Thursday, September 8, 2016

அதிகரிக்கும் பள்ளி வாகன விபத்துகள்... தடுப்பது யார்?

குழந்தைகளின் சிந்தனைக் கூடாரம் பள்ளிக்கூடம். ஆனால், அந்தக் கூடாரத்துக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வாகனங்களோ சேதாரம்.
கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிப்பேருந்தில் இருந்த பெரிய துளை வழியே சாலையில் விழுந்து இறந்துபோனார் மாணவி ஸ்ருதி. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் பள்ளிக்கூட வாகனங்களின் பாதுகாப்புத் தொடர்பாக பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும்; பள்ளி வாகனம் என எழுதப்பட்டிருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர வழி ஆகியவை பொருத்தப்பட வேண்டும்; பேருந்தில் கண்டக்டர் இருக்க வேண்டும்; மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எஃப்சி காட்டவேண்டும் எனச் சில வழிமுறைகளை அமல்படுத்த ஆணை பிறப்பித்திருந்தது. இந்த வழிகாட்டுதலை அந்தந்த மாநில அரசுகள், மோட்டார் வாகனச் சட்டத்தில் இணைக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இதைக் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள்தான் உடனடியாகச் செய்தன. ஆனால், தமிழக அரசோ அதை இதுவரை செய்யவில்லை. பள்ளி நிர்வாகங்களும், ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரிகளைக் ‘கவனித்து’விடுவதால் அவர்களும் அக்கறையின்றி இருக்கிறார்கள்.
இதனால் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பல வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன. நகரங்கள் மற்றும் சின்னஞ்சிறு கிராமங்களில் இயங்கும் சிறு மழலையர் பள்ளிகளுக்கு மாத வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களில்தான் இந்த நிலைமை அதிகம் இருக்கிறது. இதனால் அதில் செல்லும் குழந்தைகளின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை. இதுதவிர, அளவுக்கு அதிகமாகவும் வேன் ஓட்டுநர்கள் குழந்தைகளை ஏற்றிச் செல்வதுடன், வேகமாகச் செல்வதாகவும் புகார்கள் எழுகின்றன.
தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பள்ளி வாகனங்களை இயக்குவதற்கான தூரம் மற்றும் நிறுத்தங்கள் பற்றி எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால் 20 கி.மீ. தொலைவில் இருந்தும் குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர். பள்ளி வாகனங்களை இயக்கும் தனியார் பள்ளிகளுக்கு இது லாபமாக இருப்பதோடு, துணைத்தொழிலாகவும் இருக்கிறது.
‘‘சில பள்ளிகளில் சொந்தமாக வேனோ, பஸ்ஸோ வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அந்தப் பள்ளி நிர்வாகத்தினர், வேன் வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு காலை, மாலை என இரண்டுவேளை மட்டும் மாத வாடகைக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்படி கேட்கிறார்கள். அவர்களும் அந்த இரண்டு சவாரி அடித்த பின்பு மற்ற சவாரிக்குச் சென்றுவிடுகிறார்கள். வேனில் மஞ்சள் நிறத்தை அடித்தால் அது பள்ளி வாகனமாக மாறிவிடும். இதனால் வேற எந்த சவாரிக்கும் செல்லமுடியாது. ஆர்.டி.ஓ அலுவலகங்களோ, காவல் துறையோ இதுபற்றிக் கண்டுகொள்வதில்லை. சாலைகள் சரியில்லாத காரணத்தாலும், டீசல் விலை அதிகரிப்பாலும் ஒரே நேரத்தில் அதிகமான குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகிறது’’ என்கிறார்கள் பள்ளி வாடகைக்கு வேன் ஓட்டும் டிரைவர்கள்.
''பள்ளி வாகனங்களை, பள்ளியில் நிறுத்திவைப்பதில்லை!''
