Thursday, December 31, 2015

நானும் ஒரு பாடம்!

தமிழில் தமிழரசியும்
ஆங்கிலத்தில் அனுசுயாவும்
கணிதத்தில் காவ்யாவும்
அறிவியலில் ஆனந்தியும் 
சமூக அறிவியலில் சத்யாவும்
முதலிடம் பிடித்தனர்...
இவர்களைப் பார்த்து
அனைத்துப் பாடங்களிலும்
நான் ஃபெயில் ஆனதால்,
இன்று பள்ளிக்கூடத்துக்கே
பாடமானேன்!

காரணம்

அவளுடன் வாழ்வதற்காக
'சாந்தி... சாந்தி' என்று
அவளது பெயரை உச்சரித்தேன்...
'சாகு-நீ... சாகு-நீ' என்றே
சாதியைக் காரணம் காட்டி
அடித்துத் துவைத்தது
அவளது இனம்!

அம்மா!

குழந்தையை இடுப்பிலேயும்
குடும்பப் பாரத்தை மனதிலேயும்
சுமப்பவள்...
அம்மா!

மரம் நடுவிழா!

கட்சியிலிருந்து 
பிரிந்து வந்தவர்கள்
ஒவ்வோர் ஊருக்கும்
சென்று
மரம் நட்டார்கள்...
கட்சிக் கொடிகளை ஏற்றி!

Wednesday, December 30, 2015

ஆங்கிலப் பள்ளி

ஆங்கிலப் பள்ளிக்குச்
சென்றவுடன்
அம்மா என்று
சொல்வதைக்கூட
மறந்துபோனது...
குழந்தை!

கோயில் திருவிழா

கோயில் திருவிழாவில்
கரகாட்டம் வேண்டும் என்று
ஒரு தரப்பினரும்
கவியரங்கம் வேண்டும் என்று
மற்றொரு தரப்பினரும்
சண்டையிட்டுக்கொண்டதில் 
கோயிலையே 
மூடிவைத்துவிட்டது...
கோர்ட்!

Friday, December 18, 2015

ஹைக்கூ முத்துக்கள்

தொட்டவுடன் 
அழுகையை நிறுத்தியது...
தொலைபேசி!


சேமிக்க அழைத்தேன்...
சுருட்டிக்கொள்ள வந்தார்கள்
பங்குதாரர்கள்!


மலர்ந்தது தாமரை...
மனக்கவலை வந்தது
தெய்வத்திற்கு!


கல்லறைக்கு 
முகவரியைக் காட்டியது...
காதல்!


ஆடை அவிழ்ப்பில்
மானம் போனதால் தற்கொலை...
வெங்காயம்!


பேனாவின் 
சின்னவீடு...
ஆட்காட்டி விரல்!


விறகில்லாமலேயே
எரிவது
ஏழையின் வயிறு மட்டும்!


மார்கழியில் - பூ
வைத்துக்கொள்ளும்
கோலங்கள்!


ஒரு சீட்டில்
இருவர் பயணம்...
கர்ப்பிணி!


வழுக்கையோடு
போட்டி...
இளநி!


படம் பிடித்தது பார்வை...
பதிவு செய்தது இதயம்...
உருவானது காதல்!


மண்ணில் போட்ட
விதையிலும் ஊழலா?
பயிரோடு களை...


ஜோடிப்பொருத்தம் சூப்பர்...
திருமண மண்டபத்தில் 
எனக்குக் கிடைத்த புது செருப்பு!


இன்பத்தின் விருந்து...
துன்பத்தின் மருந்து...
குழந்தை!


பூட்டிவைத்தும்
தப்பித்துவிட்டது...
மனசு!


குடிபோதையில் தடுமாற்றம்...
கோணல்மானலாயின வரிகள்...
மை உறிஞ்சும் பேனா!


சில்மிஷமா....
சிறைபிடிப்பா?
மலரில் வண்ணத்துப்பூச்சி!


நனைத்தது மழை...
சிரித்தது காற்று...
அழுதது மரம்!


கறைபடிந்த சுவர்
வெள்ளையானது...
கட்சி வேட்பாளர்களுக்கு!


உடையாமல் விற்றேன்...
உடைத்துத் தின்றான்...
முறுக்கை!


எழுத்துக்களில் ஊனம்...
மதிப்பு இழந்தது...
வார்த்தை!


உடலில் ஊனம்...
மறைத்தது...
வரதட்சணை!


இவை, நான் எழுதிய 'ஊசி' என்கிற கவிதை நூலில் இருந்து தொகுக்கப்பட்டவை.


ஹைக்கூ முத்துக்கள்

தேன்மொழி, கனிமொழி
எனக்குப் பிடித்தது...
தமிழ்மொழி!


முடிந்துபோனது நேற்று...
முயற்சி செய் இன்று...
முத்து கிடைக்கும் நாளை!


முதலில் - நீ
பிறகு - வீடு
பின்பு - நாடு!


வாழ்வே போர்க்களம்...
அதில் வாழ்ந்தவர் ஏராளம்...
நீயும் வாழு பேர் சொல்லலாம்!


மலருக்கு மகரந்தச்சேர்க்கை
மனிதரில் சிலருக்கு
ஓரினச்சேர்க்கை!


கடலோடு இந்தியா
வரலாறு சொல்கின்றது...
கடனோடு இந்தியா
வங்கி சொல்கின்றது!


உயிரெழுத்து கணவன்...
மெய்யெழுத்து மனைவி...
உயிர்மெய்யெழுத்து குழந்தைகள்...
ஆயுத எழுத்து பெரியோர்கள்!


நேற்றுமுதல் நீதான்!
இதில் மாற்றம் ஏற்பட்டால்,
சந்தேகமில்லை...
அது, உன் தங்கைதான்!


மண்புழு, மீன் என
இரண்டையும் கொன்று
மனிதன் உயிர் வாழ்ந்தான்....
நன்றாய் தின்று!


வீட்டையும் மறக்கவில்லை...
திருடனையும் குறைக்கவில்லை..
நன்றியுள்ளது நாய் மட்டும்தான்!

வாழ்க வளமுடன்...
வளர்க நலமுடன்...
கூடவே பணமுடன்...
கொஞ்சம் குணமுடன்!


பெய்யாததற்கும்
பெய்வதற்கும்
பொது ஜனங்களிடம்
பொல்லாப்பு அடைகின்றது மழை!


இளம்பிள்ளை வாதத்தை
முற்றிலும் ஒழிக்க வேண்டும்...
இளம்பிள்ளை (வி)வாதத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும்!


ஒவ்வொன்றும் ஓர் அழகு...
பரட்டை தலை
சுருட்டை தலை
வழுக்கை தலை!


முகலாய மன்னன்...
மும்தாஜின் கணவன்...
தாஜ்மஹால் நாயகன்...
ஷாஜகான்!


அன்று - சிலம்பு...
இன்று கொலுசு...
நாளை இது பழசு...

இது , நான் எழுதிய 'ஊசி' என்கிற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

Sunday, December 6, 2015

அம்மாவின் சமையல்

அக்கா சமைத்தாள்...
உப்பு குறைவாய் இருந்தது!
அண்ணி சமைத்தாள்...
காரம் குறைவாய் இருந்தது!
அம்மா சமைத்தாள்...
அனைத்தும் 
சரியாக இருந்தது!

அம்மா!

கந்தையானாலும்
கசக்கிக் கட்டி
கூழானாலும் 
குளித்துக் குடிப்பவள்
அம்மா!

முரண்

சாதி பார்க்காத
சாமிக்கு 
தன் பெயரோடு
சாதிப் பெயரையும்
சொல்லி 
பூஜை செய்கிறார்கள்...
பக்தர்கள்!

காதலி!

இருக்கும் சில்லரையைக்கூட
இனிமையாகப் பேசி
செலவழிக்கத் தெரிந்தவள்
காதலி!

நிலா!

நட்சத்திரக்
குழந்தைகளின்
தாய்!

அம்மா!

எங்கே இருந்தாலும்
எவ்வளவு நேரமானாலும்
எப்போதும்
பதறிக்கொண்டிருப்பாள்...
அம்மா!

அம்மா!

கைக்குழந்தையின்
காவல் தெய்வம்
அம்மா!

Saturday, December 5, 2015

குட்டீஸே...

ஏ! குட்டீஸே... குட்டீஸே...
குறும்புத்தனம் செய்யும் குட்டீஸே!
கூட்டமாய் இங்கே ஓடிவாருங்கள்...
கோபுரமாய் உயர்ந்து நில்லுங்கள்!           (குட்டீஸே...)

தாய் தந்தையைத் தினமும் போற்றுங்கள்...
தாய்மொழியோடு பிறமொழியையும் பயிலுங்கள்!
'தான்' என்பதை விட்டுவிடுங்கள்...
தரணி போற்ற பாடுபடுங்கள்!          (குட்டீஸே...)

பெரியோர் சொல்வதைக் கேளுங்கள்...
பிடிவாதத்தை உதறித் தள்ளுங்கள்!
பிரச்சினை எதுவானாலும் சொல்லுங்கள்...
பிறர்மனம் நோகாதபடி வாழுங்கள்!         (குட்டீஸே...)

காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...
காசு பணத்தைச் சேமித்துவையுங்கள்!
கடத்திச் சென்றால் குரல்கொடுங்கள்...
கடமை உணர்வோடு செயல்படுங்கள்!   (குட்டீஸே...)