Thursday, March 17, 2016

யோகாவை ஆதரிக்கும் மோடி!


(இந்தக் கட்டுரை 29-01-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)
ப்படியோ நம் பிரதமர் மோடி, இந்தியாவை ஒரு வழிக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறார்போலும். ஆம், 'தூய்மை இந்தியா' மூலம் இந்தியாவைத் தூய்மைப்படுத்தி வரும் மோடி, தற்போது 'யோகா' மூலம் அனைவரையும் யோகிகளாக்க முயற்சித்துள்ளார்.


உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறியே யோகா. இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் இந்தக் கலை, உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கும், சமன்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற கலை. யோகா ஒரு வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் இந்தக் கலையை முன்னிறுத்தி ஐ.நா. சபை, ஜூன் மாதம் 21ஆம் தேதியை 'சர்வதேச யோகா தினமாக' அறிவித்து உள்ளது.

இந்நிலையில், யோகாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதுகுறித்து கடந்த 28ஆம் தேதி தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் பரிசு வழங்கி பேசிய அவர், "இது நமக்கெல்லாம் குறிப்பாக யோகாவை புரிந்துகொண்டவர்களுக்கும், செய்து வருபவர்களுக்கும் பெருமை ஆகும். யோகாவுக்கு மொழியோ, வயதோ, எல்லையோ கிடையாது. இந்தியாவில் பிறந்த யோகா, இன்று உலகளாவிய பண்பாக மாறிவிட்டது. அந்த வகையில் சரியான யோகாவை உலகுக்கு அறிமுகப்படுத்துவது இந்தியாவின் மிகச்சிறந்த கடமையாகும்.

ஜூன் 21ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நீங்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய உலக சாதனை படைக்க வேண்டும். இதற்கான திட்டத்தை இப்போதே தொடங்கினால், யோகா குறித்த சிறந்த செய்தியை அந்த சாதனை மூலம் உலகுக்கு அளிக்க முடியும். எனவே இதற்காக இப்போதே திட்டமிட வேண்டும்" என்று தேசிய மாணவர் படையின் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.

எப்படியோ நன்மை ஏற்பட்டால் சரிதான்!

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment