Wednesday, February 17, 2016

குறளுக்குப் பொருள் தரும் குறுங்கவிதைகள்-4

61.அறிவார்ந்த பிள்ளைகளைப்
பெறுவதைத் தவிர,
வேறு எதுவும் இல்லை.
------------------------------------------------

62.பழிச்சொல் படாத
நற்பிள்ளைகளைப் பெற்றால்
எழுபிறப்பும் தீவினை சேராது!
------------------------------------------------

63.தம்பொருள் என்பது தம்மக்கள்...
அவர்பொருள் என்பது அவரவர்
வினையின் செயல்கள்
-----------------------------------------------------

64.தம் பிள்ளைகள் பிஞ்சுக்கையால்
பிசையப்பட்ட உணவு
பெற்றோருக்கு அமிழ்து!
---------------------------------------------------------

65. தம் குழந்தையின் மெய்தீண்டல்
உடலுக்கு இன்பம் - அக்குழந்தையின்
சொல் கேட்பது செவிக்கு இன்பம்!
--------------------------------------------------------

66. தம் குழந்தையின்
சொல் கேளாதவர்
குழல், யாழ் இனிது என்பர்!
--------------------------------------------

67.கற்றவர் அவையில் தன் மகனை
முதன்மைப் பெறச் செய்வதே
தந்தையின் கடமை!
--------------------------------------------------------

68.தம்மைவிட பிள்ளைகள் அறிவில்
சிறந்து விளங்கினால் - அது
பெற்றோரைவிட மற்றவர்க்கே மகிழ்ச்சி!
-----------------------------------------------------------------
69.மகப்பேறு காலத்து மகிழ்ச்சியைவிட
தன் மகன் பிறரால் சான்றோன் எனக்
கேட்பதே பெற்ற தாய்க்கு மகிழ்ச்சி!
---------------------------------------------------------

70. --------------------------------------------
------------------------------------------------
----------------------------------------------------

71.அன்பைத் தாழிட முடியாதபோதும்
அன்பானவரின் துன்பம்
கண்ணீரில் தெரிந்துவிடும்!
--------------------------------------------------------

72. அன்புடையோர் 
எல்லாவற்றையும் துறப்பர்...
இல்லாதோர் ஆசைகொள்வர்!
-----------------------------------------------

73. உயிர், உடல் இணையைப்போல்
அன்பும் செயலும் இருப்பதே
அழகிய பொருத்தம்!
------------------------------------------------------

74.அன்பானது பிறரிடம் 
நல்ல பற்றைத் தரும் - அதுவே 
நட்பைச் சிறப்பாக்கும்!
---------------------------------------------------

75.உலகத்தில் இன்பத்துடன்
வாழ்கிறவர் பெறும் சிறப்பு
அன்பு பொருந்திய பயனாகும்!
-------------------------------------------------

76.அறத்துக்கு மட்டுமே அன்பு
துணையாகும் என அறிந்தோர்
வீரத்துக்கு ஆகாது என்பர்!
------------------------------------------------

77. எலும்பில்லாத புழுவை 
வெயில் வருத்தும் - அதுபோல
அன்பில்லாதவரை அறம் கொல்லும்!
------------------------------------------------------------

78.மனதில் அன்பு இல்லாதவர்
வாழ்க்கை பாலைவனத்தில்
துளிர்க்காத மரமாகும்!
-----------------------------------------------

79.அன்பில்லாத அகத்துறுப்பு
உடையோருக்கு புறத்துறுப்பு
அழகாய் இருந்து என்ன பயன்?
-------------------------------------------------

80.அன்பினால் இயங்குவதே
உயிருடல் - அது இல்லையேல் 
எலும்பு தோல் போர்த்திய வெற்றுடல்!
-------------------------------------------------------------------

Saturday, February 13, 2016

குறளுக்குப் பொருள் தரும் குறுங்கவிதைகள்-3

41.பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கு
நல்வழியில் துணை நிற்பவனே
இல்வாழ்வான் ஆவான்!
-----------------------------------------------------------

42.துறவிக்கும், வறியவர்க்கும்,
வழியில்லாதவர்க்கும் 
இல்வாழ்வான் துணையாவான்!
--------------------------------------------------

43.தென்புலத்தார் முதல் தான் வரை
ஐவருக்கும் அறத்தைத் தவறாமல் 
செய்வது சிறப்பு!
------------------------------------------------------------

44.பழிக்கு அஞ்சி தேடிய பொருளை
உறவோடு உட்கொண்டால்
அவ்வாழ்க்கை ஒருநாளும் அழியாது!
------------------------------------------------------------

45.அன்புடனும், அறத்துடனும் 
இல்வாழ்க்கை விளங்குமானால்
பண்பும், பயனும் அதுவே!
---------------------------------------------------

46. அறநெறியில் இல்லறத்தை
 நடத்திப் பெற்றிடும் பலனை
வேறுநெறியில் பெற இயலுமோ?
------------------------------------------------------

47.  அறநெறியில் இல்வாழ்க்கை
வாழ முயல்பவன்
பலவற்றுக்கும் முதன்மையானவன்!
----------------------------------------------------------

48.அறவழியில் தன்னையும், பிறரையும்
கொண்டுசெல்பவரின் இல்வாழ்க்கை
துறவியின் தவத்தைவிட வலிமையானது!
------------------------------------------------------------------

49.அறமாகிய இல்வாழ்க்கையில்
பிறரின் பழிச்சொல் இடம்பெறாமல்
இருந்தால் நன்று!
----------------------------------------------------------

50.அகில அறநெறிகளைப் 
பின்பற்றி வாழ்பவன்
ஆகாயத்தில் தெய்வமாக மதிக்கப்படுவான்!
----------------------------------------------------------------------

51.இல்வாழ்க்கை குணங்களுடன்
தன் கணவனுடன் வாழ்பவளே
சிறந்த வாழ்க்கைத் துணை!
-------------------------------------------------------

52.இல்வாழ்க்கையில் நற்பண்பில்லா
மனைவி இல்லாவிட்டால் - அவன்
வேறு எச்சிறப்பும் பெற்றும் பயனில்லை!
-----------------------------------------------------------------

53. நற்பண்புடைய மனைவியால் - அவன்
வாழ்க்கையில் இல்லாதது என்ன?
அமையாவிட்டாலும் இருப்பது என்ன?
----------------------------------------------------------------

54.கற்பென்னும் மன உறுதி 
பெண்ணிடம் இருக்குமானால்
அதைவிட பெருமை வேறு எது?
---------------------------------------------------

55.பிறர் தெய்வம் தொழாது - கணவனையே 
தொழுது வாழும் இல்லாள்
பெய் என்றால் மழையும் பெய்யும்!
---------------------------------------------------------------------

56.தன்னையும் தன் கணவனையும்
கற்புநெறியுடன் காப்பாற்றி - தகுதிவாய்ந்த 
புகழுடன் இருப்பவளே மனைவி!
--------------------------------------------------------------------

57.நற்குணமுடைய பெண்ணைச் 
சிறைவைத்துக் காப்பதில் பயனில்லை...
தம்மைத்தாமே காப்பதுதான் சிறப்பு!
----------------------------------------------------------------

58.கணவனை மதித்து 
கடமையைச் செய்யும் மகளிர் 
தேவர் உலகத்தில் சிறப்புப் பெறுவர்!
-----------------------------------------------------------

59.புகழை விரும்பும் மனைவியைப் 
பெறாதவர் இகழ்ந்துபேசும் 
எதிரியிடம் சிங்கநடையைக் காட்டுவதில்லை!
----------------------------------------------------------------------------

60.நற்பண்பு பெற்ற இல்லாளே
இல்வாழ்க்கையின் சிறப்பு - அதைவிட
கூடுதல் சிறப்புப் பிள்ளைகள் பெறுவது!
--------------------------------------------------------------------

குறளுக்குப் பொருள் தரும் குறுங்கவிதைகள் - 2

21.ஒழுக்கத்தில் நிலைத்து
நிற்பவர்களின் பெருமையைச்
சொல்வது நூல்களின் துணிவு!
-------------------------------------------------

22.ஆசைகளைத் துறந்தவர்களின்
பெருமைகளை அளந்துகூறுவது
பிறப்பு இறப்புகளைக் கணக்கிடுவதாகும்!
------------------------------------------------------------------

23.இரு மைகளை ஆய்ந்தறிந்து
நன்மைகளை மட்டும் செய்பவர்களே
பெருமை காண்பவர்கள்!
----------------------------------------------------------

24.அறிவினால் ஐம்பொறிகளை
அடக்கி ஆள்பவன்
துறவறத்துக்கு விதையானவன்!
-------------------------------------------------------

25.ஐம்புலனால் பெருகும் ஆசைகளை
அகற்றிய வலிமையானவனுக்கு
இந்திரனே சாட்சி!
-----------------------------------------------------------

26.பிறர் செய்யமுடியாத செயல்களைச்
செய்பவர் பெரியோர்....
செய்யாதவர் சிறியோர்!
-------------------------------------------------------------

27.ஐவகை ஆசைகளை
அடக்கி ஆள்பவனுக்கே
இவ்வுலகம் ஆட்படும்!
-------------------------------------

28.அறிஞர்களின் பெருமைகளை
அகிலத்தில் அழியாது காக்கும் 
மறைநூல்களே அடையாளம் காட்டும்!
------------------------------------------------------------

29. நற்குணம் கொண்ட பெரியோர்க்கு
கோபம் வந்தாலும் - அது
கணப்பொழுதும் நிற்காது!
-----------------------------------------------------------

30.உயிர்கள் அனைத்திடமும்
கருணை கொண்டு வாழும்
அறவோரே அந்தணர்!
--------------------------------------------

31.செல்வத்தையும், புகழையும்
உயிர்களுக்குத் தரும் 
அறத்துக்கு இணையானது எது?
--------------------------------------------------

32.அறம் செய்வதைவிட
நன்மையும் இல்லை - அதை
மறப்பதைவிட கெட்டதும் இல்லை!
--------------------------------------------------------

33. செய்யும் செயல்களை
அறவழியில் தடையில்லாமல் 
செய்யவேண்டும்!
--------------------------------------------------

34.குற்றமில்லாத நெஞ்சே 
அறம்....
மற்றவை ஆரவாரம்!
--------------------------------------------

35.பொறாமை, ஆசை, சினம்,
தீச்சொல் இவையனைத்தும்
அறத்துக்கு ஏற்றதல்ல!
-------------------------------------------

36.பின்னர் செய்யலாம் என்றில்லாமல்
அறம் செய்தால் அழியும் உயிர்க்கு
அதுவே துணையாகும்!
-------------------------------------------------------------

37. பல்லக்கைச் சுமப்பவனும்
அதில் பயணிப்பவனும்
அறத்தைப் பற்றித் தெரிந்தவர்களே!
----------------------------------------------------------

38.அறம் செய்ய தவறிய நாள்  என்றில்லாமல் 
ஒருவன் தொடர்ந்து செய்வானானால்
அதுவே அவன் பிறவியை அடைக்கும் கல்!
------------------------------------------------------------------------
39.அறவழியில் வருவதே இன்பம்
மற்றவை இன்பமும் ஆகாது...
புகழையும் தராது!
-------------------------------------------------------
40.வாழ்நாள் முழுவதும் ஒருவன்
செய்வதே அறம்
செய்யத் தவிர்ப்பது பழி!
----------------------------------------------------

Friday, February 12, 2016

குறளுக்குப் பொருள் தரும் குறுங்கவிதைகள் -1

1. முதன்மை...
எழுத்துக்கு அகரம்
உலகத்துக்கு கடவுள்!
---------------------------------

2. தூய அறிவு வடிவானவரைத்
தொழாதவர்
நிறையக் கற்றும் பயனில்லாதவர்!
-------------------------------------------------

3. மலர்மீது அமர்ந்திருக்கும்
இறைவனை நினைப்பவர் 
மண்ணில் நீடித்திருப்பர்!
------------------------------------------

4. விருப்பு, வெறுப்பின்றி வாழ்பவரைப் 
பின்பற்றிச் செல்வோருக்குத் 
துன்பம் இல்லை!
----------------------------------------------------------

5.இறைவனின் மெய்ப்புகழை நேசிப்பவரிடம் 
அறியாமையால் உருவாகும் 
இருவினை சேர்வதில்லை!
--------------------------------------------------------------------

6.ஐம்பொறி ஆசைகளை அகற்றி 
இறைவனின் ஒழுக்கநெறியில்
நிற்பவர் நல்வாழ்க்கை பெறுவர்!
----------------------------------------------------

7.இறைவனைத் தொழாத
மற்றவர்களுக்கு
மனக்கவலை தீருவது கடினம்!
-------------------------------------------------

8. இறைவனைத் தொழாதவர்
இன்ப, பொருள் கடல்களைக்
கடக்க முடியாது!
---------------------------------------------

9. ஐம்பொறி உடைய இறைவனை
வணங்காதவர் எவரும்
ஐம்பொறி செயலற்றவர்!
--------------------------------------------------

10.இறைவனைத் தொழுதவர்
பிறவிக்கடலை நீந்துவார்...
வணங்காதவர் நீந்தமாட்டார்!
-------------------------------------------------

11.உலகத்தை வாழவைப்பதால்
அமிழ்தமாகிறது...
மழை!
---------------------------------------------

12.உணவுப்பொருட்களை விளைவிப்பதோடு
உண்பவர்க்கு உணவாக இருக்கிறது
மழை!
-----------------------------------------------------------------

13.கடல் சூழ்ந்த உலகத்தில்
மழை பொய்த்துவிட்டால்
உயிர்களைப் பசி வருத்தும்!
--------------------------------------------

14.மழை என்னும் 
வருமானம் இல்லாவிட்டால்
மங்கிவிடும் உழவுத்தொழில்!
-----------------------------------------------
15. மக்களைப் பெய்யாமல் கெடுத்தும்
பெய்தும் திருத்துகின்றது...
மழை!
-----------------------------------------------------------

16. வானிலிருந்து மழைநீர்
மண்ணில் விழாவிட்டால்
பசும்புல் முளைப்பது அரிது!
-------------------------------------------

17.மழை பெய்யாவிட்டால்
பெருங்கடல்கூட
வற்றிப்போகும்!
-----------------------------------------

18. மழை பொய்த்துவிட்டால்
தெய்வத்துக்கு வழிபாடும்
திருவிழாவும் நடக்காது!
--------------------------------------------

19.மழை பெய்யாவிட்டால்
பிறர்பொருட்டு தானமும் இல்லை...
தம்பொருட்டு தவமும் இல்லை!
----------------------------------------------------------

20. எத்தனை பெரிய மனிதரும்
நீரில்லாமல் வாழமுடியாது...
அந்நீரே மழையே ஆகும்!
------------------------------------------------

Monday, February 8, 2016

அம்மா!

அழும் 
குழந்தைக்காகவும்
அணைக்கும் 
கணவனுக்காகவும்
அடிக்கடி
தூக்கத்தைத் 
தொலைக்கிறாள்...
அம்மா!

Saturday, February 6, 2016

அம்மா!

ஆயிரம் சொல்லும்
உறவுகள்...
ஆனால், 
உண்மையை மட்டும்
சொல்வாள்...
அம்மா!

மதிப்பெண்

மாணவன் எழுதிய
விடைத்தாளுக்கு
டீச்சர் 
மதிப்பெண் போட்டார்...
மாணவனோ,
டீச்சருக்கே
மதிப்பெண் போட்டான்!

டீச்சர்!

ஒழுங்காகப் 
படிக்கவில்லை என்று
ஆறாம் வகுப்பு மாணவனை
ஃபெயிலாக்கிய டீச்சர்,
ஆசிரியர் தகுதித் தேர்வில்
ஆறாவது முறை
தேர்வெழுதி
தேர்ச்சிப் பெற்றவர்!

Friday, February 5, 2016

கணக்கில்லா நோய்கள்!

அன்று முதல் இன்றுவரை
அதே புல்லைத் 
தின்னும் வளரும்
ஆட்டு, மாட்டுக்குக்கூட
ஆரோக்யத்தில் என்றும்
குறைவில்லை...
ஆனால், 
கண்டதையும் 
தின்று உறங்கும்
மனிதனுக்குத்தான்
கணக்கில்லா நோய்கள்!

பலம்

ஆட்டுக்கல், 
அம்மிக்கல்லில்
அரைத்து உணவு சாப்பிட்ட
என் பாட்டிக்கு 
இன்னும்
கை மட்டுமல்ல...
உடலும் பலமாகத்தான்
இருக்கிறது!