Sunday, May 8, 2016

குற்றவுணர்ச்சி

மே 11 முதல்வர் ஜெ.-வுக்கு கர்நாடக நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பு வரும் என்பதால், பரபரப்பான சூழ்நிலையில் அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருந்தபோது கடந்த மாதம் இதே நாள் (மே 8, 2015) இரவு மணி எட்டு. என் அன்னையிடமிருந்து போன். உடல்நிலை மிக மோசமாக இருந்தபோதும் உளறல் இல்லாத குரல். ‘‘தம்பி... அம்மாவுக்கு ரொம்ப முடியலை. உன்னைப் பார்க்கணும்... நிறையப் பேசணும். எப்பப்பா ஊருக்கு வர்றே?’’ என்றார். ‘‘இன்னும் ரெண்டு நாள்ல வந்திடுறேன் அம்மா... உடம்பை பத்திரமா பார்த்துக்கோங்க’’ என்றேன் நான். என் அன்னையின் உடல்நிலையைப் பற்றி அன்று பொறுப்பில் இருந்த ராஜா சாரிடம் சொல்லி லீவு வாங்கிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டேன். மே 10, காலை 6.30 மணி. வீட்டை நெருங்க இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. அதற்குள் என் தந்தையிடமிருந்து போன். ‘‘டேய்... பதற்றப்படாமல் வாடா’’ என்று. எனக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அப்பாவிடம் போனில் விஷயத்தைக் கேட்டேன். ‘‘எல்லாம் முடிந்துவிட்டது’’ என்றார். அடுத்த நொடி, என் இதயம் சுக்குநூறாய் உடைந்துவிட்டது. வார்த்தைகள் வரவில்லை. மூக்குச்சளியும், கண்ணீரும் கலந்த மழையில் கரைந்துகொண்டிருந்தேன் வீடு செல்லும்வரை. அது இன்றும் தொடர்கிறது. ஓர் அன்னை இல்லாத ஒரு வீடு, எப்படி இருக்கும் என்பதையும், ஒரு மனிதன் எப்படி இருப்பான் என்பதையும் கடந்த ஒரு வருட காலமாக உணர்வுபூர்வமாகத் தெரிந்துகொண்டிருக்கிறேன். கடைசிவரை எனக்காகக் காத்திருந்த என் அன்னையிடம், என் முகத்தைக் காட்டவில்லை என்கிற குற்றவுணர்ச்சிதான் என்னைத் தினமும் கொன்று கொண்டிருக்கிறது. அந்த உணர்ச்சியின் வெளிப்பாடுதான் என் அன்னையைப்பற்றி இன்றைய அன்னையர் தினத்தில் எழுதியிருக்கும் வரிகள்.