Thursday, March 17, 2016

பள்ளியை மறந்தான்... பஞ்சாலையில் சேர்ந்தான்: குழந்தை தொழிலாளர் அவலம்!



(இந்தக் கட்டுரை 16-07-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)
''பள்ளியை மறந்தான்

பஞ்சாலையில் சேர்ந்தான்

பட்டினியை வென்றான்!''


- என்று குழந்தைத் தொழிலாளியைப் பார்த்து தன் எண்ணக் குமுறலைக் கொட்டினான் ஒரு கவிஞன். உலகத்திலேயே அதிக குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு நம் இந்தியா என்பது வேதனைப்பட வேண்டிய விஷயமாகும்.
இத்தகைய நிலையில்தான்  14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குலம் சார்ந்த தொழில்களை (விவசாயம், நெசவு) செய்யலாம் என்று குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1986-ல்  சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதற்கு பல்வேறு கட்சியினரும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குழந்தைகள் அமைப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இதனையடுத்து இம்மசோதா குறித்து டெல்லியில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. 

இந்தியாவில் மட்டும் 70 முதல் 80 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள்  இருப்பதாக சிஏசிஎல் தெரிவித்திருக்கிறது. இதேபோல் வங்காளதேசத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக அது தெரிவித்துள்ளது. உலக அளவில் எடுத்துக்கொண்டால் ஆசியாவில் 61 சதவிகிதமும், ஆப்பிரிக்காவில் 32 சதவிகிதமும், லத்தீன் அமெரிக்காவில் 7 சதவிகிதமும், அமெரிக்காவில் 1 சதவிகிதமும் குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதுதவிர கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளிலும் உள்ளனர். ஆசியாவில் நடைபெறும் வேலைகளில் 22 சதவிகிதமும், லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் வேலைகளில் 17 சதவிகிதமும் அங்குள்ள குழந்தைத் தொழிலாளர்களால் செய்யப்படுகின்றன. குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாட்டுக்கு நாடு வேறுபட்டு இருந்தாலும், தேசிய அளவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணியமர்த்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படவில்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 10-19 வயதுடையோர் இந்தியாவில் 25 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 15 முதல் 25 வயது வரை உள்ளவர்கள், விவசாயப் பணிகளில் 18 சதவிகிதமும் விவசாயக் கூலிகளாக 48 சதவிகிதமும் உள்ளனர். 15 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள சுமார் 75 சதவிகிதக் குழந்தைகள் உழைப்புச் சந்தையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் பட்டாசுத் தொழிற்சாலைகள், பஞ்சு நூற்பாலைகள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள், திரையரங்குகள் போன்றவற்றில் பணிபுரிபவர்களாவும், ஷூ பாலீஸ், பேப்பர், பால் பாக்கெட், வாட்டர் கேன் போடுபவர்களாகவும், ரயில்வே கூலிகளாகவும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறார்கள் என்றபோதிலும், முழுநேர தொழில் செய்தவர்கள் பகுதிநேர தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான். வேலூர் மாவட்டத்தில் தினமும் காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும் பீடி சுற்றும் தொழிலில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சேலம், தர்மபுரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலித் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக நடத்தப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்த 22 குழந்தைகளை மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரசார குழு, ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
"திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 76-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் 13 வயதிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 8-ம் வகுப்பு முடித்த பின்னர் நூற்பாலைகளில் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். 20 முதல் 100 குழந்தைகள் வரை பகல், இரவு என இரண்டு வேளைகளில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றனர்'' என்கிறது அந்த அறிக்கை.

"பல இடங்கள்ல சின்ன பசங்களதான் வேலைக்கு வெச்சு இருக்குறாங்க. அவங்க கஷ்டபடுறதா பார்த்தா எங்களாலேயே தாங்க முடியல. சில இடத்துல பொருள தூக்க முடியாம சிரமப்படுறாங்க. காலையில வேலைக்கு வர்ற பசங்க நைட்டுதான் வீட்டுக்குப் போறாங்க. பாவம் அந்தப் பசங்க'' என்று ஆதங்கப்படுகின்றனர் அதைப்பார்த்த மக்கள்.
இதுகுறித்து சென்னை ஹோட்டல் முதலாளி ஒருவரிடம் பேசினோம்.
“ திருச்சியிலே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர், ஸ்கூல் முடிச்சுட்டு சும்மா இருக்கானுங்க. அவனுகளுக்கு ஏதாவது வேலை இருந்தா கொடுனு போன்ல சொன்னார். நானும் அவர்களை வரச் சொல்லி சப்ளையர்களாச் சேத்துக்கிட்டேன். தினமும் 150 ரூபா சம்பளம் கொடுத்து, மூணுவேள சாப்பாடு போட்டு, தங்குறதுக்கு ரூமும் கொடுத்தேன். 1 மாசம் இருந்தானுங்க.. அப்புறம் ஸ்கூல் தொறக்கப் போறாங்கனு சொல்லிட்டுப் போய்ட்டானுங்க.. பெரிய ஆளுங்க 500 ரூபா சம்பளம் கேட்குறாங்க. சின்ன பசங்களுக்கு நாம கொடுக்கறதுதான் சம்பளம். ஆனா இப்ப அவனுகளுக்கும் விஷயம் தெரிஞ்சுப்போச்சு. 500 ரூபா சம்பளம் கேட்குறானுங்க'' என்றார் விரக்தியில்.

குடும்ப வறுமை, 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உலகமயமாதல், ஏற்றத்தாழ்வுகள் முதலியவற்றால்தான் குழந்தைகள், தொழிலாளர்களாக மாறுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனால், குடும்பத்தில் ஏற்படும் அதிக வறுமையினால்தான் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைவினால் நோய்வாய்ப்படுகிறார்கள், கல்வியைத் துறக்கிறார்கள், குழந்தைத் தொழிலாளர் ஆகிறார்கள், வேலைச் சந்தைக்குக் கடத்தப்படுகிறார்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள், இடம்விட்டு இடம்பெயர்கிறார்கள்.

இவற்றை மையப்படுத்தி உடல் ரீதியான பாதிப்பு, உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு, உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு ஆகியன குழந்தைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளாக குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பு நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ளது.

பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் குடும்பங்களுக்குத்தான் உடனே வேலை அளிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் ஒடிசா, பீகார் போன்ற வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளை அழைத்துவந்து கட்டட வேலைக்குப் பயன்படுத்துகின்றனர்.

பெரியவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு குழந்தைகள் பணியமர்த்தப்படுவதால், வேலை யின்மை அதிகரித்து வறுமைக்குக் காரணமா கிறது. வறுமை மட்டுமே, குழந்தைத் தொழிலை உருவாக்கவில்லை. சில சமுதாயப் பிரச்னைகளும் அதற்கு அடிப்படையாக அமைந்துவிடுகின்றன. குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஏற்ற சட்டங்களும் வலுவானதாக இல்லை என்பதும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

18 வயதுக்குட்பட்டவர்கள் குழந்தைகள் என தேசியக் கொள்கை வரையறுக்கின்றது. ஆனாலும் குழந்தைத் தொழிலாளர் சட்டம் 1986-ல் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்கள் குலம் சார்ந்த தொழில்களை (விவசாயம், நெசவு) செய்யலாம் என்கிறது மத்திய அரசு. இதற்கு தற்போது பல கட்சியினரும் குழந்தைகள் அமைப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

மாற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டதே குழந்தைப் பருவமாகும். ஒரு குழந்தை வாழ்வதற்கான உரிமையைப் பிறப்பிலேயே பெற்றிருக்கிறது. தாய், தந்தை இருவருக்குமே குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும். அதன் வாழ்வாதாரத்துக்கும் முன்னேற்றத்துக்கும் அரசு பாடுபட வேண்டும். கருத்தைச் சொல்வதற்கும், கல்வி கற்பதற்கும் குழந்தைகளுக்கு முழு உரிமை உண்டு. தொடக்கக்கல்வி அவர்களுக்கு இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைய வேண்டியதன் அவசியத்தைத் தேசிய குழந்தைகள் சாசனம் - 2004 அறிவுறுத்துகிறது. தேசிய குழந்தைகள் செயல்திட்டம் - 2005, அனைத்துக் குழந்தைகளின் வாழ்வாதாரம், வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உறுதி செய்கிறது. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் அதற்கு மூல காரணங்களாக உள்ள வறுமை போன்றவற்றை ஒழிக்கவும் குழந்தைத் தொழில் ஒழிப்பு திட்டம் (NCLP) உருவானது. இவையெல்லாம் இருந்தும் என்ன பயன்? இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறை என்பது ஒழிக்கப்படாமல்தானே உள்ளது.
குழந்தைத் தொழிலாளர் உருவாவது குறித்தும் அதை ஒழிப்பதற்கான காரணம் குறித்தும் குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர் அ.தேவநேயனிடம் பேசினோம்.

“குழந்தைத் தொழிலாளர் என்பது நாட்டுக்கு அவமானம். குடும்பத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்பது குறைவாக இருக்கிறது. நிரந்தர வேலை இல்லை. சாதிய கட்டமைப்பான மனநிலை நிலவுகிறது. தலித், சிறுபான்மையினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதியினர் பிரிக்கப்பட்டு தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காலந்தொட்டு அவர்கள் கல்வியற்றவர்களாகவும், தொழிலாளர்களாகவும் உள்ளனர். பெரியவர்களின் உழைப்பைவிட குழந்தைகளின் உழைப்பை எளிதாகப் பெற முடிகிறது.

குழந்தைகளின் உழைப்பு அதிகமாக சுரண்டப்படுவதுடன் அவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது. நிறுவனங்களில் வைத்து வேலை வாங்குவதைவிட குழந்தைகளை வீட்டிலேயே வைத்து வேலை வாங்குகின்றனர். விடுமுறை, இன்சூரன்ஸ், மெடிக்கல் போன்றவை கிடைப்பதில்லை. தொழிலாளர் சட்டத்தை மீறிச் செயல்படுதல் போன்றவை குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன'' என்றவர், தொடர்ந்து குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கவும் வழிவகை சொன்னார்.

“குடும்பத்தில் பெற்றோர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான இருப்பிடத்திலும், வாழ்வாதாரத்திலும் அரசு பங்குகொள்ள வேண்டும். வறுமை, வறட்சி, இடம் மாறுதல் போன்றவற்றில் ஏற்படும் சூழ்நிலையை அரசு சரி செய்ய வேண்டும். 18 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாகக் கட்டாய சமகல்வி வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு அருகாமையிலேயே இருக்க வேண்டும். கல்வியை செலவு என்று பார்க்கக் கூடாது. நாட்டின் ஆளுமைக்குக் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். தேசியக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். குழந்தைத் தொழிலாளர்கள் குறித்த விழிப்பு உணர்வு விரிவுப்படுத்தப்பட வேண்டும்'' என்றார் அ.தேவநேயன்.

குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கான அடிப்படைக் காரணங் களைக் கண்டறிந்து, 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச சமகல்வி வழங்கி, குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே ஒழித்திட வேண்டும் என்பதுதான் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு இயக்கங்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
செயல்படுத்துமா மத்திய அரசு?

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment