Monday, April 16, 2018

‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! அத்தியாயம் - 1 - 13

உலகத்தை உலுக்கிய சம்பவங்களுள் சிறுமி ஹாசினியின் சம்பவமும் ஒன்று. அந்தச் சிறுமி, தஷ்வந்த் என்பவனால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, எரித்து கொல்லவும்பட்டாள். அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்த இந்தச் சம்பவத்தைவைத்து, விகடனில் ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதினேன். 07-03-2018 அன்று ஆரம்பித்த இந்தத் தொடர், 13 (16-04-2018) அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. சிறுமியின் பெற்றோரிடமும், அவள் வழக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து எழுதிய இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். 

நன்றி: விகடன்.


“குழந்தைகள் வீட்டுக்கு ஒளியூட்டுகிறார்கள்!” - அத்தியாயம் - 1 

“குழந்தைகள் வீட்டுக்கு ஒளியூட்டுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் வெளிச்சத்தை அணைத்து விடுவதில்லை” என்பார் ரேல்பால் எனும் அறிஞர். ஆம், அவர் சொல்வது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மையே. குடும்பத்தில் மகிழ்ச்சியின் விருந்தாகவும், துன்பத்தின் மருந்தாகவும் இருப்பது குழந்தைகள் மட்டும்தான். அப்படிப்பட்ட குழந்தைகளைப் பார்ப்பவர்கள் தங்கள் கவலையை மறந்து அவர்களுடன் சந்தோஷத்தில் மூழ்கிவிடுகின்றனர். ஆனால், இப்படியெல்லாம் ஒரு குடும்பத்தில் வெளிச்சத்தைத் தருகிற அந்த விட்டில் பூச்சியையே அழித்துவிட்டால், உலகுக்கு எப்படி வெளிச்சம் கிடைக்கும்? 
உலகமெங்கும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கும் இந்தக் காலத்தில்தான், பாலியல் சீண்டல்களால் பெண் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்படும் சம்பவங்களும் நாள்தோறும் பெருகிக்கொண்டிருக்கின்றன என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இப்படியான பாலியல் சீண்டலுக்கு ஆளாகி, ஈவு இரக்கமற்ற இளைஞன் ஒருவனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டாள் ஏழுவயது சிறுமி. 
பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, கொல்லப்பட்ட அந்தச் சிறுமியின் பெயரைத்தான் கடந்த ஒருவருடக் காலமாக அனைவரும் உச்சரித்துக்கொண்டிருக்கின்றனர். ஏழு வயது நிரம்பிய இந்தச் சிறுமியுடன் அந்த இளைஞன் விளையாடிய விளையாட்டும், அவளைக் கொன்று புதைத்த செய்தியும்தான் ஊடகங்கள் வாயிலாக உலகத்துக்குத் தெரிவிக்கப்பட்டன. ஊடகத்தின் உந்துசக்தி, காவல் துறையின் பங்களிப்பு, வழக்கறிஞரின் வாதம், வழக்கை எடுத்து நடத்திய அமைப்பு, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடைசிவரை காத்திருந்த சிறுமியின் தந்தையின் தளராத மனம்... ஆகியவற்றால்தான் அந்த இளைஞன், இன்று தூக்குக் கயிற்றின்முன் நிறுத்தப்பட்டிருக்கிறான். 
“குழந்தைகளோடு விளையாடினால் போதும். நீங்கள் விரும்பியவாறு அவர்களை மாற்றியமைக்கலாம்” என்பார் மற்றோர் அறிஞர் பிஸ்மார்க். இதைப் புரிந்துகொள்ளாமல், அந்தச் சிறுமியிடம் அவன் வேறுவிதமாக விளையாடியதால்தான், தூக்குக் கயிறு அவனை அருகே அழைத்து வைத்திருக்கிறது. அதுவும் 46 வருடச் சிறைத்தண்டனையுடன். 
இன்றைய காலத்தில் திருமணமான பல பெண்களுக்கேகூட பாலியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லாதபோது பாவம், அந்தச் சிறுமிக்கு அதைப் பற்றி என்ன தெரியும்? பாலியல் சீண்டல்கள் குறித்தும், குழந்தைகளின் உறுப்புகள் குறித்தும் அவ்வப்போது பெற்றோரும், வீட்டில் உள்ள பெரியவர்களும் குழந்தைகளிடம் எடுத்துச் சொல்லத் தவறுவதாலும், குழந்தைகளின் மீது பொறுப்பு, அக்கறையின்றிப் பெற்றோர்கள் செயல்படுவதாலுமே இதுபோன்ற தவறுகள் ஏற்படுகின்றன எனப் பலரும் வாதங்களை முன்வைக்கின்றனர். 
அவர்கள் ஒருபுறம், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பிறவற்றின் வாயிலாகவும் தங்களுடைய கருத்துகளையும், அனுபவங்களையும் சொல்லிக்கொண்டிருந்தாலும் அதைச் சில பெற்றோர்கள் காதுகொடுத்துக் கேட்பதாக இல்லை என்பதுதான் நிதர்சனம். இதற்குக் காரணம், தங்கள் குழந்தைகளுக்காக இப்போதே சம்பாதிக்க வேண்டும் என்கிற உணர்வு அவர்களுக்குள் வந்துவிடுவதால், அதற்கான பயணத்தில் பெற்றோர் வேகம் காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். அதுபோன்ற செயல்பாடுகளின் விளைவுதான் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்குக் குழந்தைகள் பலியாக நேரிடுகிறது. இதுஒருபுறம் இருக்க, மறுபுறம் கல்வியறிவு, விழிப்புஉணர்வு இல்லாமலும் தங்களின் குழந்தைகளை இழக்கும் சூழ்நிலைக்கு ஒருசில பெற்றோர்கள் ஆளாக நேரிடுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கப் பெற்றோர்களுக்குக் கல்வியறிவும், விழிப்புஉணர்வும் இருப்பது அவசியம். அப்படியிருந்தால், இந்தச் சிறுமி மட்டுமல்ல குக்கிராமத்தில் இருக்கும் எந்தச் சிறுமியும் தனக்கு நேரும் துன்பத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பாள் என்பது நிஜம். 
இப்போது நம் சம்பவக் களத்திற்கு வருவோம். “தூக்கு தண்டனை விதிக்கப்பெற்றிருக்கும் அந்த இளைஞனால் பலிகடாவாக்கப்பட்ட சிறுமி யார்... அவளுடைய ஆசைகள் என்ன... அவள் தன் அம்மா அப்பாவிடம் சிறுமிக்கே உரித்தான குறும்புகளுடனும், செல்லத்துடனும் செய்த சேட்டைகள் என்ன... அவளுக்கு நேர்ந்த கொடுமை என்ன...” போன்ற அனைத்துக்கும் விடை தர இருக்கிறோம்... ஒரு தொடராக!

“என்னையும் அதுபோல் படிக்க வைப்பீர்களா?”  - அத்தியாயம் - 2

ருவோரை எல்லாம் வரவேற்று வாழவைக்கும் சிறப்புமிக்க பெருநகரமாம் சென்னையின் ஒருபகுதியாகத் திகழ்வது போரூர். இந்தப் பகுதியில் அடங்கிய மதனந்தபுரம் ஏரியாவில் உள்ளது மாதா தெரு. இங்குள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான், நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த அந்தச் சிறுமியும் வசித்து வந்தாள். 
ஆறு வீடுகளைக் கொண்ட அந்தக் குடியிருப்பின் ஒரு ஃபோர்ஷனில் ஶ்ரீனிவாஸ் பாபு தன் மனைவி ஶ்ரீதேவியுடனும், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடனும் குடியேறுகிறார். ஶ்ரீனிவாஸ் பாபுவுக்கு, சோழிங்கநல்லூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை; ஶ்ரீதேவி பள்ளி ஆசிரியை. இந்தத் தம்பதியின் மூத்த மகள்தான் ஹாசினி. அழகான அந்தப் பெயர்தான், கடந்த ஒருவருடக் காலத்தில் தமிழகம் முழுவதும் ஏன், இந்திய அளவிலும் எல்லோராலும் அதிகம் உச்சரிக்கப்பட்டிருக்கும் எனலாம். ஹாசினி என்ற பெயருக்குத் தமிழில் ‘புன்னகை புரிபவள்’, ‘பாராட்டப்படுபவள்’, ‘ஒளி பொருந்தியவள்’ என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. உண்மையிலேயே ஹாசினி, புன்னகையுடன் கூடிய குழந்தையாகத்தான் வலம் வந்திருக்கிறாள் நிறைய கனவுகளுடன். 
“கனவுகள் எல்லாம் நனவாகும்... நிறைய காயங்களுக்குப் பிறகு” என்றார் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். உண்மைதான். நிறைய கனவுகள், காயங்கள் மூலமாகத்தானே நிஜமாகியிருக்கின்றன. சாதாரணக் கனவு கண்டால் அது சாத்தியமானதாக இருக்காது; அந்தக் கனவு சத்தியமானதாக இருக்க வேண்டும். ஹாசினியின் கனவுகூட லட்சியம் நிறைந்ததாகத்தான் இருந்திருக்கிறது. அது, அவளின் நிஜமான கனவு என்றுகூடச் சொல்லலாம். 
ஹாசினி ஏதோ ஒரு காரணத்துக்காகத் தன் தாய்-தந்தையுடன் அருகிலிருக்கும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுப் போகிறாள். அங்கு வெள்ளை நிறச் சட்டையுடனும், கழுத்தில் ஸ்டெதஸ்கோப்புடனும் வலம்வரும் மருத்துவர்களைப் பார்க்கிறாள். அவர்களைப் பார்த்தவுடன் இவளுக்கும் தன் மனதில் ஏதோ ஓர் ஆனந்தம் பிறக்கிறது. சிகிச்சை முடிந்து வெளியே வரும் ஹாசினியின் குடும்பத்தினர், மீண்டும் வீட்டுக்குப் பயணமாகிறார்கள். 
எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஹாசினி... அவரிடம், “அப்பா... நாம் ஹாஸ்பிட்டலில் பார்த்தோமே, நிறைய டாக்டர்ஸை. அதுபோலத்தான் பெரியவளானபிறகு நானும் ஆகப்போகிறேன். டாக்டர் ஆவதுதான் என்னுடைய  கனவு. டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்வதுதான் என்னுடைய ஆசை. என்னையும் அதுபோல் படிக்க வைப்பீர்களா?” என்று கேட்கிறாள். ஹாசினியின் ஆசையைக்கேட்டு, அப்படியே பூரித்துப் போகிறார் அவளின் தந்தை. “உன் விருப்பம்மா.. நீ கேட்டது அனைத்தையும் செய்கிறேன். டாக்டராவதுதான் உன் விருப்பம் என்றால், அதையும் நான் நிறைவேற்றுகிறேன்” என்று சொல்லி அவளைக் கட்டியணைத்து, அன்பு முத்தம் தருகிறார். 
நாள்கள் நகர்கின்றன... ஹாசினியின் தந்தையான பாபுவுக்கு ஆந்திராவில் அவருடைய பூர்வீகச் சொத்து இருக்கிறது. அண்ணன், தம்பி சகிதமாக உள்ள சொத்து அது. ஒருநாள் ஹாசினியின் தந்தை, தன் தம்பியிடம், “என் மகள் டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதற்கு நிறைய செலவு ஆகும். அதற்காக நம் பூர்வீகச் சொத்தில் உள்ள என் பாகத்தைப் பின்னாடி விற்கவேண்டி வரலாம்” என்று கோரிக்கை வைக்கிறார்.
அதற்கு ஹாசினியின் சித்தப்பாவோ, “இதுக்கு ஏன் கவலைப்படுற அண்ணே? ஹாசினி நம் உயிர். அவளைவிட வேற சொத்து என்ன இருக்கிறது? அவ, ஆசைப்பட்டப்படியே டாக்டருக்குப் படிக்கட்டும். அந்தச் சொத்து மட்டுமல்லாது, என்னால் முடிந்த உதவியையும் அவளுக்கு நான் செய்யுறேன்” என்று தன் சகோதரனுக்கு நம்பிக்கை கொடுக்கிறார். 
ஹாசினியின் தந்தை மனதில் இருக்கும் பாரம் நீங்குகிறது. இதைக்கேட்ட மகிழ்ச்சியில் மீண்டும் ஹாசினியை அணைத்து முத்தமிடுகிறார் பாபு. ஆனால், அந்தக் கனவுகூடத் தூக்கத்தில் வந்து கலைந்துபோகும் கனவாகவே இருந்திருக்கிறது ஹாசினிக்கு. அவளுக்கு மட்டுமல்ல... அவள் அப்பாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அவளே உயிருடன் இல்லாதபோது, அவளின் கனவு மட்டும் எப்படி ஜெயிக்கும்? ஆம், அந்தக் கனவு நிறைவேறுவதற்குள், அவள் காற்றோடு கலந்துவிட்டாள். 
ஹாசினிக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு மட்டுமல்லாது, இன்னும் பல கனவுகளும்,  திறமைகளும் ஒருங்கே இருந்துள்ளன. ஆடிப் பாடியிருக்கிறாள்; கூடி மகிழ்ந்திருக்கிறாள்; ஓடி விளையாடியிருக்கிறாள்.
இப்படியான தருணத்தில் அவள், அப்பாவிடம் செய்த சேட்டைகள் யாவை... அவரிடம் வேறு என்னென்னவெல்லாம் கேட்டாள் என்பதை வரும் தொடரில் பார்ப்போம்...

“அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும்!” - அத்தியாயம் - 3 

குறும்பு என்பது எல்லாக் குழந்தைகளிடமும் சிறுவயது முதலே இருக்கும். சிறுமி ஹாசினியிடமும் அதே குறும்பு இருந்திருக்கிறது. தினமும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் தன் அப்பாவிடம் குறும்பு செய்வதே ஹாசினியின் வழக்கமாக இருந்திருக்கிறது. அவள், தன் தந்தையைச் செல்லமாய் அடிப்பதும், உதைப்பதும், குத்துவதும், ஆசையாய்க் கிள்ளுவதும் அவளின் குறும்புகளில் அடங்குபவை. இதுபோன்ற குறும்புகள் ஹாசினியிடம் கணக்கில்லாமல் இருந்திருக்கிறது. 
அவளின் குறும்புகள் குறித்து அவளுடைய தந்தை, “தினமும் பள்ளிவிட்டு வந்ததும், அப்படியே ஓடிவந்து என்னைக் கட்டிக்கொள்வாள்; முத்தம் கொடுப்பாள்; அப்புறம் என் கன்னத்தில் செல்லமாய்த் தட்டுவாள்; வயிற்றில் ஓங்கிக் குத்துவாள். என் தோள்மீது ஏறிக்கொண்டு, என்னைச் சுற்றிவரச் சொல்வாள்; கதை சொல்லச் சொல்வாள். இவற்றையெல்லாம் அவள் செய்யும்போது எனக்குக் கோபமே வராது. அவளுடன் விளையாடுவதில் எனக்கு நேரம் போவதே தெரியாது. இப்போது அந்த நினைவுகள்தான் என் கண்ணுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கின்றன” என்கிறார் கண்ணீருடன். 
மேலும் அவர், “ஒருமுறை அவளைக் கோபப்பட்டுத் திட்டிவிட்டேன். அதற்கு அவளின் முகம் வாடிவிட்டது. அதிலிருந்து அவளிடம் கோபமே பட்டது கிடையாது” என்றார் கண்ணீரைத் துடைத்தபடி. குழந்தைகள் அழும்போது எதையாவது தருகிறேன் என்று சொல்லி, அந்த நேரத்துக்குக் குழந்தையைச் சமாதானப்படுத்திவிட்டால் போதும்... அவர்களும், அடுத்த நொடி பழையதை எல்லாம் மறந்துவிடுவார்கள். 
அதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஹாசினிக்கும் ஏதாவது ஒரு கதை சொல்லி அவளை மகிழ வைத்திருக்கிறார் தந்தை. அதையே மனதில் இறுக்கமாகப் பிடித்துக்கொண்ட ஹாசினி, தினமும் அவள் தந்தையிடம் கதை சொல்லச்சொல்லிக் கேட்டிருக்கிறாள். குழந்தைகளுக்கு கதை என்றால் பிடிக்கும்தானே? அதைத்தான் ஹாசினியும் தந்தையிடம் கேட்டிருக்கிறாள். அவரும், தினமும் கதை சொல்லியிருக்கிறார். அவருக்குப் பிடித்த கதை ஒன்றையே அவர்  திரும்பத்திரும்பச் சொல்ல... அதனால் வெறுப்புற்றிருக்கிறாள் ஹாசினி
இதனால் வெறுப்புக்குள்ளான அவள், “என்னப்பா... தெனமும் இதே கதையச் சொல்ற? உனக்கு வேறு கதையே தெரியாதா” என்று சற்றுக் கோபத்துடனேயே  கேட்டிருக்கிறாள். குழந்தையை ஏமாற்ற முடியாது எனத் தெரிந்துகொண்ட ஹாசினியின் தந்தை, அதே கதையை வேறு மாதிரியாகச் சொல்லியிருக்கிறார். அப்போதும் ஹாசினி விடவில்லை. தொடர்ந்து வேறு கதை சொல்லச் சொல்லி அவரிடம் அடம்பிடித்திருக்கிறாள். அவள், அப்பாவிடம் மட்டும் செல்லமாக இருக்கவில்லை. அவள் அம்மாவிடமும் செல்லமாகத்தான் இருந்திருக்கிறாள். அதற்குக் காரணம், அவள் மூத்த குழந்தையாகப் பிறந்ததுதான். 
ஹாசினியின் அம்மா ஶ்ரீதேவி, “அவள், எங்களுக்கு மூத்த குழந்தை. அதனால்தான் அவளுக்கு எல்லா வகையிலும் முக்கியத்துவம் கொடுத்தோம். அதுமட்டுமல்லாது படிப்பதில், விளையாடுவதில் என எல்லாவற்றிலும் படுசுட்டியாக இருப்பாள். குறிப்பாகச் சொல்லப்போனால், தன் தம்பியைவிட ஹாசினிக்குத்தான் வீட்டில் முன்னுரிமை கொடுத்தோம். அவள் கேட்டதை எல்லாம்  வாங்கிக்கொடுத்தோம்” என்று தன் மகளைப் பற்றிப் பெருமை பொங்கச் சொல்கிறார். 
ஹாசினியைப் பற்றி அவர்கள் இருவர் மட்டுமல்ல... அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், அந்த மாதா தெருவில் வசிப்பவர்களும் பெருமையாகத்தான் சொல்கிறார்கள். ஹாசினி படித்த நாராயணா பள்ளி ஆசிரியைகள், “பட்டாம்பூச்சி மாதிரிங்க அவ. நாங்கள்லாம் அவளை ‘பட்டர்ஃப்ளை’னுதான் கூப்பிடுவோம். அவ ரெண்டாவது படிச்ச குழந்தைதான். ஆனா, பேச்சுல அவ்வளவு தெளிவு. மலர்ந்த பூ மாதிரி சிரிப்பா. அவளைப் பார்த்தாலே மனசுக்குள்ள சந்தோஷம் ஊறும். பள்ளியில் எல்லா ஆசிரியைகளுக்குமே அவளைப் பிடிக்கும்” என்கின்றனர்.
அவளுடைய உறவினர்கள், “அவ, ஸ்மார்ட் கேர்ள் மட்டுமல்ல... மிக பிரில்லியன்ட் கேர்ளும்கூட. அவளுடைய ஆக்டிவிட்டீஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். அவ வீட்டுல ஒட்டியிருக்கிற ஓவியங்கள் எல்லாம் அவ வரைஞ்சதுதான். அந்த ஓவியத்தைப்போல அவளும் அழகாக இருப்பா” என்கின்றனர் மிகவும் ஆச்சர்யத்துடன். 
இப்படி எல்லோருக்கும் அவள் பிடித்தவளாக இருந்ததால்தான், அக்கம்பக்கத்தில் உள்ள எல்லோர் வீடுகளிலும் தன் வயது சிறுமிகளுடனும் விளையாட ஆரம்பித்துள்ளார். அவர்களுடன் அவள் விளையாட ஆரம்பித்தால், அவளுக்கு நேரம் போவதே தெரியாது. ஒருவேளை, ஹாசினியின் பெற்றோருக்குக் குழந்தை ஞாபகம் வந்து, அவளைத் தேடிப்போய் அக்கம்பக்கத்து வீடுகளில் அவர்கள் சென்று பார்த்தால்,  அவள் சிரிக்கும் குரல் கேட்டு உடனே திரும்பி வந்துவிடுவர். அவள் விளையாடிவிட்டு வரும்வரை அவர்கள் காத்திருப்பர். இப்படிக் கழிந்த பொழுதுகளில்தான் அதே குடியிருப்பில் வசித்த ஓர் இளைஞனும் சிறுமி ஹாசினியிடம் விளையாட ஆரம்பித்துள்ளான்....

எம் பொண்ணு எங்கம்மா..?” - அத்தியாயம் - 4

குழந்தைகள் தங்களின் உடல் நலத்தைப் பேணுவதற்கும், ஒற்றுமையாய் இருப்பதற்கும் குழந்தைகளைப் பார்த்து, ``ஓடி விளையாடு பாப்பா” என்றார் மகாகவி பாரதியார். அப்படி ஓடி விளையாடும் அறியா வயது குழந்தைகளைத்தான் பாலியல் சீண்டல்கள் மூலம் பாழாக்குகின்றனர் சில பாவிகள். 
சாக்லேட், பிஸ்கட், பொம்மை உள்ளிட்டவற்றோடு விளையாட்டையும் அதிகம் நேசித்தவள் ஹாசினி. எப்போதும் தன் வயதுடைய குழந்தைகளுடன் விளையாடுவதை அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவள் விளையாடுவது குறித்து அவளுடைய அப்பா, ``இந்தக் குடியிருப்புல மொத்தம் ஏழெட்டுக் குழந்தைங்க இருக்கும். எல்லாக் குழந்தைகளும் பார்க்கிங்ல போய் விளையாடுவாங்க. அவங்களை எல்லாம் ஹாசினிதான் பார்த்துக்குவா. சின்ன வயசுலேயே ரொம்பப் பொறுப்பா இருப்பா. ஒரு நிமிஷம் சும்மா இருக்கமாட்டா” என்கிறார் கண்ணீருடன்.
இப்படியிருக்கும் ஹாசினியை, நாள்தோறும் கவனித்து வருகிறான் அதே குடியிருப்பில் வசிக்கும் ஓர் இளைஞன். அந்தக் குடியிருப்பின் மேல்தளத்தில் மூன்று வீடுகள். அதில் உள்ள ஒரு வீட்டில்தான் இந்த இளைஞன் வசித்து வந்தான். சேகர் - சரளா தம்பதியின் மகனான அந்த இளைஞனின் பெயர் தஷ்வந்த். அவனைப் பற்றி அங்குள்ளவர்கள், ``அவன், டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்துவிட்டுச் சென்னை தரமணியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவனுக்கு இரவுப் பணி என்பதால், பகலில் பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருப்பான். அவன், எப்போதும் வாசல் கேட்டைத் திறந்துப் போட்டுவிட்டுப் போய்விடுவான். வேறு யாராவதுதான் கேட்டை மூடுவார்கள். அதுமட்டுமல்லாது, வீட்டுக்குள் அவன் இருக்கும்போதெல்லாம் சவுண்டு அதிகமாக வைத்துத்தான் பாட்டுக் கேட்பான். அவன், குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துப் பேசுவான். குழந்தைகளை ஈர்ப்பதற்கு என்றே நாய்க்குட்டி ஒன்றையும் வளர்த்தான். அவனுக்குக் குழந்தைகள் மீது எப்போதும் ஓர் ஈர்ப்பு இருந்திருக்கிறது. மாதத்துக்கு ஒரு செல்போன், வருடத்துக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் என ஜாலியாகவே இருப்பான். இப்படி அவனுக்கு பைக் மீதிருந்த அலாதி பிரியத்தினால், அந்த ஏரியாவில் உள்ள ஒருவருடைய பைக்கை அவன் திருடியதாகப் புகார் ஒன்றும் இருக்கிறது. அந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக தஷ்வந்தின் பெற்றோர் எதிர்த்தரப்பிடம் கட்டப் பஞ்சாயத்து செய்து பிரச்னையைச் சுமுகமாக முடித்துவிட்டார்கள்.  
இதுதவிர, அவன் டென்னிஸ் கோச்சாகவும் இருந்தான். அப்படி இருந்த ஒருசமயத்தில் டென்னிஸ் பயிற்சிபெற வந்த ஒரு சிறுமியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சி செய்தது தொடர்பாக, அவன்மீது மற்றொரு புகாரும் இருக்கிறது. இதுபோல் அவன் நிறைய தீயச் செயல்களில் ஈடுபட ஆரம்பித்தபோதே அவனுடைய பெற்றோர் அவனைத் திருத்தியிருந்தால் அவனுக்கு இந்த நிலை வந்திருக்காது” என்று தஷ்வந்த் பற்றிச் சொல்லும் அவர்கள், “அவனுடையச் செயல்பாடுகள் காரணமாகவே, அவனது குடும்பம் பல வீடுகள் மாறியிருக்கிறது” என்று அவனுடைய குடும்பம் பற்றியும் சொல்கின்றனர்.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையின்போது, ஹாசினி எப்போதும்போல் மேல்தளத்தில் உள்ள ஒரு வீட்டுக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள், குழந்தைகளுடன்தானே விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த அவளுடைய பெற்றோர், அருகிலிருக்கும் மார்க்கெட்டுக்குச் செல்கின்றனர். அந்த நேரத்தில்தான் அந்தக் கொடூரச் சம்பவம் நடக்கிறது. நேரம் ஆனதால், தன்னோடு விளையாடிய குழந்தைகள் ஹோம்வொர்க் செய்ய உட்காருகின்றனர். இதனால் ஹாசினியும் ஹோம்வொர்க் செய்ய வீட்டுக்கு வருகிறார். அப்படித் தன் வீட்டுக்கு வருவதற்காக மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருக்கும்போது... தான் ஆசையாய் வளர்க்கும் நாய்க்குட்டியை ஹாசினியிடம் காட்டி, தன் வீட்டுக்கு அழைக்கிறான் தஷ்வந்த். அந்த நாய்க்குட்டியைப் பார்த்து, அதன் பின்னால் ஓடிய ஹாசினியிடம், தன் பாலியல் சேட்டையை அரங்கேற்றுகிறான், தஷ்வந்த். அவனுடைய பாலியல் வன்புணர்விலிருந்து தாக்குப்பிடிக்க முடியாமல் கத்துகிறாள்; கதறுகிறாள். அவள் போடும் சத்தத்தை அடக்க... முகத்தில் பெட்ஷீட்டை வைத்து அழுத்துகிறான். அந்த அழுத்தம் ஹாசினியின் மூச்சையே முடித்துவைக்கிறது. அதற்குப் பிறகு அவன் செய்ததுதான் இன்னும் கொடூரம். துவண்டுபோன அந்தப் பிஞ்சு உடலை ஒரு பேக்கில் வைத்து, தோளில் சுமந்துகொண்டு வெளியேறும் தஷ்வந்த், தன்னுடைய பைக்கில் அனகாபுத்தூருக்குச் செல்கிறான். அங்கு, ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், ஹாசினியின் உடலைத் தீ வைத்து எரித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறான்; எப்போதும்போல ஜாலியாக இருக்கிறான்.   
இந்த நேரத்தில் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த ஹாசினியின் பெற்றோர், சிறிதுநேரம் கழித்து வீட்டுக்கு வருகின்றனர். மகளைக் காணாது அதிர்ச்சியடைகின்றனர்; அழுகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர். பிறகு குழந்தையைத் தேட ஆரம்பிக்கின்றனர். ஹாசினியைக் காணாது, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு மட்டுமல்லாது, அந்தத் தெருவே பதற்றத்துக்கு ஆளாகிறது. 
ஹாசினியுடன் விளையாடிய குழந்தைகளிடம் அவளின் பெற்றோர், ``எம் பொண்ணு (ஹாசினி) எங்கம்மா...” என்று அழுதபடியே கேட்கின்றனர். அவர்களோ, ``நாங்க ஹோம்வொர்க் பண்ண உட்கார்ந்துட்டோம். ஹாசினி அப்பவே கீழே போயிட்டாளே” என்று தெரிவிக்கின்றனர். ஹாசினியின் பெற்றோர்களுக்கு முகம் சுருங்குகிறது; மனம் இறுகுகிறது. குழந்தைக்கு ஏதோ நடந்திருக்கிறது என்கிற பதற்றத்தில் இருவரும் கண்ணீரும், கவலையுமாக தவிக்கின்றனர். ஹாசினியுடைய உறவினர்களும், அக்கம்பக்கத்தினரும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லியபடியே குழந்தையைத் தேட ஆரம்பிக்கின்றனர். அவர்கள் அனைவருடனும் சேர்ந்து, எதுவும் நடக்காதது போன்று, தஷ்வந்தும் குழந்தையைத் தேடினான்....

“யாருமே இதைக் கவனிக்கவே இல்லையே...” - அத்தியாயம் - 5

“குழந்தையும் மலரும் செழிப்புள்ளவை. அவற்றை மென்மையாகக் கையாள வேண்டும்” என்பார் நம் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. ஆனால், நன்றாகச் செழித்து வளர வேண்டிய அந்தக் குழந்தையைத்தான் சிதைத்துவிட்டான் தஷ்வந்த். சிதைத்ததோடு மட்டுமின்றி, ஹாசினியின் பெற்றோரோடும், உறவினர்களோடும் குழந்தையைத் தேடியதுதான் கொடுமையிலும் கொடுமை. “போலீஸ் விசாரணைக்குப் பிறகுதான் நிறைய விஷயங்கள் தெரிய வந்தன” என்கிறார், ஹாசினியின் தந்தை ஶ்ரீனிவாஸ் பாபுவின் உறவினர் மாருதி.
இதுகுறித்து அவர், “நாங்க ஹாசினியைக் காணோம்னு எல்லா இடங்களிலும் தேடிக்கிட்டிருந்தோம். அந்தப் பையனும் வந்து எங்ககூடத் தேடினான். 100-க்குப் போன் பண்ணி, ‘குழந்தையைக் காணோம்’னு கம்ப்ளெய்ன்ட் செஞ்சதும் அவன்தான். சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் பார்த்துக்கிட்டிருந்தப்போ, கூடவே நின்னு ‘ஜூம் பண்ணுங்க... லெஃப்ட் திருப்புங்க’னு ரொம்ப ஆர்வமா தேடின மாதிரி நடிச்சான். அதுமட்டும் இல்லாம, ஒரு டி.வி. சேனல் ரிப்போர்ட்டரைக் கூட்டிக்கிட்டு வந்து, ‘குழந்தையைக் காணோம். தகவல் தெரிஞ்சா தொடர்புகொள்ளுங்க’னு பேட்டியும் கொடுத்தான். இதனால அவன் மேல எங்களுக்குத் துளிகூடச் சந்தேகம் வரலை. ஆனா, தொடக்கத்துல இருந்தே அவனோட வீட்டைக் குறிவெச்சுத்தான் போலீஸ் விசாரிச்சது. வெளியில் தேடாம இங்கேயே விசாரிக்கிறாங்களேன்னு எங்களுக்குக்கூட வருத்தமா இருந்துச்சு. இவ்வளவு பெரிய குற்றத்தைப் பண்ணிட்டு எந்தப் பதற்றமும் இல்லாம, எப்படி அவனால் எங்ககூட நிற்க முடிஞ்சதுனு நினைக்கும்போது அதிர்ச்சியா இருக்கு” என்கிறார் ஒருவித பதற்றத்துடன்.
“எங்களுக்கும் பொம்பளைப் பசங்க இருக்குது. இதுபோன்ற ஆள்களை எல்லாம் தூக்குல போடுங்க” என்று பெண்கள் மத்தியில் அவனுக்கு எதிராகக் குரல் எழுகிறது. இதற்கிடையே சம்பவம் நடந்த அந்தச் சமயத்தில்... தோளில் பேக்குடன் செல்லும் தஷ்வந்த், பின்பு பேக் இல்லாமல் வீட்டுக்குள் வருவதை சி.சி.டி.வி. கேமராவில் கண்காணிக்கிறது போலீஸ். இதையே லீடாக வைத்து அவனை வளைக்கிறது. விசாரணையில், சிறுமி ஹாசினியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு... அவளின் உடலைச் சாக்குமூட்டையில் வைத்து பைபாஸ் சாலையின் அருகே எரித்துக் கொன்றதாகத் தெரிவிக்கிறான், தஷ்வந்த். இதனையடுத்து. மார்ச் 22-ம் தேதியன்று, தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. 
இந்த நிலையில், மகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லச் செல்கிறார், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரிடம், “எங்க புள்ளைக்கு நேர்ந்த கதி இனிமேல் எந்தப் புள்ளைக்கும் வரக்கூடாதுங்க” என்று கதறியழுகின்றனர், ஹாசினியின் பெற்றோர். சுற்றி நின்றவர்களோ, “யாருமே இதைக் கண்டுக்கலீங்க. நீங்கதான் நடவடிக்கை எடுக்க வைக்கணும்” என்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வரும் ஸ்டாலின்,  “உயிர் போலக் கருதி வளர்த்த அந்தக் குழந்தையின் கருகிய உடலைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் (ஹாசினியின் பெற்றோர்) இன்னும் மீளவில்லை. பிள்ளையை இழந்து தவிக்கும் அந்தப் பெற்றோரை நான் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தபோதும், அவர்களின் மனதில் உள்ள வேதனையும் அதன் வலியும் குறையவில்லை. எத்தனை கோடி முறை ஆறுதல் சொன்னாலும் அந்தப் பச்சிளங்குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோரைத் தேற்ற முடியாது என்பதை உணருகிறேன்” என்று அறிக்கை வெளியிட்டார். 
அதேநேரத்தில்தான் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் களேபரங்களால் எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூரில் அடைத்துவைக்கப்பட்டு, ஆட்சியைத் தக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றனர். அன்றைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையால் ஹாசினி விஷயம் உப்புச் சப்பில்லாமல் போகிறது. ஆனால், மறுபுறம் ஊடகங்கள் இதை ஊதித் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. போலீஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தபோதிலும், போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்றம், அவனுக்கு ஜாமீன் வழங்குகிறது. சைதாப்பேட்டையில் இருந்த தன்னுடைய இடத்தை விற்று தன் மகனை வெளியே கொண்டுவருகிறார், தஷ்வந்தின் தந்தை சேகர். ஒருகட்டத்தில், தஷ்வந்துக்கு எதிரான குண்டர் சட்டமும் ரத்தாகிறது. இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்துக்கு எதிர்ப்புக் கிளம்புகிறது. 
பின்னர், தஷ்வந்தின் குடும்பம் மாதா தெரு மதனந்தபுரத்திலிருந்து, குன்றத்தூரில் உள்ள சம்பந்தம் நகருக்குக் குடிபெயர்கிறது. அங்கு, தஷ்வந்த் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்குச் சில காலம் தடை விதிக்கப்படுகிறது. பின்னர், எப்போதும்போல அவன் வெளியே செல்லத் தொடங்குகிறான். நாள்தோறும் தன் கை செலவுக்குப் பணம் கேட்டு வீட்டில் இருந்த பெற்றோரைத் தொந்தரவு செய்கிறான். அவர்கள் தரும் பணத்தை வைத்துக்கொண்டு மது குடிப்பது, கிளப் செல்வது என ஊதாரித்தனமாக அவன் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறான். இதனால் மனம் நொந்துபோன அவனின் பெற்றோர், பணம் கொடுப்பதை ஒருகட்டத்தில் நிறுத்திவிடுகின்றனர். இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் தஷ்வந்த்...

“எனக்குப் பணம் வேண்டும்!” - அத்தியாயம் - 6

“குழந்தை செய்யும் ஒரு தவறு காரணமாக குழந்தைக்கோ, நமக்கோ பெரிய இழப்பு ஏற்படும் என்று பெற்றோர் அறிந்தால், அந்தத் தவற்றை குழந்தை மீண்டும் செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும். அதுதான் குழந்தையை வளர்ப்பதற்கான சிறந்த வழி” என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். 
தஷ்வந்த் செய்த சின்னச்சின்ன தவறுகளுக்கு எல்லாம் அவனுடைய பெற்றோர் ஆதரவாக இருந்ததுடன், அவன் தொடர்ந்து தவறு செய்யாமல் இருப்பதைக் கண்காணிக்காமல் அலட்சியமாகவும் இருந்ததன் விளைவு, பெரிய அளவில் தவறு செய்யும் அளவுக்கு அவனை வளர்த்துவிட்டது. பணம் கொடுப்பதைப் பெற்றோர் நிறுத்தியதால், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளான தஷ்வந்த், கடந்த டிசம்பர் 2-ம் தேதி தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் தன் தாய் சரளாவிடம் பணம் கேட்டிருக்கிறான். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, சுத்தியலைக்கொண்டு தாய் சரளாவின் தலையில் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 6 பவுன் நகைகளுடன் அங்கிருந்து தப்புகிறான் தஷ்வந்த். 
தந்தை சேகர் அளித்த புகாரின்பேரில், தஷ்வந்தைப் பிடிக்கப் போலீஸார் தனிப்படை அமைத்து அவனைத் தேடுகின்றனர். அவனது நண்பர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது. தனிப்படை போலீஸார் தஷ்வந்தின் தொலைபேசிக்குக் கடைசியாக வந்த அழைப்புகளை ஆய்வு செய்கின்றனர். ஏற்கெனவே சிறுமி ஹாசினி வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சில காலம் சிறையில் இருந்தபோது தஷ்வந்துக்கு, சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீஸார் தஷ்வந்தின் தொலைபேசிக்குக் கடைசியாக வந்த அழைப்புகளை வைத்து ஆய்வு செய்ததில், அவன் ராஜ்குமார் தாஸ் என்பவருக்கு (தஷ்வந்துக்குச் சிறையில் பழக்கமானவன்) அடிக்கடி பேசியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸார்  தாஸைக் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.
“எனக்குப் பணம் வேண்டும்!”
இதற்கிடையே வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற 6 பவுன் தங்க நகைகளை விற்பதற்காக, தஷ்வந்த் தனக்கு ஜெயிலில் பழக்கமான ஜேம்ஸ் என்பவரின் நண்பரான டேவிட்டைச் சந்தித்து நகைகளை விற்றுத் தரும்படி கேட்டிருக்கிறான். டேவிட், அவருடைய நண்பரான மணிகண்டன் என்பவரிடம் அந்த நகைகளைக் கொடுத்து விற்கச் சொல்லியிருக்கிறார். நகைகளை வாங்கிக்கொண்ட மணிகண்டன் மீது ஏற்கெனவே திருட்டு வழக்கு இருக்கும் நிலையில், தஷ்வந்த் கொடுத்த அந்த நகைகளுடன் மணிகண்டன் தலைமறைவாகி விடுகிறான். இதனால், கோபமடைந்த தஷ்வந்த், “உன்னை நம்பித்தானே நகைகளைக் கொடுத்தேன். எனக்குப் பணம் வந்தாக வேண்டும்” என்று டேவிட்டிடம் மிரட்டல் விடுக்கிறான். ஆனால் டேவிட்டோ, “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை; மணிகண்டன் என்னிடம் சிக்கும்போது, உனக்கு மொத்த பணத்தையும் தருகிறேன்” என்று சொல்லி அப்போதைக்கு தன் கையில் இருக்கும் சில ஆயிரங்களைக் கொடுக்கிறார். 
அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு பெங்களூருவுக்கு தப்பிய தஷ்வந்த், பின்னர் அங்கிருந்து மும்பைக்குச் செல்கிறான். சிறையில் பழக்கமான ஒரு நண்பன் மூலம் மும்பையில் தங்கியிருக்கும் விஷயத்தைத் தனிப்படை போலீஸார் அறிந்து, மும்பைக்குச் செல்கின்றனர். அங்கு, தமிழ் அமைப்புகளின் உதவியுடன், தஷ்வந்த் பற்றிய தகவல்களைக் கொடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். இந்தச் சூழலில், டிசம்பர் 6-ம் தேதி காவல் துறையினருக்கு ஓர் அழைப்பு வருகிறது. “சார்... தஷ்வந்தைப் போலவே ஒரு நபர் பாந்த்ராவில் இருக்கும் ரேஸ் கோர்ஸுக்குள் நுழைந்துள்ளார். எதற்கும் அங்குசென்று பாருங்கள்” என்று போனில் பேசிய நபர் தகவல் கொடுக்கிறார்.  அடுத்த நொடி, அங்கு விரைகிறது தனிப்படை. அந்த உருவம் தஷ்வந்த்-தான் என்பதை உறுதி செய்த அவர்கள், அவன் அருகில் சென்று, “என்ன தம்பி எப்படி இருக்கீங்க... இங்க எப்போ வந்தீங்க” என்று ஒன்றும் தெரியாததுபோல் கேள்வி கேட்கின்றனர். அதற்கு தஷ்வந்த், “நீங்கள் யார்” எனக் கேட்கிறான். 
“நாங்களா, சென்னைப் போலீஸ். வா எங்களுடன், சென்னை போகலாம்...” எனச் சொல்லி தஷ்வந்தைக் கைதுசெய்தனர். மறுநாள் மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்துச் செல்ல அனுமதி வாங்குகின்றனர். பின்னர், சென்னைக்கு அழைத்து வரவிருந்த வேளையில், சாப்பாட்டுக்காக கைவிலங்கைப் போலீஸார் அவிழ்த்துவிட..., அடுத்த நொடி அங்கிருந்து மீண்டும் தப்பிக்கிறான் தஷ்வந்த். ஆனால், போலீஸாரின் அதிரடி தேடுதல் வேட்டைக்குப் பிறகு டிசம்பர் 8-ம் தேதி மீண்டும் தஷ்வந்த் கைதுசெய்யப்பட்டு மிகுந்த பாதுகாப்போடு சென்னைக்கு அழைத்துவரப்பட்டான். இங்கு வந்தபின்னர், அவன் தப்பியது குறித்தும், பின் சிக்கியது குறித்தும் தனிப்படை போலீஸார் விளக்கினர். 
தந்தையைக் கொலை செய்யத் திட்டம்!
இதுகுறித்து அவர்கள், “சரளா கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை கைதுசெய்ய மும்பை சென்றோம். கைது செய்தபின், சாப்பிடுவதற்காகத் தஷ்வந்தின் கைவிலங்கைக் கழற்றினோம். ஆனால், அவன் எங்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டான். அவனது இடது கையில் கைவிலங்கு மாட்டப்பட்டு இருந்ததால், மீண்டும் அவனைக் கைது செய்துவிட்டோம். ஒருமுறை எங்களிடமிருந்து தப்பியதால் தஷ்வந்தைக் கண்காணிக்கக் கூடுதல் போலீஸார் பணியமர்த்தப்பட்டனர். இதற்கிடையில் சென்னையிலிருந்து புறப்பட்டுவந்த இன்னொரு தனிப்படை டீமும் தஷ்வந்த்-ஐ பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விமானப் பயணத்தின்போதும் அவனைக் கண்காணித்துக்கொண்டே இருந்தோம். கழிவறைக்குக்கூட தஷ்வந்தை போலீஸார்தான் அழைத்துச் சென்றனர். போலீஸார் பாதுகாப்பில்தான் உணவும் வழங்கப்பட்டது. கடந்த முறை எங்களிடமிருந்து தப்பியதால் விமானத்தில் வரும்வரை அவரிடம் எதுவும் பேசவில்லை. அவன் கேட்ட உணவு, டீ, காபி, ஸ்நாக்ஸ் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்தோம். சென்னைக்கு அழைத்து வந்தவுடன் அவனிடம் விசாரணையைத் தொடங்கினோம்” என்று தெரிவித்தனர். 
அவனிடம் நடத்திய விசாரணையில், தன்னுடைய அப்பாவையும் அவன் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த தகவலைப் போலீஸார் கூறியதைக் கேட்டு தஷ்வந்தின்  உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

“என்னை வெறுப்பேற்றிய பெற்றோர்!” -  அத்தியாயம் - 7

ருமுறை தவறு செய்பவனை மன்னிக்கும் இந்த உலகம், அவன் தொடர்ந்து செய்யும்போது ஒதுக்கி வைத்துவிடுகிறது. சிறுமி ஹாசினி கொலை செய்யப்படுவதற்கு முன் சிறுசிறு தவறுகளைச் செய்துவந்த தஷ்வந்தை மன்னித்த இந்த உலகம், அவன் பெரிய தவறுகளைச் செய்ததும் ஒதுக்கிவைத்துவிட்டது. 
‘விகட’னுக்குப் பேட்டி!
தாய் சரளாவைக் கொலை செய்துவிட்டு, தஷ்வந்த் மும்பையில் தலைமறைவாக இருந்த சமயத்தில், அவனைப் பற்றிச் சிறுமி ஹாசினியின் தந்தை ஶ்ரீனிவாஸ் பாபுவிடம் கேட்டறிந்தோம். அப்போது அவர், “சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தஷ்வந்த் போன்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவது, சமூகத்தில் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும். ‘அவனைப் போன்றவர்கள் யாரையும் கொலை செய்யத் தயங்கமாட்டார்கள்’ என்று சமீபத்தில் ‘விகட’னுக்கு நான் பேட்டியளித்திருந்தேன். அதை மெய்ப்பிக்கும் வகையில், தஷ்வந்த் தன் தாயையே கொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறான். இதனால், எனது குடும்பத்தினர் அச்சத்தில் இருக்கிறார்கள். எங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் இனியும் தாமதிக்காமல் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து தஷ்வந்தைக் கைதுசெய்ய வேண்டும். அவனுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். ஹாசினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்று தன் மகளுக்காக வேதனையைக் கொட்டினார். 
பிறகு சில நிமிடங்கள் கழித்து, “தன் பையன் இப்படியொரு குற்றத்தைச் செய்துவிட்டானே என்று நினைத்து, தஷ்வந்தின் அம்மா அவனிடம் பேசாமல் இருந்திருக்கலாம். ‘அம்மாவே நம்மைக் குற்றவாளியாகப் பார்க்கிறாரே’ என்று தஷ்வந்த் நினைத்து, அந்த வேதனையில் தாயைக் கொலை செய்திருக்கலாம். பாவம், நம் பையன் செய்தது தவறு என்று அந்த அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த நேரத்தில் இறந்துபோன தஷ்வந்தின் அம்மாவுக்காகவும் நாங்கள் வருத்தப்படுகிறோம்” என்றார், தன் மனவலியையும் மறந்து.
தஷ்வந்தின் தந்தை சவால்! 
சிறுமி ஹாசினி வழக்கில், கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதோடு, அவனுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. அந்தச் சமயத்தில், இதுபற்றிக் கருத்து தெரிவித்த ஹாசினியின் தந்தை ஶ்ரீனிவாஸ் பாபு, “தஷ்வந்தின் தந்தை, ‘தன் மகனை வெளியே கொண்டுவருவேன்’ என்று என்னிடம் சவால் விட்டார். அவன் வெளியே வந்து பலரையும் கொல்லத் தயங்க மாட்டான். அவனைப் போன்றவர்களை வெளியே விடக்கூடாது. என் மகள் இறந்ததிலிருந்து என் மனைவி வீட்டைவிட்டு இன்னும் வெளியே வரவில்லை” என்று கண்ணீர்மல்க ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாசினி வழக்கில் தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கியதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பொதுமக்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர் கதறல்!
மும்பையில் கைதுசெய்யப்பட்டுச் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட தஷ்வந்தைக் காண, அவரது உறவினர்கள் சிலர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள், தஷ்வந்தைச் சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர். குறிப்பாக உறவினர் ஒருவர், “பெற்ற தாயைக் கொலை செய்யவா உன்னை ஜாமீனில் எடுத்தோம்” என்று கதறியதைப் பார்த்து அங்கிருந்தவர்களின் கண்கள் கலங்கின. ஆனாலும், தஷ்வந்த் மீது சரமாரியாக வசைச்சொற்கள் குண்டு மழையாய்ப் பொழிந்தன. சிலர், அவனைத் தாக்கவும் முயற்சி செய்தனர். அவர்களிடமிருந்து தஷ்வந்தைப் போலீஸார் பாதுகாப்புடன் ஸ்டேஷனுக்குள் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். போலீஸார் நடத்திய விசாரணையின்போது அவன் அளித்த வாக்குமூலம் அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. 
வெறுப்பேற்றிய பெற்றோர்!
இதுகுறித்து போலீஸாரிடம் தஷ்வந்த், “தவறான பழக்கத்தால் என்னுடைய வாழ்க்கை திசை மாறிவிட்டது. படிக்கும்போது சில நண்பர்கள் என்னைத் தவறான பாதைக்கு அழைத்துச்சென்றனர். அதிலிருந்து மீளமுடியவில்லை. திருந்த வேண்டும் என்று நான் பலமுறை முயற்சி செய்தேன். ஆனால், தவறுக்கு மேல் தவறு நடந்துவிட்டது. ஹாசினி வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்தபின் குடும்பத்தார் என்னை மதிக்கவில்லை. எப்போது பார்த்தாலும், ‘ஒரு குழந்தையின் உயிரைப் பறித்துவிட்டாயே’ என்று சொல்லிச்சொல்லியே என்னை வெறுப்பேத்திக்கொண்டிருந்தார்கள். வீட்டைவிட்டு நான் வெளியே செல்லவும் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால், நிம்மதியில்லாமல் தவித்தேன். செலவுக்குப் பணம் தரவில்லை. இந்தச் சமயத்தில்தான் என் தந்தையைக் கொல்லத் திட்டமிட்டேன். ஆனால், அன்றைய தினம் கோபத்தில் என் தாயைக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்தான்.  
ஜாலியான வாழ்க்கை! 
தஷ்வந்த் குறித்து போலீஸார் கூறுகையில், “குடும்பத்தில் மூத்த மகனான தஷ்வந்துக்கு, அவன் கேட்டதையெல்லாம் பெற்றோர் வாங்கிக் கொடுத்துள்ளனர். இன்ஜினீயரிங் வரை படித்த தஷ்வந்த், வேலைக்குச் சென்றுள்ளான். அப்போதுதான் அவனது வாழ்க்கை தடம் புரண்டுள்ளது. ஜாலியான வாழ்க்கை வாழ்வதற்காகப் பணத்தைச் சரமாரியாகச் செலவழித்துள்ளான். ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் சிக்கியபோது, சிறையிலிருந்த காலத்தில் அவனுக்குச் சிலர் அறிமுகமாகியுள்ளனர். இந்தப் பழக்கம் மேலும் அவனைப் பல தீயச் செயல்கள் செய்ய வழிகாட்டியிருக்கிறது. பின் ஹாசினி வழக்கில், ஜாமீனில் வெளிவந்த அவன் வீட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டிருக்கிறான். இதனால், தஷ்வந்துக்கும், அவனது குடும்பத்தினருக்கும் தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், பணம் கேட்டு குடும்பத்தினரைத் தொடர்ந்து தொந்தரவு செய்திருக்கிறான். இதனால் மீண்டும் வேலைக்குச் சென்றுள்ளார் தஷ்வந்தின் அப்பா சேகர். ஒருகட்டத்தில், பணம் கொடுக்க மறுத்ததும் கொலை செய்யும் அளவுக்கு தஷ்வந்த் துணிந்துவிட்டான்” என்றனர்.
விசாரணைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட தஷ்வந்த், அங்கு இரவில் வெகுநேரம் சட்டப் புத்தகங்களைப் படித்தான்.

