Thursday, December 31, 2015

நானும் ஒரு பாடம்!

தமிழில் தமிழரசியும்
ஆங்கிலத்தில் அனுசுயாவும்
கணிதத்தில் காவ்யாவும்
அறிவியலில் ஆனந்தியும் 
சமூக அறிவியலில் சத்யாவும்
முதலிடம் பிடித்தனர்...
இவர்களைப் பார்த்து
அனைத்துப் பாடங்களிலும்
நான் ஃபெயில் ஆனதால்,
இன்று பள்ளிக்கூடத்துக்கே
பாடமானேன்!

காரணம்

அவளுடன் வாழ்வதற்காக
'சாந்தி... சாந்தி' என்று
அவளது பெயரை உச்சரித்தேன்...
'சாகு-நீ... சாகு-நீ' என்றே
சாதியைக் காரணம் காட்டி
அடித்துத் துவைத்தது
அவளது இனம்!

அம்மா!

குழந்தையை இடுப்பிலேயும்
குடும்பப் பாரத்தை மனதிலேயும்
சுமப்பவள்...
அம்மா!

மரம் நடுவிழா!

கட்சியிலிருந்து 
பிரிந்து வந்தவர்கள்
ஒவ்வோர் ஊருக்கும்
சென்று
மரம் நட்டார்கள்...
கட்சிக் கொடிகளை ஏற்றி!

Wednesday, December 30, 2015

ஆங்கிலப் பள்ளி

ஆங்கிலப் பள்ளிக்குச்
சென்றவுடன்
அம்மா என்று
சொல்வதைக்கூட
மறந்துபோனது...
குழந்தை!

கோயில் திருவிழா

கோயில் திருவிழாவில்
கரகாட்டம் வேண்டும் என்று
ஒரு தரப்பினரும்
கவியரங்கம் வேண்டும் என்று
மற்றொரு தரப்பினரும்
சண்டையிட்டுக்கொண்டதில் 
கோயிலையே 
மூடிவைத்துவிட்டது...
கோர்ட்!

Friday, December 18, 2015

ஹைக்கூ முத்துக்கள்

தொட்டவுடன் 
அழுகையை நிறுத்தியது...
தொலைபேசி!


சேமிக்க அழைத்தேன்...
சுருட்டிக்கொள்ள வந்தார்கள்
பங்குதாரர்கள்!


மலர்ந்தது தாமரை...
மனக்கவலை வந்தது
தெய்வத்திற்கு!


கல்லறைக்கு 
முகவரியைக் காட்டியது...
காதல்!


ஆடை அவிழ்ப்பில்
மானம் போனதால் தற்கொலை...
வெங்காயம்!


பேனாவின் 
சின்னவீடு...
ஆட்காட்டி விரல்!


விறகில்லாமலேயே
எரிவது
ஏழையின் வயிறு மட்டும்!


மார்கழியில் - பூ
வைத்துக்கொள்ளும்
கோலங்கள்!


ஒரு சீட்டில்
இருவர் பயணம்...
கர்ப்பிணி!


வழுக்கையோடு
போட்டி...
இளநி!


படம் பிடித்தது பார்வை...
பதிவு செய்தது இதயம்...
உருவானது காதல்!


மண்ணில் போட்ட
விதையிலும் ஊழலா?
பயிரோடு களை...


ஜோடிப்பொருத்தம் சூப்பர்...
திருமண மண்டபத்தில் 
எனக்குக் கிடைத்த புது செருப்பு!


இன்பத்தின் விருந்து...
துன்பத்தின் மருந்து...
குழந்தை!


பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது...
மனசு!


குடிபோதையில் தடுமாற்றம்...
கோணல்மானலாயின வரிகள்...
மை உறிஞ்சும் பேனா!


சில்மிஷமா....
சிறைபிடிப்பா?
மலரில் வண்ணத்துப்பூச்சி!


நனைத்தது மழை...
சிரித்தது காற்று...
அழுதது மரம்!


கறைபடிந்த சுவர்
வெள்ளையானது...
கட்சி வேட்பாளர்களுக்கு!


உடையாமல் விற்றேன்...
உடைத்துத் தின்றான்...
முறுக்கை!


எழுத்துக்களில் ஊனம்...
மதிப்பு இழந்தது...
வார்த்தை!


உடலில் ஊனம்...
மறைத்தது...
வரதட்சணை!


இவை, நான் எழுதிய 'ஊசி' என்கிற கவிதை நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை.


ஹைக்கூ முத்துக்கள்

தேன்மொழி, கனிமொழி
எனக்குப் பிடித்தது...
தமிழ்மொழி!


முடிந்துபோனது நேற்று...
முயற்சி செய் இன்று...
முத்து கிடைக்கும் நாளை!


முதலில் - நீ
பிறகு - வீடு
பின்பு - நாடு!


வாழ்வே போர்க்களம்...
அதில் வாழ்ந்தவர் ஏராளம்...
நீயும் வாழு பேர் சொல்லலாம்!


மலருக்கு மகரந்தச்சேர்க்கை
மனிதரில் சிலருக்கு
ஓரினச்சேர்க்கை!


கடலோடு இந்தியா
வரலாறு சொல்கின்றது...
கடனோடு இந்தியா
வங்கி சொல்கின்றது!


உயிரெழுத்து கணவன்...
மெய்யெழுத்து மனைவி...
உயிர்மெய்யெழுத்து குழந்தைகள்...
ஆயுத எழுத்து பெரியோர்கள்!


நேற்றுமுதல் நீதான்!
இதில் மாற்றம் ஏற்பட்டால்,
சந்தேகமில்லை...
அது, உன் தங்கைதான்!


மண்புழு, மீன் என
இரண்டையும் கொன்று
மனிதன் உயிர் வாழ்ந்தான்....
நன்றாய் தின்று!


வீட்டையும் மறக்கவில்லை...
திருடனையும் குறைக்கவில்லை..
நன்றியுள்ளது நாய் மட்டும்தான்!

வாழ்க வளமுடன்...
வளர்க நலமுடன்...
கூடவே பணமுடன்...
கொஞ்சம் குணமுடன்!


பெய்யாததற்கும்
பெய்வதற்கும்
பொது ஜனங்களிடம்
பொல்லாப்பு அடைகின்றது மழை!


இளம்பிள்ளை வாதத்தை
முற்றிலும் ஒழிக்க வேண்டும்...
இளம்பிள்ளை (வி)வாதத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும்!


ஒவ்வொன்றும் ஓர் அழகு...
பரட்டை தலை
சுருட்டை தலை
வழுக்கை தலை!


முகலாய மன்னன்...
மும்தாஜின் கணவன்...
தாஜ்மஹால் நாயகன்...
ஷாஜகான்!


அன்று - சிலம்பு...
இன்று கொலுசு...
நாளை இது பழசு...

இது , நான் எழுதிய 'ஊசி' என்கிற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

Sunday, December 6, 2015

அம்மாவின் சமையல்

அக்கா சமைத்தாள்...
உப்பு குறைவாய் இருந்தது!
அண்ணி சமைத்தாள்...
காரம் குறைவாய் இருந்தது!
அம்மா சமைத்தாள்...
அனைத்தும் 
சரியாக இருந்தது!

அம்மா!

கந்தையானாலும்
கசக்கிக் கட்டி
கூழானாலும் 
குளித்துக் குடிப்பவள்
அம்மா!

முரண்

சாதி பார்க்காத
சாமிக்கு 
தன் பெயரோடு
சாதிப் பெயரையும்
சொல்லி 
பூஜை செய்கிறார்கள்...
பக்தர்கள்!

காதலி!

இருக்கும் சில்லரையைக்கூட
இனிமையாகப் பேசி
செலவழிக்கத் தெரிந்தவள்
காதலி!

நிலா!

நட்சத்திரக்
குழந்தைகளின்
தாய்!

அம்மா!

எங்கே இருந்தாலும்
எவ்வளவு நேரமானாலும்
எப்போதும்
பதறிக்கொண்டிருப்பாள்...
அம்மா!

அம்மா!

கைக்குழந்தையின்
காவல் தெய்வம்
அம்மா!

Saturday, December 5, 2015

குட்டீஸே...

ஏ! குட்டீஸே... குட்டீஸே...
குறும்புத்தனம் செய்யும் குட்டீஸே!
கூட்டமாய் இங்கே ஓடிவாருங்கள்...
கோபுரமாய் உயர்ந்து நில்லுங்கள்!           (குட்டீஸே...)

தாய் தந்தையைத் தினமும் போற்றுங்கள்...
தாய்மொழியோடு பிறமொழியையும் பயிலுங்கள்!
'தான்' என்பதை விட்டுவிடுங்கள்...
தரணி போற்ற பாடுபடுங்கள்!          (குட்டீஸே...)

பெரியோர் சொல்வதைக் கேளுங்கள்...
பிடிவாதத்தை உதறித் தள்ளுங்கள்!
பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள்...
பிறர்மனம் நோகாதபடி வாழுங்கள்!         (குட்டீஸே...)

காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...
காசு பணத்தைச் சேமித்துவையுங்கள்!
கடத்திச் சென்றால் குரல்கொடுங்கள்...
கடமை உணர்வோடு செயல்படுங்கள்!   (குட்டீஸே...)

Friday, November 27, 2015

அம்மா!

னைத்துக்கும்
மாமருந்து...
அம்மா!
வாழ்க்கை ஓர் இருட்டு....


தாடி

அவள் என்
இதயத்தில்
காதல் என்ற
நீர் பாய்ச்சாததால்,
என் கன்னத்தில்
வாடுகின்ற பயிர்!

Thursday, November 26, 2015

காதல் இதயம்



போதி மரத்தடியில்
புத்தருக்கு
ஞான உதயம் ஏற்பட்டது....
அன்பே - நாம்
தினம் சந்திக்கும்
வேப்பமரத்தடியில்
எனக்கு எப்போது
உன் காதல் இதயம்
கிடைக்கப் போகிறது?
- எடையூர் ஜெ.பிரகாஷ்

Friday, November 20, 2015

குடிக்காதடா...

                               
குடிக்காதடா... குடிக்காதடா மனிதா - நீ
குடிச்சியினா குடல் அழுகிச் செத்துருவடா... 
குடும்பத்த கொஞ்சம் நெனச்சிப் பாருடா..
குடிக்கிற காச தினம் சேர்த்து வையுடா...                            (குடிக்காதடா...)

குடி குடியைக் கெடுக்கும்னு உனக்குத் தெரியாதா?
கூடி நின்னு குடிச்சா அது உடலைக் கெடுக்காதா?
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுனு புரியாதா?
அதை மாற்றத்தான் உன்னால் முடியாதா?                           (குடிக்காதடா...)

குடிப்பதிலே என்ன சாதனை கண்டாய்?
குடும்பத்தையும் குதூகலத்தையும் வீதியில் நிறுத்துகிறாய்...
சேர்த்து வைத்த செல்வத்தையும் இழக்கிறாய்...
தினம்தினம் செத்துப் பிழைக்கிறாய்....                                   (குடிக்காதடா...)

கவலையில் நீ குடிச்சா
கஷ்டப்படும் உன் குடிசை....
காச சேர்த்துவச்சா
காக்கா, குருவிகூட கேட்கும் உன் பேச்சை...                               (குடிக்காதடா...)

இன்றே குடிப்பதை நிறுத்திக்கோ...
இனி இளநீரும் பழச்சாறும் சாப்பிட பழகிக்கோ...
இறைவன் கொடுத்த உடலை ஆரோக்கியமா வச்சுக்கோ...
இல்லறத்தை நல்லறமாய் பாத்துக்கோ!                        (குடிக்காதடா...)

                                                                                              - எடையூர் ஜெ.பிரகாஷ்

Thursday, October 8, 2015

அம்மா


மூக்குச்சளியை இழுப்பியபடியும்
மூத்திரத்தில் நனைந்தபடியும்
மலத்தில் புரண்டபடியும்
மண்ணைத் தின்னப்படியும்
என எப்படி இருந்தாலும்
தன் குழந்தையை
எடுத்துக் கொஞ்சுவாள்...
அம்மா!

- எடையூர் ஜெ.பிரகாஷ்

முரண்


 ஆயிரம் முறை 
சிரித்துக்கொண்டே
பாலூட்டிய அன்னைக்கு
ஒரே  ஒருமுறை
அழுதுகொண்டே 
பால் ஊற்றினான்...
மகன்!
- எடையூர் ஜெ.பிரகாஷ்



Monday, July 20, 2015

பள்ளிக்குப் போகணும் தம்பி....

பள்ளிக்குப் போகணும் தம்பி....
படிச்சி பெரியாளா(ரா)கணும் தம்பி!
பலருக்கும் உதவி செய்யணும் தம்பி....
பகுத்தறிவாளனாய் மாறணும் தம்பி!
சுயமாய் சிந்திக்கணும் தம்பி....
சுகபோக வாழ்வைத் தவிர்க்கணும் தம்பி!   (பள்ளிக்குப்...)

எல்லாம் கிடைக்குது பள்ளியிலே தம்பி....
உன் எதிர்காலம் அமைவது கல்வியாலே தம்பி!
ஜாதி மதம் பார்க்காதே தம்பி....
சரித்திரம் படைக்க எழுந்திடு தம்பி!            (பள்ளிக்குப்...)

பிறரைத் தூற்றுவது பாவம் தம்பி....
பேய், பிசாசு என எதுவுமில்லை தம்பி!
மனவலிமையை வளர்த்திடு தம்பி....
மனிதநேயத்தைக் காத்திடு தம்பி!               (பள்ளிக்குப்...)

நம்புவதெல்லாம் வாழக்கையில்லே தம்பி....
நடைப்பிணமாய் வாழ்வதில் அர்த்தமில்லே தம்பி!
நாளைய உலகைப் புரட்டிடு தம்பி....
நட்சத்திரமாய் ஜொலித்திடு தம்பி!              (பள்ளிக்குப்...)

                                                  எடையூர் ஜெ.பிரகாஷ்

Thursday, July 16, 2015

பொட்டபுள்ள பெத்துக்கலாம் சின்னபுள்ள...

வாழமரத் தோப்புக்குள்ள 
வந்து போ சின்னபுள்ள - நான்
வாசமுள்ள முல்லப்பூ 
வச்சிருக்கேன் சின்னபுள்ள...       (வாழமரத் தோப்புக்குள்ள) 

எந்தக் கவலையும் 
உனக்கில்ல சின்னபுள்ள...
எதிர்காலம் நமக்கிருக்கு
சின்னபுள்ள....
ஏழுசீர் குறள்போல - உன்
எழில் இருக்கு சின்னபுள்ள...
எப்பவும் நீதான்
என் உசுரு சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள) 


பூவும் புடவையும் 
உனக்குத்தான் சின்னபுள்ள...
நான் புதுசா செஞ்ச தாலியும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
கட்டிக்கொள்ள 
நேரம் பாரு சின்னபுள்ள...
என்னைக் காயப்போட்டது
போதும் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள) 


புஞ்சையும் நஞ்சையும்
உனக்குத்தான் சின்னபுள்ள...
நீ - பொங்கிவச்ச சோறு
எனக்குத்தான் சின்னபுள்ள...
பொழுதுசாயும் நேரம்
நமக்குத்தான் சின்னபுள்ள...
நாம பொட்டபுள்ள
பெத்துக்கலாம் சின்னபுள்ள... (வாழமரத் தோப்புக்குள்ள) 

Saturday, April 18, 2015

அப்பாவின் கவலை

பெரியவளுக்கு அடுத்தமாசம்
தலை பிரசவம்...
பி.இ படிக்கும் மகனுக்கு
பீஸ் கட்டணும்...
பிளஸ் டூ முடிச்சதும்
சின்னவளை 
டீச்சர் டிரெய்னிங்ல சேர்க்கணும்...
மாடி வீட்ட சீக்கிரம் 
கட்டி முடிச்சி 
கிரக பிரவேசம் நடத்தணும்...
இப்படி, 
அடுத்தடுத்த கவலைகளுடன்
பேங்க்க்கு நடந்துசென்றார் அப்பா...
வேற என்ன 
லோன் வாங்கலாம் என்று!

'வா ராசா'

அராத்து, அடங்காப்பிடாரி
மொள்ளமாரி, மோடுமொட்டி
வெட்டிப்பய, தண்டச்சோறு என
ஆயிரமாயிரம் பேர்களிடம்
அவப்பெயர் வாங்கிட்டு
வீட்டுக்கு வந்தாலும்
அம்மா சொல்வாள்....
என்னை 'வா ராசா' என்று!

கைக்குழந்தை

கிள்ளினார்கள்...
கொஞ்சினார்கள்...
முத்த மழையில்
நனைத்தார்கள்...
ஆனாலும்
எதுவும் நினைவில்லை!
கை பொம்மையையும்
கிலுகிலுப்பையையும்
வைத்து விளையாடும்
கைக்குழந்தையான எனக்கு!



Friday, April 17, 2015

நங்கைகளின் வாழ்க்கை

நாடி நரம்புக்கெல்லாம் ஓய்வில்லாமல்
ஓடியாடி உழைத்துவிட்டு
ஒடிந்துபோன உடலோடு
பிதுங்கி வழியும் பேருந்துகளில்
நசுக்கப்படும் நங்கைகளின்
ஒவ்வொருநாள் வாழ்க்கையும்
வீட்டுக்கு வந்தபிறகும்
விடுதலையாவதில்லை!

ஏக்கம்

ஒருநாளைக்கு
ஒருவேளையாவது
தாய்ப்பால் கிடைக்குமா?
தாயின் மார்பை
உற்றுநோக்கியபடியே
உறங்கிவிடுகிறது
குழந்தை!

அடிச்சுப்புடாதீங்க



அழுக்குச் சட்டையானாலும் தொவச்சிப்போட்டு
அழாமயிருக்க அம்பதுகாச கையிலகொடுத்து
அரைமைல் தூரம் இடுப்புல சுமந்து
அழகு முகத்தையும் கறுப்பாக்க வந்த சூரியன
கந்தல்புடவையின் முந்தானையால மறைச்சி
காத்தடிச்சா பறந்துபோகும்
கொட்டாயி பள்ளிக்கூடத்தல
கொண்டுபோயி இறக்கிவிட்ட கையுடன்
வாத்தியார பார்த்து,
அய்யா, புள்ள படிக்கலைனாலும்
பரவாயில்ல... அடிச்சுப்புடாதீங்க...ன்னு
அனுதாபத்தச் சொல்லிட்டு
அரக்கப்பரக்க களத்துமேட்டேறி
கள பறிக்கயிலே,
சேத்துக்கால சேப்போ கறுப்போ
எது கடிச்சாலும் அதபத்தி கவலைப்படாம
அப்போதும் எம்புள்ள
எப்படியிருக்கானோ என்று
ஏங்கித் தவிக்கும்
பெத்தவளின் மனம்!

நீ நடுங்குவது யாருக்கோ?

உன் கருங்கூந்தலை 
கைது செய்திருக்கும்
காற்றை விடுதலை செய்ய
என் விரல்களிடம் விவரம் கேட்கவா?

உன் காது குழிகளில் 
சிக்கியிருக்கும் கறுத்துப்போன
வேலங்குச்சிக்குப் பதிலாக
கால்பவுனில் நகையெடுத்து
நான் மாட்டவா?

தேன் ஊறும் உந்தன் இதழ்களில்
தேன் எடுக்க எந்தன் இதழை
வண்டாக மாற்றி வரட்டுமா?

தினந்தினம் உன்னைத் 
தேடித்தேடியே வாழ்நாளைக்
கழிக்கின்ற எனக்கு
வசந்தத்தைத் தரமாட்டாயோ?

தாமரையாய் மலர்ந்திருக்கிற
தாவணி நிலவே...
உன்னைத் தாலிகட்டி
ஊரறிய அழைத்துச் செல்ல
தாம்பூழத் தட்டுடன் வந்து
தலை வணங்கட்டுமா?

அங்கம் தெரியாத அளவுக்கு
ஆடை உடுத்துகின்ற ஆப்பிளே...
உன் அழகை ரசிக்க
நேரம் குறிக்கவா?

நாடும் மொழியும் 
நமதாகிவிட்டபோதிலும்
நாம் இன்னும் சேராமல் 
இருப்பது ஏனோ?

எத்தொழில் எங்கும் செய்தாலும்
ஏற்றம் காணலாம் என்கிறபோது
என்னை & நீ ஏற்றுக்கொள்ளாததற்குக்
காரணம் என்னவோ? 

நாளைய உலகை வெல்வதற்கு
நம்பிக்கை இருக்க 
நீ நடுங்குவது யாருக்கோ?