Saturday, April 18, 2015

அப்பாவின் கவலை

பெரியவளுக்கு அடுத்தமாசம்
தலை பிரசவம்...
பி.இ படிக்கும் மகனுக்கு
பீஸ் கட்டணும்...
பிளஸ் டூ முடிச்சதும்
சின்னவளை 
டீச்சர் டிரெய்னிங்ல சேர்க்கணும்...
மாடி வீட்ட சீக்கிரம் 
கட்டி முடிச்சி 
கிரக பிரவேசம் நடத்தணும்...
இப்படி, 
அடுத்தடுத்த கவலைகளுடன்
பேங்க்க்கு நடந்துசென்றார் அப்பா...
வேற என்ன 
லோன் வாங்கலாம் என்று!

'வா ராசா'

அராத்து, அடங்காப்பிடாரி
மொள்ளமாரி, மோடுமொட்டி
வெட்டிப்பய, தண்டச்சோறு என
ஆயிரமாயிரம் பேர்களிடம்
அவப்பெயர் வாங்கிட்டு
வீட்டுக்கு வந்தாலும்
அம்மா சொல்வாள்....
என்னை 'வா ராசா' என்று!

கைக்குழந்தை

கிள்ளினார்கள்...
கொஞ்சினார்கள்...
முத்த மழையில்
நனைத்தார்கள்...
ஆனாலும்
எதுவும் நினைவில்லை!
கை பொம்மையையும்
கிலுகிலுப்பையையும்
வைத்து விளையாடும்
கைக்குழந்தையான எனக்கு!



Friday, April 17, 2015

நங்கைகளின் வாழ்க்கை

நாடி நரம்புக்கெல்லாம் ஓய்வில்லாமல்
ஓடியாடி உழைத்துவிட்டு
ஒடிந்துபோன உடலோடு
பிதுங்கி வழியும் பேருந்துகளில்
நசுக்கப்படும் நங்கைகளின்
ஒவ்வொருநாள் வாழ்க்கையும்
வீட்டுக்கு வந்தபிறகும்
விடுதலையாவதில்லை!

ஏக்கம்

ஒருநாளைக்கு
ஒருவேளையாவது
தாய்ப்பால் கிடைக்குமா?
தாயின் மார்பை
உற்றுநோக்கியபடியே
உறங்கிவிடுகிறது
குழந்தை!

அடிச்சுப்புடாதீங்க



அழுக்குச் சட்டையானாலும் தொவச்சிப்போட்டு
அழாமயிருக்க அம்பதுகாச கையிலகொடுத்து
அரைமைல் தூரம் இடுப்புல சுமந்து
அழகு முகத்தையும் கறுப்பாக்க வந்த சூரியன
கந்தல்புடவையின் முந்தானையால மறைச்சி
காத்தடிச்சா பறந்துபோகும்
கொட்டாயி பள்ளிக்கூடத்தல
கொண்டுபோயி இறக்கிவிட்ட கையுடன்
வாத்தியார பார்த்து,
அய்யா, புள்ள படிக்கலைனாலும்
பரவாயில்ல... அடிச்சுப்புடாதீங்க...ன்னு
அனுதாபத்தச் சொல்லிட்டு
அரக்கப்பரக்க களத்துமேட்டேறி
கள பறிக்கயிலே,
சேத்துக்கால சேப்போ கறுப்போ
எது கடிச்சாலும் அதபத்தி கவலைப்படாம
அப்போதும் எம்புள்ள
எப்படியிருக்கானோ என்று
ஏங்கித் தவிக்கும்
பெத்தவளின் மனம்!

நீ நடுங்குவது யாருக்கோ?

உன் கருங்கூந்தலை 
கைது செய்திருக்கும்
காற்றை விடுதலை செய்ய
என் விரல்களிடம் விவரம் கேட்கவா?

உன் காது குழிகளில் 
சிக்கியிருக்கும் கறுத்துப்போன
வேலங்குச்சிக்குப் பதிலாக
கால்பவுனில் நகையெடுத்து
நான் மாட்டவா?

தேன் ஊறும் உந்தன் இதழ்களில்
தேன் எடுக்க எந்தன் இதழை
வண்டாக மாற்றி வரட்டுமா?

தினந்தினம் உன்னைத் 
தேடித்தேடியே வாழ்நாளைக்
கழிக்கின்ற எனக்கு
வசந்தத்தைத் தரமாட்டாயோ?

தாமரையாய் மலர்ந்திருக்கிற
தாவணி நிலவே...
உன்னைத் தாலிகட்டி
ஊரறிய அழைத்துச் செல்ல
தாம்பூழத் தட்டுடன் வந்து
தலை வணங்கட்டுமா?

அங்கம் தெரியாத அளவுக்கு
ஆடை உடுத்துகின்ற ஆப்பிளே...
உன் அழகை ரசிக்க
நேரம் குறிக்கவா?

நாடும் மொழியும் 
நமதாகிவிட்டபோதிலும்
நாம் இன்னும் சேராமல் 
இருப்பது ஏனோ?

எத்தொழில் எங்கும் செய்தாலும்
ஏற்றம் காணலாம் என்கிறபோது
என்னை & நீ ஏற்றுக்கொள்ளாததற்குக்
காரணம் என்னவோ? 

நாளைய உலகை வெல்வதற்கு
நம்பிக்கை இருக்க 
நீ நடுங்குவது யாருக்கோ?