“தஷ்வந்த் சிறையில் என்ன செய்கிறான் தெரியுமா?” - அத்தியாயம் - 8

ருவனைச் சிகரத்துக்கு உயர்த்துவதும் படுபாதாளத்துக்குத் தள்ளுவதும் அவன் பெற்ற அறிவும், செயலுமே ஆகும். ஆம்...தஷ்வந்தின் வாழ்க்கை திசைமாறுவதற்கும் அவனுடைய நடத்தையே முக்கியப் பங்கு வகித்துள்ளது. விசாரணைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த், அங்கு எப்படியிருக்கிறான் என்று சிறைத் துறை அதிகாரிகளிடம் விசாரித்தோம். 
“சட்டப் புத்தகங்களைப் படிக்கிறான்!” 
“தஷ்வந்த் அதிகாலையிலேயே எழுந்து, காலைக்கடன்களை முடிக்கிறான். பின்பு, உடற்பயிற்சி செய்கிறான். அதன்பிறகு, சிறையில் உள்ள சக சிறைவாசிகளிடம் அரட்டையடிக்கிறான். ஓய்வு நேரத்தில்கூட அவனுடைய கவனம் சட்டப் புத்தகங்கள் மீதே உள்ளது. இரவில், நீண்டநேரம் சட்டப் புத்தகங்களை வரிவிடாமல் படிக்கிறான். நீதிமன்றத்தில் வாதாடுவதற்காகவே அவன் சட்டப் புத்தகங்களைப் படித்து வருகிறான். மற்றபடி வழக்கம்போல அவனுடைய செயல்பாடுகள் உள்ளன” என்றனர் சிறைத் துறை அதிகாரிகள்.
இந்த நிலையில் ஹாசினி கொலை, சரளா கொலை, மும்பையில் போலீஸிடமிருந்து தப்பியது என தஷ்வந்த் மீது குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் கேஸ் ஹிஸ்ட்ரி தொடங்கப்பட்டு, அதில் அவன் தொடர்பான விவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், சிறுமி ஹாசினியின் வழக்கு வேகமெடுத்தது.
“நானே வாதாடுகிறேன்!”
இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 13-ம் தேதி தஷ்வந்தை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பெண்கள், யாரும் எதிர்பாராத நிலையில் செருப்பு உள்ளிட்டவற்றால் தஷ்வந்தைத் தாக்கினர். அப்போது தஷ்வந்தின் வழக்கறிஞர் விஜயகுமார் வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். “எனக்கு வாதாட வழக்கறிஞர்கள் வேண்டாம். நானே வாதாடுகிறேன். எனக்கு இப்போதே தண்டனை வழங்க வேண்டும்” என அவன் நீதிபதியிடம் தெரிவிக்க, “இதற்குச் சட்டத்தில் இடமில்லை... நீங்கள், இலவச சட்ட ஆலோசனை மையத்தை நாடலாம்” என்று நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்தினார். 
“ஹாசினியைக் கொலை செய்யவில்லை!”  
இதையடுத்து, தஷ்வந்த் தரப்பு சார்பாக ஆஜராக வழக்கறிஞர் ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விடுமுறை தினங்களிலும் ஹாசினி கொலை வழக்கு விறுவிறுப்பாக நடைபெற்றது. சாட்சிகளிடமும் விசாரணை நடைபெற்றது. செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து வரப்பட்டான். புழல் சிறையில் அவனுக்கான மதிய உணவு தயாரித்துக் கொடுக்கப்பட்டது. விசாரணை முடிந்து ஒருநாள் வேனில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்ட தஷ்வந்த், “நான் ஹாசினியைக் கொலை செய்யவில்லை” என ஊடகங்களில் தெரிவித்ததால், அவனிடம் மீடியாவினரை நெருங்கவிடாமல் காவல் துறையினர் கூடுதல் கவனமெடுத்துப் பார்த்துக்கொண்டனர். புத்தருக்குப் போதி மரம் மாற்றத்தைத் தந்ததுபோல... தனக்கும் சட்டப் புத்தகங்கள் ஒரு மாற்றத்தைத் தரும் என்ற நம்பிக்கையில், காத்திருந்தான் தஷ்வந்த். ஆனால் சாட்சிகளோ, அவனுக்கு எதிராகக் கோர்ட்டில் சாட்சியம் அளித்துக்கொண்டிருந்தனர். 
இதுதொடர்பாக தஷ்வந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம். அவர், “ஹாசினி கொலை வழக்குத் தொடர்பாக மொத்தம் 35 சாட்சிகளைக் காவல் துறையினர் தயார் செய்துள்ளனர். அதில், இதுவரை 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. ஆண்மைப் பரிசோதனை குறித்து செங்கல்பட்டு யூரியாலஜி மருத்துவர் செந்தில்குமார், ஹாசினி உடலை உடற்கூறு ஆய்வு செய்த சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவர் கிருத்திகா தேவி மற்றும் ஹாசினியின் பெற்றோர் பாபு, ஸ்ரீதேவி, அதே குடியிருப்பில் வசித்து வந்த புஷ்பா, கோகுல்தாஸ், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கோயில் தர்மகர்த்தா உள்ளிட்டோரின் சாட்சியங்கள் விசாரணைக்குப் பின் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், மாங்காடு கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்று பைக், ஹெல்மெட், காலி கேன் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்தச் சாட்சியங்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் தஷ்வந்துக்கு எதிராகவே சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்” என்றவர், யார்யார் என்னென்ன விளக்கங்கள் கொடுத்தனர் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
“தஷ்வந்த் ஆண்மை சக்தி உள்ளவர்தான்!”
“ ‘தஷ்வந்த் ஆண்மை சக்தி உள்ளவர்தான்’ என மருத்துவர் செந்தில்குமார் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அதுபோல, ‘தஷ்வந்த் வைத்திருந்த அப்பாச்சி பைக் எங்களிடம் வாங்கப்பட்டதுதான்’ என ஷோரூம் உரிமையாளர் சாட்சியளித்துள்ளார். பெட்ரோல் பங்கில் வேலை செய்த சந்தோஷ்குமார், ‘சம்பந்தப்பட்ட தினத்தன்று தஷ்வந்த், எங்களிடம் பெட்ரோல் வேண்டும் என்று கேட்டார். நாங்கள், கேனில் பெட்ரோல் தருவதில்லை என்று சொன்னோம். வீட்டில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது என அவர் கேட்டதால் பெட்ரோல் கொடுத்தோம். அதற்கு ஆக்சிஸ் பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தி பெட்ரோல் வாங்கினார்’ எனச் சாட்சியம் அளித்திருக்கிறார். எனவே, இந்த வழக்கில் தஷ்வந்துக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார் வழக்கறிஞர்.
இறுதியில், இந்த வழக்குத் தொடர்பாக 42 ஆவணங்கள் விசாரணை செய்யப்பட்டன. 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கின் இறுதிக்கட்ட விவாதம் முடிந்து இரு தரப்பினரும் வழக்குத் தொடர்பான எழுத்துபூர்வமான பதிலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். வழக்கின் இறுதி விசாரணைக்காக மாங்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், தஷ்வந்த்ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி வேல்முருகன், “வழக்குத் தொடர்பாக ஏதேனும் தெரிவிப்பதென்றால் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்” என்றார். இதைத்தொடர்ந்து அவர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. பிறகு, “பிப்ரவரி 19-ம் தேதி இந்த வழக்குக்கான தீர்ப்பு அளிக்கப்படும்” என்றார். 
தீர்ப்பு நாளான பிப்ரவரி 19-ம் தேதி புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் காலை 11.35 மணிக்கு, தஷ்வந்த் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டான். 
ப்ளீஸ் என்னை விட்ருங்க!” கதறும் ஹாசினியின் தந்தை!  அத்தியாயம் - 9
பொதுவாக, எவர் ஒருவரும் நிதானம் இழந்துவிட்டால், அவர் தம் வாழ்க்கையையே இழக்கவேண்டி வரும்; ஆகையால், எப்போதும் நிதானத்தை இழக்காமல் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கூற்று, தஷ்வந்த் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. அவன் நிதானத்தை இழந்ததால்தான், பாதகச் செயல் புரிந்து, நீதிமன்றத்தால் இன்று தண்டனைக்கு ஆளாகியிருக்கிறான்.
தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும்!”
பிப்ரவரி 19, அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு முன்பாகவே ஹாசினியின் தந்தை ஶ்ரீனிவாஸ் பாபு, நீதிமன்றத்துக்கு வந்துவிட்டார். முதல் மாடியில் உள்ள வழக்கறிஞரின் அறையில் அவர் அமர்ந்திருந்தார். அங்கிருந்த வழக்கறிஞர்கள், “தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும்” என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவருடைய முகம் களையிழந்தே காணப்பட்டது. புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் காலை 11.35 மணிக்கு, தஷ்வந்த் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டான். ஹாசினி வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால், நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு, வழக்கத்தைவிடவும் அதிக அளவில் போடப்பட்டிருந்தது. தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதைப் பார்த்த ஶ்ரீனிவாஸ் பாபுவின் முகம் கடுமையான கோபத்தில் சிவந்து காணப்பட்டது. ஆனால், அவர் தன்னுடைய கோபத்தையும் குமுறலையும் அடக்கிக்கொண்டு மிகவும் அமைதியாகவே இருந்தார். நீதிமன்றத்துக்குள் தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதும், நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டன. செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ஶ்ரீனிவாஸ் பாபு அடிக்கடி தன் மனைவி ஶ்ரீதேவிக்கு, அங்கு நடக்கும் தகவல்களைக் கைப்பேசியில் தெரிவித்தபடியே இருந்தார். நேரம், சரியாக மதிய உணவு இடைவேளையை ஞாபகப்படுத்தியது. மதிய உணவு இடைவேளையைக் கருத்தில்கொண்டு பிற்பகல் 3 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், பத்திரிகையாளர்கள், காவல் துறையினர், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவரும் சாப்பிடச் சென்றனர். பாபுவை எல்லோரும் சாப்பிட அழைத்தனர். ஆனால், அவர் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. “ப்ளீஸ்... என்னை விட்ருங்க. என் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கும்வரை என்னால் சாப்பிட முடியாது” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
நியாயம் கிடைச்சிடும்!”
அந்தக் கண்ணீருடன், மனைவி ஶ்ரீதேவிக்கு மீண்டும் போன் செய்கிறார். “தேஜீ சாப்பிட்டானாம்மா... நீ சாப்பிட்டாதான் அவனும் சாப்பிடுவான். ரெண்டு பேரும் சாப்பிடுங்க. ‘ஹாசினி அக்காவுக்கு நியாயம் கிடைச்சிடும்’னு அவன்கிட்ட சொல்லும்மா” என்றபடியே கண்கலங்குகிறார். தொடர்ந்து வார்த்தைகளைப் பேச முடியாமல், அவருடைய நிலையையும் கண்ணீரையும் பார்க்கும் மற்றவர்களுக்கும் அதேபோன்ற உணர்வே ஏற்பட்டது. ‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது’ என்பார் திப்பு சுல்தான். உண்மைதான்... பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும்போது, அவர்களுடைய வலிகளை மற்றவர்களும் உணர்ந்துகொள்ளும்போதுதான், அந்த வலி எல்லோருக்கும் பொதுவானதாக அறியப்படுகிறது. அதனால்தான், பாபு கதறி அழுதபோது, மற்றவர்களும் அவருடைய நிலையைக் கண்டு மனம் வருந்தினார்கள்.
ஒருவழியாக, உணவு இடைவேளை முடிந்து மணி மூன்றைத் தொட்டபோது, மீண்டும் நீதிமன்றம் பரபரப்பானது. அதுவரை ரகசியமாக நடத்தப்பட்ட இறுதி விசாரணையைத் தொடர்ந்து, காலையில் நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படாத பத்திரிகையாளர்கள், தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது அனுமதிக்கப்பட்டனர். நீதிபதிக்கு எதிரே தஷ்வந்த் நின்றிருந்தான். பிற்பகல் 3 மணி 2 நிமிடம்... தஷ்வந்தைக் குற்றவாளிக் கூண்டுக்குள் வரச்சொல்லிய நீதிபதி வேல்முருகன், “குற்றம் நிரூபணம். தண்டனைகுறித்த விவரங்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் தெரிவிக்கப்படும்” என்றார்.
கொஞ்சம் பொறுமையாக இரு!”
நீதிபதி அங்கிருந்து கிளம்பியதும், தஷ்வந்த் அங்கே அமர்ந்திருந்த வழக்கறிஞர் ராஜ்குமாரிடம், “Sir Please, Give me a White Paper and pen” என்று கேட்கிறான். அதற்கு ராஜ்குமார், “கொஞ்சம் பொறுமையாக இரு, தஷ்வந்த். நீ... அங்கே உட்காரு” என்கிறார். அடுத்த சில நிமிடங்களில் பத்திரிகையாளர்களைப் பார்த்து, “Hello, why are writing that please write what Judge says” என்றதும், அங்கே இருந்த ஒரு பத்திரிகையாளர் பதில் கொடுக்க... சட்டென பரபரப்பாகிவிட்டது, நீதிமன்ற வளாகம். பதறிய போலீஸார்... தஷ்வந்தைப் பார்த்து, “அமைதியாக உட்கார் தஷ்வந்த்” என்று அறிவுறுத்தினார்கள்.
ஒன்றரை மணி நேரம் கழித்து, “இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின்கீழ், சிறுமி ஹாசினியைக் கொலை செய்த குற்றத்துக்காக, தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது” என நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். அவர், தண்டனையை அறிவித்த அடுத்த கணமே, “நீதியரசர் வேல்முருகன் வாழ்க... நீதியரசர் வேல்முருகன் வாழ்க” என வெளியே திரண்டிருந்த பொதுமக்களின் குரல் விண்ணைப் பிளந்தது.
தஷ்வந்த் மனிதன் அல்ல..!”
தீர்ப்பைக் கேட்ட சந்தோஷத்தில் பாபு, வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். அவருடைய கண்களில், கண்ணீர் தாரை தாரையாய்க் கொட்டியது. தனது செல்ல மகளின் புகைப்படத்தை செல்போனில் பார்த்து, முத்தம் கொடுத்து கதறித் துடித்தார். தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாபு, “ஹாசினியின் மரணத்துக்கு நியாயம் கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தீர்ப்பால் நான் முழு திருப்தியடைகிறேன். இந்த வழக்குக்காக நான் போராடியபோது, 90 சதவிகிதம் பின்னடைவு இருந்தது. ஆனால் வழக்கறிஞரும் போலீஸாரும், நீதிமன்றத்தையும் சட்டத்தையும் நம்பச் சொன்னார்கள். தற்போது நீதிமன்றம் நியாயத்தை வழங்கியுள்ளது. தஷ்வந்த் மனிதன் அல்ல. அவன், ஓர் அரக்கன். அவனிடம் மனிதத்தன்மை இருந்ததில்லை. எல்லோரும் குழந்தைகளை மென்மையாகப் பார்ப்பார்கள்; அவர்களுடன் விளையாடுவார்கள். ஆனால், தஷ்வந்த் கொடூரமாக நடந்துகொண்டான். என் செல்ல மகளைக் கொலை செய்ததுடன், அவனுடைய தாயாரையும் கொலை செய்தவன் தஷ்வந்த். நான் இப்படி நடக்கும் என்று ஒருநாளும் நினைத்ததில்லை. மனிதர்கள் இப்படிக்கூட நடந்துகொள்வார்கள் என்று நான் நினைத்ததில்லை. மனிதத்தன்மை உள்ளவர்கள் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள். தஷ்வந்துக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனை சரியானதே. இவனைப் போன்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்” என்றார் கண்ணீருடன்.
தஷ்வந்த்துக்கு வழங்கப்பட்ட தண்டனையைப் பலரும் வரவேற்றனர். ஆனால், அவன் மட்டும் வேறொரு முடிவுக்காகக் காத்திருக்கிறான் என்று அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ராஜ்குமார் தெரிவித்தார்.
மேல்முறையீடு செய்த தஷ்வந்த்! - ‘ஹாசினி’ எனும் பட்டாம்பூச்சி! - அத்தியாயம் - 10
ஹாசினி வழக்கு மிகக் குறைந்த நாள்களுக்குள் அதிவிரைவாக விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பைப் பொதுமக்களும், பெண்கள் நல அமைப்புகளும் வரவேற்றன.
குறிப்பாக, பா... இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதை வரவேற்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தஷ்வந்துக்குத் தூக்குத் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மிகவும் சரியானதும், வரவேற்கத்தக்கதுமாகும். தஷ்வந்த் செய்த செயலை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதைக்கிறது. தாயின் சகோதரனாகவோ, தந்தையின் நண்பனாகவோ நினைத்து நம்பிவந்த பால்மணம் மாறாத ஆறு வயது சிறுமியைச் சீரழித்து, சிதைத்த கொடிய பாவியை மன்னிப்பதோ, குறைந்த தண்டனையுடன் விடுவிப்பதோ நீதியாக இருக்காது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பைச் சட்டப்படி நீதிமன்றம் நிறைவேற்றியிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
தஷ்வந்த் மீது, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, குற்றவாளிக்குத் தண்டனைப் பிரிவு 363-ல் பெற்றோரிடமிருந்து குழந்தையைக் கடத்துதல் என்ற பிரிவின்கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், பாலியல் துன்புறுத்தலுக்காகக் குழந்தையைக் கடத்திய குற்றத்துக்காக 366-ன்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், குழந்தையை மானபங்கப்படுத்திய குற்றத்துக்காக 354-பி பிரிவின்கீழ், 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தடயங்களை மறைக்க முயற்சி செய்தமைக்காகப் பிரிவு 201-ன்கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் 31 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும், அரசியல் சட்டத்தின் 302-வது பிரிவின்கீழ் கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல், குழந்தைகள் பாலியல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6-ன்கீழ் 10 ஆண்டுகளும், பிரிவு 8-ன்கீழ் 5 ஆண்டுகளும் என 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்களிடம் பேசிய ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன், “குற்றவாளி தஷ்வந்த் மீது இந்தியத் தண்டனைப் பிரிவின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட 5 குற்றங்களும் நிரூபிக்கப்பட்டதாகத் நீதிபதி தெரிவித்தார். இந்தத் தீர்ப்பால் அரசு மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பு நிம்மதியடைந்துள்ளனர். இந்த வழக்கில் மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்தால், குற்றவாளி தரப்பு வாதத்தைப் பொறுத்து எங்கள் வாதத்தை முன்வைப்போம். இந்தத் தீர்ப்பின்மூலம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை ஒரு சாதாரணமான தீர்ப்பாக எடுத்துக்கொள்ளாமல், நீதிமன்றம் விரைந்து விசாரித்து உச்சபட்ச தீர்ப்பை வழங்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்.
முன்னதாக, தஷ்வந்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர் ராஜ்குமார், “தஷ்வந்துக்கு எதிரான தீர்ப்பைத் தொடர்ந்து அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை என்பதால், அரசே மேல்முறையீடு செய்யும். மரண தண்டனை என்பதால் வழக்கைப் பரிசோதனை செய்ய, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். இந்த வழக்கையும் மேல்முறையீட்டு வழக்கையும் சேர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். விசாரணையின் அடிப்படையிலேயே தீர்ப்பை நிறைவேற்றுவது குறித்து நீதிபதிகள் முடிவு செய்வார்கள். அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படும். கீழ் நீதிமன்றத்தில் விசாரித்ததுபோலவே உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கவும் தமிழக அரசே அனைத்து வசதிகளையும் செய்து தரும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
பின்னர் அவரிடம், “நீதிபதி வழங்கிய மரண தண்டனைக்குப் பிறகு தஷ்வந்த் எப்படி இருக்கிறார்... மரணம் குறித்து பயந்திருக்கிறாரா...கழிவிரக்கத்தில் கலங்கியிருக்கிறாரா” எனக் கேள்வி எழுப்பினோம். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் ராஜ்குமார், “கலங்கிப்போவதும் கழிவிரக்கம் கொள்வதும் தன் தவறுகளை நினைத்து வருந்தும் ஆள்களுக்குத்தான் வரும். தன்னால் இவ்வளவு கெட்ட விஷயங்கள் நடந்துவிட்டதே என்று மனம் வருந்தி, குறைந்தபட்சம் சாப்பிடப் பிடிக்காமலாவது தஷ்வந்த் இருந்திருந்தால், அவன் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான் என்று சொல்லலாம். பொதுவாக, மரண தண்டனை தீர்ப்பு அல்லது கடுமையான ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட குற்றவாளி கதறி அழுவார்.
ஆனால், தஷ்வந்த் முகம் தெளிவாக இருந்ததாக ஒரு பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அதையே நானும் சொல்ல விரும்புகிறேன். தனக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டதும், அடுத்து அப்பீல் செய்வது தொடர்பான பரபரப்பில் மூழ்கிவிட்டான் தஷ்வந்த். தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் வெளியே வரும்போது, கையில் ஒரு பேப்பர் இருந்ததைப் பார்த்தீர்களா? அது, அந்தத் தீர்ப்பின் நகல் (Copy). அடுத்து, அப்பீல் செய்வதற்கான நடவடிக்கையில் அவன் அப்போதே இறங்கிவிட்டான். ‘தஷ்வந்துக்காக இவரே அப்பியர் ஆவார். இவரே கிரிட்டிசைஸ் பண்ணுவார்’ என்றெல்லாம் சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். லீகல் ஃபார்மாலிட்டிக்காக... அரசு சொன்னதால்தான், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு தஷ்வந்த் கேஸில் என் கடமையைச் செய்தேன். அவன் சார்பாக ஒரு லாயர் ஆஜராகாமல் தீர்ப்புக் கொடுக்க முடியாது என்பதுதான் சட்டம். மற்றபடி, எனக்கும் மனம் நிறைய வேதனை இருக்கிறது” என்றார் சற்றே வருத்தத்துடன்.
இந்த வழக்கு மேல்முறையீடு செய்யும்பட்சத்தில், அதிலிருந்து குற்றவாளி தப்பிக்க ஏதேனும் சாத்தியங்கள் இருக்கிறதா” என ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம்... “இந்த வழக்கைப் பொறுத்தவரை, இதில் நேரடிச் சாட்சிகள் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைச் சாட்சிகள் மட்டுமே இருக்கின்றன என்று எதிர்தரப்பு சொல்கிறது. ஆனால், இதுபோன்ற அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘மேல் முறையீடு செய்வோம்’ என்று சொல்வது அவர்களுடைய உரிமை. இதில், எந்தக் கருத்தும் நாம் சொல்ல முடியாது” என்றார்.
இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டுக்குத் தாக்கல் செய்திருக்கிறான், தஷ்வந்த். இது ஒருபுறமிருக்க... மறுபுறம், ஹாசினியின் தந்தையான ஶ்ரீனிவாஸ் பாபுவை மிரட்டியதாக வழக்கு ஒன்றும் அவர்மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஹாசினியின் குடும்பம்தான் மிகவும் கவலையில் இருக்கிறது. தன்னுடைய குழந்தையை இழந்து வாடும் அந்தக் குடும்பம் அடுத்து, மேல்முறையீட்டைச் சந்திக்கக் காத்திருக்கிறது.

அவர்கள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை!” -  அத்தியாயம் - 11

`துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அஃது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே’ என்று ஒரு பொன்மொழி சொல்லப்படுவதுண்டு. ஆம், உண்மைதான்... ஹாசினி குடும்பம் அடைந்த துன்பம் சாதாரணமானதா? இல்லையே... எந்தக் காலத்திலும் மறக்க முடியாத பாடத்தையல்லவா அந்தச் சம்பவம், அவர்கள் மனதில் விதைத்துச் சென்றிருக்கிறது.
“ஹாசினியின் நினைவிலிருந்து மீளவில்லை!” 
தஷ்வந்துக்குத் தண்டனை வழங்கப்பட்ட பின்னர், ஹாசினியின் குடும்பம் இப்போது எப்படியிருக்கிறது என அந்தக் குடும்பத்தின் நண்பரும், `நட்சத்திரா பவுண்டேஷன்’ என்ற என்.ஜி.ஓ அமைப்பின் நிறுவனருமான ஷெரின் பாஸ்கோவிடம் கேட்டோம். ``எப்போதும் போலவே வேலைக்குச் சென்றுவருகிறார் ஶ்ரீனிவாஸ் பாபு. ஆனால், மகளை இழந்த வடு மட்டும் அவர் மனதிலிருந்து முற்றிலும் மாறவே இல்லை. அவருடைய மனைவி ஶ்ரீதேவியும் அதே கவலையுடன்தான் இருக்கிறார். நிதி உதவி எதையும் அந்தக் குடும்பம் எதிர்பார்க்கவில்லை. ஹாசினி மரணத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே எண்ணமாக இருக்கிறது” என்றவர், சிறு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்தார். ``நான், ஹாசினியின் பிறந்த நாள் அன்று அவள் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கு அவள் படத்துக்கு மாலை போட்டிருந்தனர். அவள் படத்துக்கு முன் அவளுக்குப் பிடித்த ஸ்வீட்ஸ், சாக்லேட்ஸ், பிஸ்கட்ஸ் மற்றும் ஃப்ரூட்ஸ் போன்றவற்றை வைத்திருந்தனர். அதைப் பார்த்ததும் எனக்கே கண்ணீர் வந்துவிட்டது. ஶ்ரீனிவாஸ் பாபுவிடம், ‘கவலைப்படாதீர்கள். அவளைப்போலவே (ஹாசினி) நானும் உங்களுக்கு ஒரு மகளாக இருக்கிறேன். அதன்மூலம் ஒரு லைஃப் கிடைக்கும்’ என்று ஆறுதல் கூறினேன். அவர் சந்தோஷப்பட்டார். ஆனாலும், அவர்கள் ஹாசினியின் நினைவிலிருந்து இன்னும் மீளவில்லை” என்றார், சற்றே வருத்தத்துடன். 
``ஹாசினியின் மரணத்துக்கு நியாயம் கிடைத்துள்ளது என்று நினைத்திருந்தோம். ஆனால், தற்போது அவன் (தஷ்வந்த்) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறான். இதனால், நாங்கள் மீண்டும் கவலையில் இருக்கிறோம்” என்றார் ஶ்ரீனிவாஸ் பாபு, கண் கலங்கியபடி.
பாதிப்பு ஏற்படுத்தும் இணையதளங்கள்!
``கண்ணீரிலிருந்து இன்னும் மீளாமல் இருக்கும் ஹாசினியின் குடும்பத்துக்கு மேல்முறையீட்டில் வழங்கப்படும் தீர்ப்பே சற்று ஆறுதலாக இருக்கும்” என்று எல்லோரும் சொல்லும் இந்தவேளையில், ``தஷ்வந்தைப் போன்றவர்கள் குழந்தைகள் மீது ஈர்ப்புக்கொள்வது ஏன்” என்று மனநல மருத்துவர் திருநாவுக்கரசுவிடம் பேசினோம்... ``சமூக ஊடகங்கள், இணையதளங்களின் தாக்கம் இளம்தலைமுறையைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அவற்றைச் சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். கையாளத் தெரியாதவர்கள், இதுபோன்ற குற்றங்களைச் செய்து, சிக்கிக்கொள்கிறார்கள். குழந்தைகள் வன்புணர்வைப் பல வலைதளங்கள் கற்றுத் தருகின்றன. டீன் ஏஜைக் கடந்த இளைஞர்களை, அவை அதிகம் பாதித்திருக்கின்றன. குழந்தைகளை மிரட்டி எளிதில் பணியவைத்துவிட முடியும் என்ற எண்ணம். ஆனால், அவன் உடலை எடுத்துச் சென்று எரித்ததைப் பார்க்கும்போது, அவன் அனுபவப் பின்னணியுள்ள குற்றவாளியாகவே தெரிகிறான். திட்டமிடப்பட்ட குற்றமாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது” என்றார், மிகத் தெளிவாக.
என்ன சொல்கிறது பாக்ஸோ?
குழந்தைகள் தேசத்தின் சொத்து என்கிறது, தேசியக் கொள்கை. ஆனால், இங்குதான் மூன்றில் இரண்டு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஹாசினியைப் போல எத்தனையோ குழந்தைகள் தினமும் யாரோ ஒரு காமுகனால் துன்புறுத்தப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் 8,904  பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2015-ம் ஆண்டு, அது 14,913 ஆக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் மட்டும் 125 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல அரசுகளிடம் எந்தப் புள்ளிவிவரமும் இல்லை.
பாலியல் வன்முறைக்கு உள்ளாகி குழந்தைகள் உயிரிழக்கும்போதுதான் இந்த விவகாரம் பெரிதாகி வெளியே வருகின்றன. ஆனால், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அறிக்கையின்படி, இந்தியாவில் பிறக்கும் மூன்றில் இரண்டு குழந்தைகள், உடல்ரீதியான தீங்கிழைத்தலுக்கு உள்ளாகின்றனர். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், 2012-ம் ஆண்டில் பாக்ஸோ (Protection of Children from Sexual Oeeences Act-POCSO) சட்டத்தைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இந்தச் சட்டப்படி குற்றத்தின் தன்மையைப் பொறுத்து, மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அளிக்கலாம். அதிகபட்சம் ஓராண்டுக்குள் வழக்கின் விசாரணையை முடித்துத் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்தச் சட்டத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதும் செயல்படுத்துவதும் மேம்படுத்துவதும் மாநிலங்களில் உள்ள குழந்தைகள் நல உரிமை ஆணையத்தின் பணி. ஆனால், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (பாக்ஸோ) போன்ற மிக வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புஉணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.
யுனிசெஃப் நடத்திய ஆய்வு!
குழந்தைகளைப் பொறுத்தவரை தற்போது பெரும்பாலும் உடல், உணர்வு, பாலியல்ரீதியான தொந்தரவுகளை அதிகம் சந்திக்கின்றனர். இதுதவிர நிராகரிப்புகள், கைவிடப்படுதல், தவறாய்ப் பயன்படுத்துதல் போன்ற பாதிப்புகளுக்கும் அவர்கள் ஆளாகின்றனர். இதுகுறித்து உலக நலவாழ்வு நிறுவனம் (WHO), ``இதுபோன்ற வன்முறைகள் குழந்தைகளின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால், அவை எதிர்காலத்தில் உடலளவிலும், மனதளவிலும் பெரும் சிக்கலையும், சிலவேளைகளில் மரணத்தையும் தந்துவிடுகிறது” என்கிறது. 
கடந்த ஆண்டு இந்தியக் குழந்தைகள் 1,000 பேர் தேர்வு செய்யப்பட்டு யுனிசெஃப் அமைப்பால் ஆய்வு செய்யப்பட்டனர். இந்த ஆய்வில், 96 சதவிகிதக் குழந்தைகள் இந்தியாவில் நடக்கும் வன்முறைகள் காரணமாகப் பயப்படுவதாகக் கூறியுள்ளனர். மேலும், அதில் 51 சதவிகிதம் பேர் நேரடியாகத் தாங்களே பாதிக்கப்படுவதாகக் கூறியுள்ளனர். 
குழந்தைகளின் உடலைக் காயப்படுத்தும் செயல்களே உடல்ரீதியிலான வன்முறையாகும். அவை பெரும்பாலும் வீடுகளிலும், ஆதரவு இல்லங்களிலும், பணி செய்யும் இடங்களிலும் நிகழ்கின்றன. குழந்தைகளுடைய மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை, உணர்வுரீதியிலான வன்முறையாகும். இவை சரியான வாழ்க்கைச் சூழல் அமையாதது, அச்சுறுத்துவது, தரக்குறைவாய் நடத்துவது உள்ளிட்டவற்றால் நிகழக்கூடியவை. இதனால் குழந்தைகளுடைய எதிர்காலமும், வளமான வாழ்வும் கேள்விக்குறியாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. நான்கு சுவர்களுக்குள்ளேயே நடக்கும் வன்முறை பாலியல்ரீதியிலானது. இது மிகமிகக் கொடுமையானது. இந்த வன்முறைக்குத்தான் சிறுமி ஹாசினி ஆளாகியதோடு, எரித்துக் கொலையும் செய்யப்பட்டாள்.
தப்பிவிடும் பாலியல் குற்றவாளிகள்!
பாலியல் குற்றவாளிகள் குறித்து குழந்தைகள் நல உரிமை ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம். ``வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களை, `இவன் ஒரு பாலியல் குற்றவாளி. உளவியல்ரீதியாகப் பாதிப்புடையவன். இவனிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்’ எனப் பொது இடங்களில் விளம்பரம் செய்வார்கள். ஆனால், இங்கு, பெரும்பாலான பாலியல் குற்றவாளிகள் தண்டனையே பெறாமல் தப்பிவிடுகிறார்கள். பாக்ஸோ சட்டப்படி பதிவுசெய்யப்படும் வழக்குகளில், ஐந்து சதவிகித வழக்குகளில்கூடக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை” என்றார். 

தஷ்வந்த் தவறுசெய்ய என்ன காரணம்? - அத்தியாயம் - 12 

``தவறான நண்பர்களின் பழக்கவழக்கம், சிறுசிறு தவறுகளுக்கு எதிர்ப்பு இல்லாமை, தன் பெற்றோர் காட்டிய ஆதரவு, பணத்தினால் மகிழ்ச்சியான வாழ்க்கை, ஹாசினி வழக்கில் ஜாமீன் கிடைத்தது போன்ற காரணங்களே தஷ்வந்தை மேலும் மேலும் குற்றம்செய்யத் தூண்டியிருக்கிறது” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

``தவறு செய்பவர்களிடமே ஒரு புரிதல் வேண்டும்!” 
``தஷ்வந்த் சின்னப் பையன். இதுபோன்று நடக்கும் என்று அவன் யோசிக்கவில்லை” என்கிறார், நட்சத்திரா பவுண்டேஷன் என்னும் என்.ஜி.ஓ. அமைப்பின் நிறுவனரான ஷெரின் பாஸ்கோ. மேலும் அவர், ``தங்கள் குழந்தைகள் சிறுசிறு தவறுகள் செய்யும்போதே, பெற்றோர் அவர்களைக் கண்டித்துத் திருத்த முன்வர வேண்டும். ஆனால், அவர்கள் அதை விட்டுவிட்டுக் குழந்தைகளைக் காப்பாற்றத்தான் முயற்சி செய்கின்றனர். இதனால், குழந்தைகளுக்குத் தைரியம் வந்துவிடுகிறது. அதற்காக நாம் பெற்றோர்களையும் குறைசொல்ல முடியாது. ஏனெனில், எல்லாப் பெற்றோருமே குழந்தைக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். என் அப்பாகூட எனக்கு ஆதரவாகத்தான் இருப்பார். தவறு செய்பவர்களிடமே ஒரு புரிதல் வேண்டும். அதாவது, ‘நான் இவ்வளவு தப்பு செய்தும் பெற்றோர் நமக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்களே... அதற்காகவாவது நாம் திருந்த வேண்டும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்க வேண்டும். ஒருசிலர், இதை ஏற்றுக் கொள்கிறார்கள். வேறுசிலர், ஏற்றுக்கொள்வதில்லை. தவறு செய்பவர்கள் இதை நினைத்தால், அவர்களாகவே திருந்த ஒரு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, இதேபோன்ற இன்னொரு வழக்கில் தீங்கிழைத்தவருக்கு 37 நாள்களில் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படித் தீங்கிழைத்தவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதால் அவர்கள் வேறு தவறு செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்” என்று கேள்வியெழுப்புகிறார்.
பாலியல் சித்ரவதைக்கான அறிகுறிகள்!
பெரும்பாலான பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளியே சொல்வதில்லை. அதற்கு முதற்காரணம் அவர்கள் அச்சுறுத்தப்படுவதுதான். அப்படிப்பட்ட பாதிப்பில் இருக்கும் குழந்தைகளைக் கீழ்க்கண்ட சில அறிகுறிகள், நடவடிக்கை மாற்றங்கள் மூலம் அறியலாம்.
* நடப்பதிலோ, உட்காருவதிலோ சிரமப்படுதல்.
* சிறுநீர், மலம் கழிப்பதில் சிரமம்.
* பாலுறுப்பில் திரும்பத்திரும்ப ஏற்படும் நோய்த்தொற்று.
* சிலரின் பெயரைச் சொன்னாலே மிரள்வது. 
* மன உளைச்சலால் ஏற்படும் உடல்நலக் குறைவு.
* சாப்பாட்டை வெறுத்து ஒதுக்குவது.
* படிப்பில் ஏற்படும் பாதிப்புகள், திடீரென மதிப்பெண் குறைவது, ஞாபகச் சக்திக் குறைபாடு, விளையாட்டில் ஆர்வம் காட்டாமை, மனச்சோர்வு.
* திடீரென புதிய பொருள்கள், பணம் வைத்திருப்பது
* வயதுக்குப் பொருத்தமற்ற பாலுறவு பற்றிய பேச்சு, நடவடிக்கை போன்றவற்றின்மூலம் அறியலாம். எனினும், இந்த அறிகுறிகள் இருந்தாலே அதுதான் காரணம் எனக் கருதத் தேவையும் இல்லை.
``குடும்ப உறுப்பினர்களே காரணம்!”
``பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட சித்ரவதைகளை வெளியே சொல்லாததற்கு என்ன காரணம்” என்று குழந்தைகள் உரிமை மற்றும் முன்னேற்ற மைய இணை இயக்குநர் ஸ்டெக்னா ஜென்ஸியிடம் பேசினோம். ``பாலியல் குற்றவாளிகளைப் பார்த்து அவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியாது. நம் வீட்டுக்குப் பக்கத்திலோ, பள்ளியிலோ, நம் வீட்டிலேயோகூட இருக்கலாம். குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளில் 80 முதல் 90 சதவிகிதக் குற்றங்கள், குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகத்தான் நடக்கிறது. நிறைய சம்பவங்களில் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களே காரணமாக இருக்கிறார்கள். 
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். சொன்னால் நம்பமாட்டார்கள் என்ற எண்ணம், பயம், உறவுகளை இழந்துவிடுவோமோ என்ற அச்சம்... எனப் பல காரணங்களால் குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததை வெளிப்படுத்துவதில்லை. முதலில் குழந்தைகள் சொல்வதை வீட்டில் இருப்பவர்கள் நம்ப வேண்டும். அவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். `உன் உடலுக்கு நீதான் பொறுப்பு. அதைத் தொட யாருக்கும் உரிமை இல்லை. உன் உடலை யாரும் தொட்டால் அதுபற்றி வெளியில் பேசலாம். அதற்கு நீ காரணம் அல்ல... தவறு செய்தவர்களே காரணம்’ என்ற தெளிவைக் குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள், குரலற்றவர்கள். அவர்களால் எதிர்ப்புக் காட்ட முடியாது என்பது ஓர் உலகளாவிய மனோபாவம். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் சண்டை முதல், நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் போர்வரை எல்லாவற்றிலும் குழந்தைகள்தாம் முதல் பலிகடா ஆவார்கள். 
“எளிதில் அடையாளம் காண முடியாது!” 
இன்னொரு காரணம், வக்கிர எண்ணம். குழந்தைகளைப் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல் ரகம் பீடோபைல்ஸ் (Pedophiels). இஃது ஒருவிதமான, வக்கிர மனச்சிக்கல் நிலை. இந்தப் பாதிப்பு இருப்பவர்கள், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே குறிவைப்பார்கள். இன்னொரு வகை Opportunistic abuser. இவர்களை சைல்டு மொலெஸ்டர் (Child Molester) என்றும் அழைப்பார்கள். இவர்கள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது குழந்தைகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள். மூன்றாவது ரகம், Professional perpetrators. எப்போதும் குழந்தைகள் தங்களுடனேயே இருக்கும் சூழலை இவர்கள் அமைத்துக் கொள்வார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல... நம்முடனே வாழ்பவர்கள்தாம். அவர்களை எளிதில் அடையாளம் காண முடியாது. குழந்தைகளோடு பழகுவதை வைத்தே தெரிந்துகொள்ள முடியும். தஷ்வந்த், இரண்டாவது அல்லது மூன்றாவது வகையைச் சேர்ந்தவனாக இருக்கலாம். பாலுணர்வைக் கையாளத் தெரியாததன் விளைவு இது. நிச்சயமாக, இது முதல் முறை அல்ல... பலமுறை ஹாசினியிடம் அவன் தவறாக நடக்க முயற்சி செய்திருப்பான். 22 வயதுப் பையன், 7 வயதுப் பெண்ணை ஒரு பாலியல் பிண்டமாகப் பார்க்கிறான் என்றால், அவன் படித்த படிப்பு என்னதான் கற்றுக்கொடுத்தது? பாலியல் விழிப்புஉணர்வே இல்லாத சமூகத்தில்தான் இதுமாதிரி சம்பவங்கள் நடக்கும். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தகுந்த பாலியல் புரிதலை உருவாக்கியே தீர வேண்டும். அதை மறைமுகமாக அணுகியதன் விளைவுதான் தஷ்வந்தின் இந்தக் கோரச் செயல்” என்றார் ஜென்ஸி.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாலியல் சீண்டல் பற்றிய புரிதல் இருந்தாலும், அதற்குத் தீர்வாய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மட்டும்தான் தெரிவதில்லை. 

“விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்!”  - அத்தியாயம் - 13

`இல்லத்தில் குழந்தை, இன்பத்தின் ஊற்றுவாய்’ என்று சொல்லப்படும் இந்த உலகில்தான் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பாலியல் சீண்டலின் புரிதலுக்குத் தீர்வு! 
“சிறுமிகளின் பாலியல் துன்பறுத்தல்களுக்கு என்ன காரணம்” என்று நட்சத்திரா பவுண்டேஷன் என்ற என்.ஜி.ஓ அமைப்பின் நிறுவனரான ஷெரின் பாஸ்கோவிடம் கேட்டோம். “சிறுமிகள் மட்டுமல்ல... இன்று எல்லாப் பெண்களும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில், சிறுமிகளிடம் மட்டும் பாலியல் சீண்டல்கள் பெருகுவதற்குக் காரணம், அவர்கள் வெளியில் சொல்லமாட்டார்கள் என்ற தைரியம் சிலரிடம் இருக்கிறது. வெளியில் சொன்னாலும் குழந்தைதானே... அதை யார் நம்பப்போகிறார் என்கிற தைரியமும் அவர்களிடம் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்குப் பாலியல் சீண்டல் பற்றி ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால், அதற்குத் தீர்வாய் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றுமட்டும்தான் தெரிவதில்லை. ஒருசில குழந்தைகள் பெற்றோரிடம் சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்லும்போது, என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு, அவர்கள் சொல்வதைக் கூடுதல் கவனம் எடுத்து பெற்றோர் விரைந்து செயல்பட வேண்டும்.
தற்போது, பிரபலங்களும் பாலியல் சீண்டல்கள் பற்றித் துணிந்து புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளதால், தவறு செய்பவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுகிறது. அதுபோல் குழந்தைகளும் இதுபோன்று பாதிக்கப்பட்டால், உடனே பெற்றோரிடம் சொல்ல வேண்டும். அதற்கான விழிப்பு உணர்வை எல்லோரும் ஏற்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும்போது, அதைப் பார்த்து மற்றவர்களுக்கு அதுபோன்று தவறு செய்யக் கூடாது என்ற எண்ணம் வந்துவிடும்” என்றவரிடம், “இதுபோன்று தவறுசெய்பவர்கள் பெருகுவதற்கு என்ன காரணம்? குழந்தைகளின் பாலியல் சீண்டல்களுக்குத் தனிச் சட்டம் வேண்டுமா” என்று கேட்டோம். 
``இப்போதிருக்கும் சட்டங்களே போதும்!” 
“கல்வியறிவு, போதுமான விழிப்பு உணர்வு இல்லாததால்தான் இதுபோன்ற குற்றவாளிகள் பெருகுகிறார்கள். இவர்கள்மீது ஒரு சாதாரண புகார்கூடக் கொடுக்கத் தெரியாத அளவுக்கு கல்வியறிவு, விழிப்பு உணர்வு இல்லாத பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குழந்தைகளின் பாலியல் சீண்டல்களுக்கு இப்போதிருக்கும் சட்டங்களே போதும். அதுவே, கடுமையானவை. சில சந்தர்ப்பங்களில் ஒரு வருடக் காலத்தில் வழக்கு முடியாவிட்டால் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் குறித்த வழக்குகளை அதன் அவசியம் கருதி விரைவாக முடிக்க வேண்டும். இதில் தீங்கிழைத்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு நீதிமன்றம் ஆவன செய்ய வேண்டும். இந்தச் சட்டங்களைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்” என்றார் மிகத் தெளிவாக.
``வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்!” 
``குழந்தைகளின் பாலியல் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு என்ன” என்று வழக்கறிஞர் கண்ணதாசனிடம் பேசினோம். “இன்று இருக்கும் சட்டங்களைச் சரியாக அமல்படுத்தி, அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். குழந்தைகளுக்கு எதிரான சில பாலியல் வழக்குகள், இன்னும் எஃப்.ஐ.ஆர் நிலையிலேயே உள்ளன. ஆக, இதுபோன்று ஒவ்வோர் இடத்திலும் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென்பதற்காகத்தான் சிறப்புக் கோர்ட்களே உள்ளன. இப்படிக் காலதாமதப்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் நரக வேதனையே. வளர்ந்து திருமண வயதில் அனுபவிக்க வேண்டிய வேதனைகளை இன்று அவர்கள் சிறுவயதிலேயே அனுபவிப்பதுதான் காலக்கொடுமை. இதுபோன்று பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்க நாட்டில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் தாங்களே சொந்தச் செலவில் வழக்கு நடத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.
``விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும்!” 
இதுபோன்று போராடும் அமைப்பைப் பாதிக்கப்பட்டவர்கள் வைத்துக்கொள்ள சட்டத்திலேயே இடமிருக்கிறது. ஆனால், இதுகுறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் இல்லை. குறிப்பாக, சென்னையில் இருக்கும் அளவுக்கு மற்ற இடங்களில் விழிப்பு உணர்வு இல்லை. அங்கே, இந்த அளவுக்கு பாலியல் வழக்குகள் வருவதில்லை. இதற்கு முக்கியமாய் எல்லோரிடமும் விழிப்பு உணர்வைக் கொண்டுவர வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்துக்குச் சென்றால், எங்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்ற  நம்பிக்கை அவர்களுக்கும் வர வேண்டும். இதுபோன்ற விழிப்பு உணர்வை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியது அரசாங்கமும், காவல் துறையும்தான். சம்பந்தப்பட்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அதற்குச் சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, இதுபோன்று பாதிக்கப்படும் வழக்கில் பொய் கேஸ் போடக் கூடாது. சரியான கேஸ் என்றால், புலன் விசாரணை செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டும்” என்றார். 
இந்த நிலையில், மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக தஷ்வந்த் தொடர்ந்த வழக்கில், மாங்காடு காவல் ஆய்வாளரிடம் சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் எஸ்.விமலா மற்றும் ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தஷ்வந்த் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், “வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாகச் சாட்சி அளித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். அதனைக்கேட்ட உயர் நீதிமன்றம், “இதுதொடர்பாக மாங்காடு காவல்ஆய்வாளர், நான்கு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 
சிறுமி ஹாசினி, பாலியல் சீண்டலுக்கு இரையாகி கொலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்த நிலையில், அவர் பற்றிய கட்டுரை முடியும் தருவாயில், இதோ இன்னொரு சிறுமியான காஷ்மீர் குழந்தையும் அதுபோன்ற தாக்குதலுக்குத்தான் ஆளாகியிருக்கிறாள் என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. 
‘குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகிவிடும்’ என்பார் ஓர் அறிஞர். உண்மைதான். ஹாசினியை இழந்த ஶ்ரீனிவாஸ் பாபு - ஶ்ரீதேவியின் குடும்பம் இப்போது துயரத்தில்தான் இருக்கிறது. அதுபோல, காஷ்மீர் குழந்தையின் குடும்பமும்.
---------------------------------------