Thursday, March 17, 2016

முதல்முறையாக அணிவகுப்பு மரியாதைக்கு தலைமையேற்ற பெண்!

(இந்தக் கட்டுரை 27-01-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


புதுடெல்லி: முதல்முறையாக அணிவகுப்பு மரியாதைக்கு ஒரு பெண் அதிகாரி தலைமையேற்றுள்ளார்.

இன்று எல்லா துறைகளிலும் ஆண்களுக்கு நிகராய் பெண்கள் முன்னேறி விட்டனர். அந்தவகையில், நம்முடைய 66வது குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைக் கௌரவிக்கும் வகையில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பெருமை சேர்த்துள்ளார் விங் கமான்டர் பூஜா.

கடந்த 25 ஆம் தேதி டெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க அதிபர் ஒபாமா, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். அந்த அணிவகுப்பு மரியாதை, விமானப் படை அதிகாரியான விங் கமான்டர் பூஜா தலைமையில் நடந்தது.

வழக்கமாக ஆண் அதிகாரிதான் இந்தப் பொறுப்பை வகிப்பார். ஆனால், இந்த முறை இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பெண் அதிகாரி தலைமையில் இந்த அணிவகுப்பு மரியாதை நடந்துள்ளது. இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார் பூஜா தாக்கூர்.

இதுகுறித்து பூஜா கூறும்போது, ''பயிற்சிக் காலத்திலிருந்தே பெண்கள், ஆண்களுக்கு இணையாகத்தான் நடத்தப்படுகிறார்கள். இதில் ஆண், பெண் பாரபட்சமே கிடையாது. எனவே, நாங்கள் முதலில் அதிகாரிகள், பின்புதான் பெண்கள். அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியது எனது வாழ்க்கையில் பெருமைக்குரிய ஒரு தருணமாகும். இது எனக்கு மிகுந்த கௌரவத்தையும், மகிழ்ச்சியையும், பெருமையையும் அளித்துள்ளது'' என்றார்.

ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment