Thursday, March 17, 2016

கிராமங்களைத் தத்தெடுக்கும் தமிழக எம்.பி.க்கள்!

(இந்தக் கட்டுரை 17-11-14 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


வாரிசு இல்லாத தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுப்பது போன்று வளர்ச்சியில் பின்தங்கிய கிராமங்களை ஒவ்வொரு எம்.பி.க்களும் தத்தெடுத்து அதன் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதே ‘ஆதர்ஷ் கிராம யோஜனா.’
இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு எம்.பி.க்களும் ஒவ்வொரு கிராமத்ததைத் தத்து எடுத்து வருகின்றனர்.

வடமாநிலங்களில்கூட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, இவர்களது குடும்ப நண்பர் கேப்டன் சதீஷ் சர்மா ஆகியோர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களைத் தத்தெடுத்து உள்ளனர்.

கடந்த ஆண்டு வரை கிரிக்கெட்டை மட்டும் தத்தெடுத்திருந்த ‘இந்திய கிரிக்கெட்டின் சகாப்தமும்,’ எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர், ஆந்திராவில் உள்ள புட்டம் ராஜூவாரி கிராமத்தைத் தத்தெடுத்து அங்கு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி வருகிறார்.

இந்தத் திட்டம் பற்றி விரிவாக விளக்கம் கேட்பதற்கு நம் தமிழக எம்.பி.க்களைத் தொடர்பு கொண்டோம். அதிலும் குறிப்பாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனிடம் பேசுவதற்கு தொடர்ந்து முயற்சித்தோம். அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அதேபோல் சில அ.தி.மு.க எம்.பி.க்களும் நமது அழைப்புகளை ஏற்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து நம்மிடம் மனம்திறந்து பேசிய திருச்சி எம்.பி பி. குமார், "இந்தத் திட்டம் பற்றி 37 பக்கங்கள் கொண்ட குறிப்பேடு கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஃபிளைட்டில் வரும்போதே படித்து முடித்துவிட்டேன். நான் அம்மாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தாயனூர் கிராமத்தைத் தடுத்தெடுத்துள்ளேன். எம்.பி மாடல் வில்லேஜ்’ என்பது பொதுவாக 3,000 முதல் 5,000 வரை மக்கள் இருக்க வேண்டும். 5,000க்கும் மேல் இருக்கலாம். ஆனால் நகராட்சியாக இருக்கக் கூடாது. அனைத்து சமுதாயத்தினரும் நிறைந்த, வளர்ச்சியில் பின்தங்கிய கிராமமாக இருக்கவேண்டும்.

இதுபற்றி பெர்சனல், ஹூமன், சோசியல், பொருளாதாரம், சுற்றுப்புறச்சூழல், என 5 டெவலப்மென்ட்கள் உள்ளன. தனிமனித சுத்தம், மருத்துவம், கல்வி, இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப், கிராம வளர்ச்சி நற்பணி மன்றம், பேங்க், ஏ.டி.எம், நூலகம், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் இன்சூரன்ஸ், ரேஷன் கடை, மார்க்கெட், சுயநிதிக் குழுக்கள், சுயதொழில் பயிற்சி மையங்கள், தூய்மை முதலியன மேற்சொன்ன ஐந்து டெவலப்மென்ட்களில் அடங்கும். இவையனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததே முன்மாதிரி கிராமம் ஆகும். இதற்காக அனைத்துக்கும் மத்திய அரசு பல வகைகளில் நிதி உதவி செய்கிறது. பற்றாக்குறைக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்தும், சில அமைப்புகளிடமிருந்தும் நிதி பெற்றும் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகளைச் செய்யலாம்" என்றார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் எம்.பி தரப்பில், "எல்லோரும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதனால் நாங்கள் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி தொகுதி மோட்டாங்குறிச்சி கிராமத்தைத் தத்தெடுத்துள்ளோம். ஆனால், இன்னும் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எம்.பி.க்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. நிதி ஒதுக்கீடு செய்தால் வளர்ச்சிப் பணிகளை ஆரம்பிப்போம்’’ என்று கூறப்பட்டது.

மத்திய சென்னை எம்.பி.யான எஸ்.ஆர்.விஜயகுமார், "சுமார் 3,000 முதல் 5,000 வரை மக்கள் கொண்ட வெளியூரில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைத் தத்தெடுக்க விரும்புகிறேன். இதில் 3 கிராமங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அதில் ஒரு கிராமத்தை வரும் 17ஆம் தேதி தத்தெடுக்க உள்ளேன். தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்’’ என்றார்.

சேலம் எம்.பி பன்னீர்செல்வம், "நங்கவள்ளி ஒன்றியம் சவுரிப்பாளையம் கிராமத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளேன். வளர்ச்சிப் இந்தக் கிராமத்தில் முடிந்துள்ள வளர்ச்சிப் பணிகள் என்னென்ன, செய்யப்போகும் வளர்ச்சிப் பணிகள் என்னென்ன என்பதை ஒரு பட்டியலாகப் போட்டு தயாராகக் கொடுப்போம். நிதி ஒதுக்கீட்டுக்குத் தக்கப்படி பணிகளை ஆரம்பிப்போம்” என்றார்.

அ.தி.மு.க எம்.பி.க்களான திருப்பூர் வி.சத்யபாமா பாரியூரையும் பெரம்பலூர் ஆர்.பி.மருதராஜா திருவாச்சூரையும் மதுரை ஆர்.கோபாலகிருஷ்ணன் செட்டிக்குளத்தையும் சிவகங்கை பி.ஆர்.செந்தில்நாதன் திருமணவயலையும் தேனி ஆர்.பார்த்திபன் ராசிங்காபுரத்தையும் விருதுநகர் எம்.ராதாகிருஷ்ணன் தேவர்குளத்தையும் சிதம்பரம் எம்.சந்திரகாசி கீழக்களூரையும் தஞ்சை கே.பரசுராமன் ஒட்டங்காட்டையும் தூத்துக்குடி ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நடரேஜ் நாகலாபுரத்தையும் தத்தெடுத்து உள்ளனர். மேலும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முத்தலக்குறிச்சியையும் தி.மு.க எம்.பி.யான கனிமொழி தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமத்தையும் தத்தெடுத்து உள்ளனர்.

இன்னும் சில அ.தி.மு.க எம்.பி.க்கள், "நாங்கள் இன்னும் கிராமங்களைத் தத்தெடுக்கவில்லை. கண்டிப்பாக தத்தெடுத்தப் பிறகு உங்களிடம் கூறுகிறோம்’’ என்று சிம்பிளாக முடித்துக்கொண்டனர்.

எப்படியோ கிராமங்களின் வளர்ச்சிப் பணிகளில் எம்.பி.க்களின் பங்கு இருந்தால் சரிதான்!

-ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment