவேள சாப்பாடு போட்டு, தங்குறதுக்கு ரூமும் கொடுத்தேன். 1 மாசம் இருந்தானுங்க.. அப்புறம் ஸ்கூல் தொறக்கப் போறாங்கனு சொல்லிட்டுப் போய்ட்டானுங்க.. பெரிய ஆளுங்க 500 ரூபா சம்பளம் கேட்குறாங்க. சின்ன பசங்களுக்கு நாம கொடுக்கறதுதான் சம்பளம். ஆனா இப்ப அவனுகளுக்கும் விஷயம் தெரிஞ்சுப்போச்சு. 500 ரூபா சம்பளம் கேட்குறானுங்க'' என்றார் விரக்தியில்.

குடும்ப வறுமை, 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உலகமயமாதல், ஏற்றத்தாழ்வுகள் முதலியவற்றால்தான் குழந்தைகள், தொழிலாளர்களாக மாறுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால், குடும்பத்தில் ஏற்படும் அதிக வறுமையினால்தான் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைவினால் நோய்வாய்ப்படுகிறார்கள், கல்வியைத் துறக்கிறார்கள், குழந்தைத் தொழிலாளர் ஆகிறார்கள், வேலைச் சந்தைக்குக் கடத்தப்படுகிறார்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், இடம்விட்டு இடம்பெயர்கிறார்கள்.

இவற்றை மையப்படுத்தி உடல் ரீதியான பாதிப்பு, உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு, உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு ஆகியன குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளாக குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பு நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ளது.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்குத்தான் உடனே வேலை அளிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் ஒடிசா, பீகார் போன்ற வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளை அழைத்துவந்து கட்டட வேலைக்குப் பயன்படுத்துகின்றனர்.

பெரியவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு குழந்தைகள் பணியமர்த்தப்படுவதால், வேலை யின்மை அதிகரித்து வறுமைக்குக் காரணமா கிறது. வறுமை மட்டுமே, குழந்தைத் தொழிலை உருவாக்கவில்லை. சில சமுதாயப் பிரச்னைகளும் அதற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றன. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஏற்ற சட்டங்களும் வலுவானதாக இல்லை என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள் என தேசியக் கொள்கை வரையறுக்கின்றது. ஆனாலும் குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1986-ல் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குலம் சார்ந்த தொழில்களை (விவசாயம், நெசவு) செய்யலாம் என்கிறது மத்திய அரசு. இதற்கு தற்போது பல கட்சியினரும் குழந்தைகள் அமைப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டதே குழந்தைப் பருவமாகும். ஒரு குழந்தை வாழ்வதற்கான உரிமையைப் பிறப்பிலேயே பெற்றிருக்கிறது. தாய், தந்தை இருவருக்குமே குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும். அதன் வாழ்வாதாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அரசு பாடுபட வேண்டும். கருத்தைச் சொல்வதற்கும், கல்வி கற்பதற்கும் குழந்தைகளுக்கு முழு உரிமை உண்டு. தொடக்கக்கல்வி அவர்களுக்கு இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டியதன் அவசியத்தைத் தேசிய குழந்தைகள் சாசனம் - 2004 அறிவுறுத்துகிறது. தேசிய குழந்தைகள் செயல்திட்டம் - 2005, அனைத்துக் குழந்தைகளின் வாழ்வாதாரம், வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதி செய்கிறது. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அதற்கு மூல காரணங்களாக உள்ள வறுமை போன்றவற்றை ஒழிக்கவும் குழந்தைத் தொழில் ஒழிப்பு திட்டம் (NCLP) உருவானது. இவையெல்லாம் இருந்தும் என்ன பயன்? இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது ஒழிக்கப்படாமல்தானே உள்ளது.
குழந்தைத் தொழிலாளர் உருவாவது குறித்தும் அதை ஒழிப்பதற்கான காரணம் குறித்தும் குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர் அ.தேவநேயனிடம் பேசினோம்.

“குழந்தைத் தொழிலாளர் என்பது நாட்டுக்கு அவமானம். குடும்பத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது குறைவாக இருக்கிறது. நிரந்தர வேலை இல்லை. சாதிய கட்டமைப்பான மனநிலை நிலவுகிறது. தலித், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதியினர் பிரிக்கப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காலந்தொட்டு அவர்கள் கல்வியற்றவர்களாகவும், தொழிலாளர்களாகவும் உள்ளனர். பெரியவர்களின் உழைப்பைவிட குழந்தைகளின் உழைப்பை எளிதாகப் பெற முடிகிறது.

குழந்தைகளின் உழைப்பு அதிகமாக சுரண்டப்படுவதுடன் அவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது. நிறுவனங்களில் வைத்து வேலை வாங்குவதைவிட குழந்தைகளை வீட்டிலேயே வைத்து வேலை வாங்குகின்றனர். விடுமுறை, இன்சூரன்ஸ், மெடிக்கல் போன்றவை கிடைப்பதில்லை. தொழிலாளர் சட்டத்தை மீறிச் செயல்படுதல் போன்றவை குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன'' என்றவர், தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கவும் வழிவகை சொன்னார்.

“குடும்பத்தில் பெற்றோர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான இருப்பிடத்திலும், வாழ்வாதாரத்திலும் அரசு பங்குகொள்ள வேண்டும். வறுமை, வறட்சி, இடம் மாறுதல் போன்றவற்றில் ஏற்படும் சூழ்நிலையை அரசு சரி செய்ய வேண்டும். 18 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாகக் கட்டாய சமகல்வி வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு அருகாமையிலேயே இருக்க வேண்டும். கல்வியை செலவு என்று பார்க்கக் கூடாது. நாட்டின் ஆளுமைக்குக் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். தேசியக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த விழிப்பு உணர்வு விரிவுப்படுத்தப்பட வேண்டும்'' என்றார் அ.தேவநேயன்.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கான அடிப்படைக் காரணங் களைக் கண்டறிந்து, 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச சமகல்வி வழங்கி, குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழித்திட வேண்டும் என்பதுதான் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு இயக்கங்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
செயல்படுத்துமா மத்திய அரசு?

- ஜெ.பிரகாஷ்

யோகாவை ஆதரிக்கும் மோடி!


(இந்தக் கட்டுரை 29-01-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)
ப்படியோ நம் பிரதமர் மோடி, இந்தியாவை ஒரு வழிக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறார்போலும். ஆம், 'தூய்மை இந்தியா' மூலம் இந்தியாவைத் தூய்மைப்படுத்தி வரும் மோடி, தற்போது 'யோகா' மூலம் அனைவரையும் யோகிகளாக்க முயற்சித்துள்ளார்.


உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறியே யோகா. இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் இந்தக் கலை, உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமன்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற கலை. யோகா ஒரு வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் இந்தக் கலையை முன்னிறுத்தி ஐ.நா. சபை, ஜூன் மாதம் 21ஆம் தேதியை 'சர்வதேச யோகா தினமாக' அறிவித்து உள்ளது.

இந்நிலையில், யோகாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதுகுறித்து கடந்த 28ஆம் தேதி தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பேசிய அவர், "இது நமக்கெல்லாம் குறிப்பாக யோகாவை புரிந்துகொண்டவர்களுக்கும், செய்து வருபவர்களுக்கும் பெருமை ஆகும். யோகாவுக்கு மொழியோ, வயதோ, எல்லையோ கிடையாது. இந்தியாவில் பிறந்த யோகா, இன்று உலகளாவிய பண்பாக மாறிவிட்டது. அந்த வகையில் சரியான யோகாவை உலகுக்கு அறிமுகப்படுத்துவது இந்தியாவின் மிகச்சிறந்த கடமையாகும்.

ஜூன் 21ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நீங்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய உலக சாதனை படைக்க வேண்டும். இதற்கான திட்டத்தை இப்போதே தொடங்கினால், யோகா குறித்த சிறந்த செய்தியை அந்த சாதனை மூலம் உலகுக்கு அளிக்க முடியும். எனவே இதற்காக இப்போதே திட்டமிட வேண்டும்" என்று தேசிய மாணவர் படையின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.

எப்படியோ நன்மை ஏற்பட்டால் சரிதான்!

- ஜெ.பிரகாஷ்

முதல்முறையாக அணிவகுப்பு மரியாதைக்கு தலைமையேற்ற பெண்!

(இந்தக் கட்டுரை 27-01-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


புதுடெல்லி: முதல்முறையாக அணிவகுப்பு மரியாதைக்கு ஒரு பெண் அதிகாரி தலைமையேற்றுள்ளார்.

இன்று எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய் பெண்கள் முன்னேறி விட்டனர். அந்தவகையில், நம்முடைய 66வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைக் கௌரவிக்கும் வகையில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பெருமை சேர்த்துள்ளார் விங் கமான்டர் பூஜா.

கடந்த 25 ஆம் தேதி டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். அந்த அணிவகுப்பு மரியாதை, விமானப் படை அதிகாரியான விங் கமான்டர் பூஜா தலைமையில் நடந்தது.

வழக்கமாக ஆண் அதிகாரிதான் இந்தப் பொறுப்பை வகிப்பார். ஆனால், இந்த முறை இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி தலைமையில் இந்த அணிவகுப்பு மரியாதை நடந்துள்ளது. இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் பூஜா தாக்கூர்.

இதுகுறித்து பூஜா கூறும்போது, ''பயிற்சிக் காலத்திலிருந்தே பெண்கள், ஆண்களுக்கு இணையாகத்தான் நடத்தப்படுகிறார்கள். இதில் ஆண், பெண் பாரபட்சமே கிடையாது. எனவே, நாங்கள் முதலில் அதிகாரிகள், பின்புதான் பெண்கள். அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியது எனது வாழ்க்கையில் பெருமைக்குரிய ஒரு தருணமாகும். இது எனக்கு மிகுந்த கௌரவத்தையும், மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்துள்ளது'' என்றார்.

ஜெ.பிரகாஷ்

மிரட்டி பணம் பறிக்கின்றனவா மேட்ரிமோனியங்கள்?

(இந்தக் கட்டுரை 24-12-14 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)



வீட்டைக் கட்டிப் பார்... கல்யாணத்தைப் பண்ணி பார், என்பார்கள்.  அத்தனை நிஜம் இந்த வார்த்தைகள். பெண் தேடும் படலம் துவங்கி சாந்தி முகூர்த்தம் வரை பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக் கின்றன திருமணங்கள். எந்த மதமானாலும் சாதியானாலும் திருமணம் என்பது பொதுவானதே.

சடங்குகள் மட்டுமே வேறுபடுகின்றன. பெற்றோர்கள் தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ நல்ல இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பதே அவர்களின் ஆசையும் எதிர்பார்ப்புமாக உள்ளது. பழங்காலத்தில் தரகர்கள் மூலம் பெண் பார்க்கும் படலம் நடந்தது.

பின்னர், நாளிதழ்களில் விளம்பரம் என பரவி இன்று ஊடகங்கள், இணை யங்கள், மற்றும் மேட்ரி மோனி யங்கள் எனப் பிரத்யேக வலைதளங் கள் பலவற்றின் மூலம் பொருத்தங்கள் பார்க்கப்பட்டு திருமணங்கள் முடிகின்றன. அதற்கேற்றாற்போல், போலி யான தரகர்களும் மேட்ரிமோனியங்களும் உருவாகிவிட்டதா கவும் அதிலும் குறிப்பாக மிரட்டி பணம் பறிக்கும் மேட்ரிமோனியங்கள் பல வரன்தேடுவோரை ஏமாற்றிவருவதாக புகார் எழுந்துள்ளது..

பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க மேட்ரிமோனியங்களை அணுகினால், அவர்கள் முதலில் நுழைவுக்கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி பதிவு செய்யச் சொல்கின்றனர். சில மேட் ரிமோனியங்களில் ஜாதகம் ஒன்றுக்கு ரூ.50 வீதமும், குறிப்பிட்ட எண்ணிக்கை உடைய ஜாதகங்களுக்கு ரூ.1,500 க்கும் மேல் கட்டி பதிவு செய்த பிறகு ஜாதகங்களைத் தருகின்றனர். அந்த ஜாதகங்கள் தங்களுடைய ஜாதகத்துக்குப் பொருத்தமானதாக இருப்பதில்லை என்பதோடு அதில் பல தவறானதாக இருக்கின்றன. என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள். 
“ மேட்ரிமோனி நிறுவனம் தரும் முகவரிகளும், போன் நம்பர்களும் போலியானதாக இருக்கின்றன. மேட் ரிமோனியத்தினரே இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒரே மேட்ரிமோனியத்திடம் எங்கள் மகனுக்குப் பொருத்தமுள்ள ஜாதகம் கேட்டு ரூ.10,000 வரை செலவு செய்துவிட்டோம். ஆனால், மேலும்மேலும் அவர்கள் பணம்தான் கேட்கிறார்களே தவிர, இதுவரை உருப்படியான ஜாதகத்தைக்கூட அவர்கள் தரவில்லை.

அவர்கள் தந்த சில முகவரிகளை அணுகினால் தாங்கள் அப்படி எதுவும் பதிவு செய்யவில்லை என அதிர்ச்சி தருகின்றனர் அவர்கள். பணம் பறிப்பதற்காக அதே ஜாதகங்களில் பெயர், முகவரி, போன் நம்பர் ஆகியவற் றை மாற்றி, திரும்ப அனுப்பி வைக்கின்றனர். இதுகுறித்து வேறு எங்காவது புகார் கொடுத்தால், உன் மகன் (மகள்) ஜாதகத்தை எங்களிடம் கொடுத்திருக்கே. அதில் தோஷம் இருப்பதாகவும் வேறு பலவிதமான செய்திகளையும் திரித்துக் கூறி கல்யாணம் ஆகாமல் செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்“ என்று கண்ணீர் மல்கக் கூறினார் சென்னைவாசி ஒருவர்.

“ ஒரு பதிவு நம்பருக்கு ஒருமுறை மட்டுமே ஜாதகங்களை அனுப்புவோம். திரும்ப அனுப்பமாட்டோம். நாங்கள் அனுப்பியுள்ள ஜாதகங்களில் முழு விவரத்துடன் போன் நம்பர் கொடுத்துள்ளோம்.

அவர்கள்தான் அதை முழுதாகத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  வழங்கப்பட்ட ஜாதகங்களில் யாருக்காவது திருமணம் நடந்திருந்தால், அதை உடனே தெரியப்படுத்தி விடுவோம்.

அதற்கு மேலும் ஜாதகம் வேண்டுமெனில், அவர்கள் பதிவு நம்பரை புதுப் பிக்க வேண்டும். அதற்குத் தனியே பணம் செலுத்த வேண்டும். இந்த நிபந் னைகளை முதலிலேயே அவர்களுக்கு தெரிவித்து விடுகிறோம். தவிர, நாங்கள் அதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது கிடையாது.’’ என்றார் வாடிக் கையாளரின் குற்றச்சாட்டு பதில் அளித்த ஒரு திருமணத் தகவல் மைய பொறுப்பாளர்.

திருமணம் என்பது ஆயிரங் காலத்துப் பயிர் என்பார்கள். அது தழைத்து ஓங்க மேட்ரிமோனியங்கள் பெற் றோர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

- ஜெ.பிரகாஷ்


தகுதிக்கு கிடைத்த விருது!

(இந்தக் கட்டுரை 24-12-14 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன்மோகன் மாளவியா ஆகிய இருவருக்கு இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது வழங்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

‘இந்திய ரத்தினம்’ என்று பொருள்படும் பாரத ரத்னா விருது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். சிறந்த தேசிய சேவை ஆற்றியதற்காக வழங்கப்படும் இந்த விருது கலை, அறிவியல், இலக் கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் சேவை புரிந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 2011 ம் ஆண்டு அதன் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அந்த வகையில் கிரிக்கெட்டில் சாதனை புரிந்தமைக்காக சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த ஆண்டு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1954 ல் முதன்முதலாக வழங்கப்பட்ட இந்த விருதை டாக்டர் ராதாகிருஷ்ணன், ராஜாஜி, சர்.சி.வி.ராமன் ஆகியோர் இணைந்து பெற்றனர். அதன் பிறகு 1955 ல் ஜவஹர்லால் நேரு உள்பட மூவர் இந்த விருதைக் கூட்டாகப் பெற்றனர். 1955 க்குப் பிறகு சட்டப்படி இந்த விருதை அமரர்களுக்கும் வழங்க வழி வகை செய் யப்பட்டது. அதன்படி 10 பேர்களுக்கு அவர்களின் மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா வழங்கப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தமிழக முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்.ஜி.ஆர் உள்ளிட்டோர் அடக்கம். இந்திய பிரஜை தவிர, வெளிநாட்டவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், இந்த ஆண்டு பாரத ரத்னா விருதை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு வழங்க மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியானது, சச்சின் டெண்டுல்கருக்கும், சி.என்.ஆர். ராவுக் கும் இந்த விருதை அறிவித்தபோதே வாஜ்பாய்க்கும் வழங்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால், அரசியல் காரணங்களால் அவர் பெயரை அறிவிக்காததால் ஆதங்கப்பட்ட பி.ஜே.பி, இந்த ஆண்டு அதனை நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி ‘நல்லாட்சி தின’மாகக் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கு முன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. .

அரசியல் காரணங்களை புறந்தள்ளிப் பார்த்தால், வாஜ்பாய் பாரத ரத்னா விருதுக்கு பொருத்தமானவரே. மகத்தான சாதனைகளுக்குச் சொந்தக்காரர். பிரம்மசாரியான அடல் பிகாரி வாஜ்பாய், மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தவர். 50 ஆண்டு கால பாராளுமன்ற உறுப்பினரான இவர், மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி என வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி வாஜ்பாய் மட்டும்தான். 1974 ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தவர். இமயம் முதல் குமரி வரை தங்க நாற்கரச் சாலை, பொக்ரான் அணுகுண்டு சோதனை என இவர், தன் ஆட்சியில் பல சாதனைகளை புரிந்தவர்.

சுதந்திர போராட்ட தியாகி, எம்.பி, வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் என பல பதவிகளை வகித்த வாஜ்பாய், அரசியல் நாகரிகத்தின் அச்சாணி’யாய் விளங்கியவர். தனி மரியாதையையும் பலரின் நன் மதிப்பையும் பெற்ற வாஜ் பாயை, ‘‘தவறான கட்சியில் இருக்கும் ஒரு நல்ல தலைவர்’’ என்று தி.மு.க தலைவர் கருணாநிதி பி.ஜே.பியை எதிர்த்த ஒரு நேரத்தில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந் தரராஜன், ‘‘21 கூட்டணி கட்சிகளைக்கொண்டு சிறப்பாக, ஊழலற்ற முறையில் ஆட்சி புரிந்தவர். அவருடைய ஆட்சி வளர்ச்சி, அமைதி நிறைந்தது. மிகத் திறமைசாலி, நல்ல எழுத்தாளர். மனிதாபிமானமுள்ளவர். எதிர்க் கட்சி தலைவராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். ஆகையால் அவர் பாரத ரத்னா விருதுக்கு தகுதி பெற்றவர்’’ என்றார்.

திருச்சி சிவா எம்.பி, ‘‘வாஜ்பாய் எல்லோரோடும் இணக்கமாகப் பழகக்கூடியவர். அவர் பாரத ரத்னா விருது பெற தகுதி வாய்ந்தவர். அவரைப் போன்ற தலைவர் கருணாநிதி உள்பட பலர் பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை மத்திய அரசின் கவனத்துக்குக்கொண்டு செல்கிறேன்’’என்று சொல்லியிருக் கிறார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் சுதர்சன நாச்சியப்பன், ‘‘பாரத ரத்னா விருது வழங்குவதற்கு அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எதிர்க் கட்சியில் ஓர் உறுப்பினராக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். எல்லா கட்சிகளுடனும் அனுசரணையாக நடந்துகொண்டதற்கு உதாரணமாகத் திகழ்பவர்’’ என்றார்.

தாமதமானாலும் தனது தகுதிக்கான பெருமையை பெற்றுவிட்டார் வாஜ்பாய்!


- ஜெ.பிரகாஷ்

கிராமங்களைத் தத்தெடுக்கும் தமிழக எம்.பி.க்கள்!

(இந்தக் கட்டுரை 17-11-14 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


வாரிசு இல்லாத தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பது போன்று வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களை ஒவ்வொரு எம்.பி.க்களும் தத்தெடுத்து அதன் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதே ‘ஆதர்ஷ் கிராம யோஜனா.’
இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு எம்.பி.க்களும் ஒவ்வொரு கிராமத்ததைத் தத்து எடுத்து வருகின்றனர்.

வடமாநிலங்களில்கூட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, இவர்களது குடும்ப நண்பர் கேப்டன் சதீஷ் சர்மா ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களைத் தத்தெடுத்து உள்ளனர்.

கடந்த ஆண்டு வரை கிரிக்கெட்டை மட்டும் தத்தெடுத்திருந்த ‘இந்திய கிரிக்கெட்டின் சகாப்தமும்,’ எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர், ஆந்திராவில் உள்ள புட்டம் ராஜூவாரி கிராமத்தைத் தத்தெடுத்து அங்கு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி வருகிறார்.

இந்தத் திட்டம் பற்றி விரிவாக விளக்கம் கேட்பதற்கு நம் தமிழக எம்.பி.க்களைத் தொடர்பு கொண்டோம். அதிலும் குறிப்பாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனிடம் பேசுவதற்கு தொடர்ந்து முயற்சித்தோம். அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அதேபோல் சில அ.தி.மு.க எம்.பி.க்களும் நமது அழைப்புகளை ஏற்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து நம்மிடம் மனம்திறந்து பேசிய திருச்சி எம்.பி பி. குமார், "இந்தத் திட்டம் பற்றி 37 பக்கங்கள் கொண்ட குறிப்பேடு கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஃபிளைட்டில் வரும்போதே படித்து முடித்துவிட்டேன். நான் அம்மாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தாயனூர் கிராமத்தைத் தடுத்தெடுத்துள்ளேன். எம்.பி மாடல் வில்லேஜ்’ என்பது பொதுவாக 3,000 முதல் 5,000 வரை மக்கள் இருக்க வேண்டும். 5,000க்கும் மேல் இருக்கலாம். ஆனால் நகராட்சியாக இருக்கக் கூடாது. அனைத்து சமுதாயத்தினரும் நிறைந்த, வளர்ச்சியில் பின்தங்கிய கிராமமாக இருக்கவேண்டும்.

இதுபற்றி பெர்சனல், ஹூமன், சோசியல், பொருளாதாரம், சுற்றுப்புறச்சூழல், என 5 டெவலப்மென்ட்கள் உள்ளன. தனிமனித சுத்தம், மருத்துவம், கல்வி, இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப், கிராம வளர்ச்சி நற்பணி மன்றம், பேங்க், ஏ.டி.எம், நூலகம், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் இன்சூரன்ஸ், ரேஷன் கடை, மார்க்கெட், சுயநிதிக் குழுக்கள், சுயதொழில் பயிற்சி மையங்கள், தூய்மை முதலியன மேற்சொன்ன ஐந்து டெவலப்மென்ட்களில் அடங்கும். இவையனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததே முன்மாதிரி கிராமம் ஆகும். இதற்காக அனைத்துக்கும் மத்திய அரசு பல வகைகளில் நிதி உதவி செய்கிறது. பற்றாக்குறைக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்தும், சில அமைப்புகளிடமிருந்தும் நிதி பெற்றும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளைச் செய்யலாம்" என்றார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் எம்.பி தரப்பில், "எல்லோரும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நாங்கள் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தொகுதி மோட்டாங்குறிச்சி கிராமத்தைத் தத்தெடுத்துள்ளோம். ஆனால், இன்னும் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எம்.பி.க்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு செய்தால் வளர்ச்சிப் பணிகளை ஆரம்பிப்போம்’’ என்று கூறப்பட்டது.

மத்திய சென்னை எம்.பி.யான எஸ்.ஆர்.விஜயகுமார், "சுமார் 3,000 முதல் 5,000 வரை மக்கள் கொண்ட வெளியூரில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைத் தத்தெடுக்க விரும்புகிறேன். இதில் 3 கிராமங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அதில் ஒரு கிராமத்தை வரும் 17ஆம் தேதி தத்தெடுக்க உள்ளேன். தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்’’ என்றார்.

சேலம் எம்.பி பன்னீர்செல்வம், "நங்கவள்ளி ஒன்றியம் சவுரிப்பாளையம் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். வளர்ச்சிப் இந்தக் கிராமத்தில் முடிந்துள்ள வளர்ச்சிப் பணிகள் என்னென்ன, செய்யப்போகும் வளர்ச்சிப் பணிகள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலாகப் போட்டு தயாராகக் கொடுப்போம். நிதி ஒதுக்கீட்டுக்குத் தக்கப்படி பணிகளை ஆரம்பிப்போம்” என்றார்.

அ.தி.மு.க எம்.பி.க்களான திருப்பூர் வி.சத்யபாமா பாரியூரையும் பெரம்பலூர் ஆர்.பி.மருதராஜா திருவாச்சூரையும் மதுரை ஆர்.கோபாலகிருஷ்ணன் செட்டிக்குளத்தையும் சிவகங்கை பி.ஆர்.செந்தில்நாதன் திருமணவயலையும் தேனி ஆர்.பார்த்திபன் ராசிங்காபுரத்தையும் விருதுநகர் எம்.ராதாகிருஷ்ணன் தேவர்குளத்தையும் சிதம்பரம் எம்.சந்திரகாசி கீழக்களூரையும் தஞ்சை கே.பரசுராமன் ஒட்டங்காட்டையும் தூத்துக்குடி ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நடரேஜ் நாகலாபுரத்தையும் தத்தெடுத்து உள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முத்தலக்குறிச்சியையும் தி.மு.க எம்.பி.யான கனிமொழி தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமத்தையும் தத்தெடுத்து உள்ளனர்.

இன்னும் சில அ.தி.மு.க எம்.பி.க்கள், "நாங்கள் இன்னும் கிராமங்களைத் தத்தெடுக்கவில்லை. கண்டிப்பாக தத்தெடுத்தப் பிறகு உங்களிடம் கூறுகிறோம்’’ என்று சிம்பிளாக முடித்துக்கொண்டனர்.

எப்படியோ கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளில் எம்.பி.க்களின் பங்கு இருந்தால் சரிதான்!

-ஜெ.பிரகாஷ்

Thursday, March 3, 2016

கேள்வி?

'பூ' கதம்பம் நீயடி...
என் காதலைப்
புரிந்துகொள்ளாமல்
பூகம்பம் ஆக்கியது ஏனடி?

முரண்

உள்ளத்தைக் கவர்ந்த
தாவணி
மறைந்துவிட்டது...

உடலைக் காட்டும்
நவீன உடை
வளரத் தொடங்கிவிட்டது!

தேர்தல் நேரம்...

'இலவசக் கல்வி தருவோம்' 
என்கிறார் ஒருவர்...

'வேலைக்கு உத்தரவாதம்'
என்கிறார் வேறொருவர்...

'வீட்டுக்குத் தேவையான
அனைத்தையும் தருவோம்'
என்கிறார் இன்னொருவர்...

இப்படித்தான் ஒவ்வொரு
வேட்பாளர்களும் 
நிறைவேறாத வாக்குறுதிகளை
அள்ளி வீசுகின்றனர்...
தேர்தல் நேரத்தில் மட்டும்!

Tuesday, March 1, 2016

வாக்காளனே எழுந்து வா...

வாக்காளனே எழுந்து வா...

வருங்கால தமிழகத்தை
ஆளப்போகும் மனிதரைத்
தேர்ந்தெடுக்கும் உரிமை
உனக்கும் இருக்கிறது!

அதை - உன் ஒற்றை விரலால்
உறுதி செய்...

உன்னாலும் ஒரு தலைவரை
உருவாக்க முடியும் என்பதை
உலகுக்குப் பதிவு செய்!

வாக்காளனே எழுந்து வா...