‘‘மழலையர் பள்ளி ஒன்றில் படித்துவரும் எல்.கே.ஜி மாணவி ஒருவருக்கு மதியவேளையின்போது, திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு ஸ்கூல் வாகனத்தைத் தேடினார்கள். ஆனால், அந்த வாகனம் வேறொரு சவாரிக்குச் சென்றிருந்தது. பின்பு, ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். ஸ்கூல் முடியும்வரை பள்ளி வாகனங்களை, பள்ளியிலேயே நிறுத்திவைக்காததன் விளைவுதான் இதுபோன்ற விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வேனில், பாதுகாப்புக் குறைவாக உள்ளது என்று எல்லாக் குழந்தைகளின் பெற்றோர்களும் கேட்க வேண்டும். அவர்கள் யாரும் அப்படிக் கேட்பதில்லை. தனிப்பட்ட முறையில் பெற்றோர் யாராவது கேட்டால், ‘உங்கள் குழந்தையை நீங்களே பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு வாருங்கள்’ என்கிறார்கள். இதனால் பள்ளி நிர்வாகத்திடம் எதுவுமே பேச முடிவதில்லை. தனியார் கல்லூரிப் பேருந்துகள்கூட ஏசி வசதி செய்யப்பட்டு முறையான பராமரிப்புடன் செல்கின்றன. அந்தப் பேருந்துகளின் கதவைத் திறந்துவிடுவதற்கும், மூடுவதற்கும் கிளினர்கள் இருக்கிறார்கள். ஆனால், விவரம் தெரியாத குழந்தைகளை அழைத்துச் செல்லும் பள்ளி வேன்களில் கிளினர்களோ, ஆயாக்களோ இருப்பதில்லை. குழந்தைகளே கதவைத் திறந்துகொண்டு இறங்குகின்றனர். வேனில் இருந்து இறங்கிய குழந்தைகள், வேனைவிட்டுத் தள்ளிச் சென்றுவிட்டனவா என்றுகூட டிரைவர்கள் பார்ப்பதில்லை’’ என்று புலம்புகின்றனர் பெற்றோர்கள்.
‘‘அரசுப் பேருந்துகள் எதற்கும் இன்சூரன்ஸே இல்லை!’’
இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசினோம். ‘‘மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என, வருடத்துக்கு நான்கு தடவை எஃப்.சி செய்யவேண்டும் என்பதால், ஒவ்வொரு முறையும் ஆர்.டி.ஓ அலுவலகங்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. பணம் கொடுக்கவில்லை என்றால் எஃப்.சி செய்யமாட்டார்கள். இதுபோல் இந்தியாவில் எங்கும் இல்லை. தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. பள்ளிக்கூட வாகனங்களுக்கு கண்டக்டர் அவசியம் இல்லை. வெறும் கிளீனர் மட்டும் இருந்தால் போதும். அவர்கள் சொல்லும் அளவுக்கு படிக்கட்டுகளைவைத்தால், சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும்போது வாகனம் சேதமடைகிறது. இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தனியார் ஒப்பந்த வாகனங்களுக்கு பள்ளிக்கூட லைசென்ஸ் இல்லை. ஆகையால், இதில் விபத்து ஏற்பட்டால் அது அந்த வாகன உரிமையாளர்களையே சாரும். அவர்கள்தான் அதற்கு முழுப் பொறுப்பும் ஏற்கவேண்டும். கோர்ட் அறிவித்துள்ள இந்த விதிமுறைகள் பள்ளி வாகனங்களுக்கு மட்டும்தான். மற்ற வாகனங்களுக்கு அல்ல. இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கேட்கமாட்டார்கள். காரணம், அரசுப் பேருந்துகளுக்கு டாக்ஸ், இன்சூரன்ஸ், ஸ்டெஃப்னி போன்ற எதுவும் இல்லை. முக்கியமாக, அரசுப் பேருந்துகள் எதற்கும் இன்சூரன்ஸே இல்லை. அரசுப் பேருந்துகளில் ஓவர் லோடு ஏற்றி எத்தனையோ பள்ளிக் குழந்தைகள் இறந்திருக்கின்றனர்... இப்படி ஆயிரம் கேள்விகளை அவர்கள் கேட்பார்கள்’’ என்றார்.
‘‘அக்கறையின்மையை காட்டுகிறது!’’
பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ‘‘இந்த விஷயத்தில் குழந்தைகள் மீது பள்ளிக்கூடம் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற அக்கறையின்மையை காட்டுகிறது. இதுகுறித்து பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தில் சொல்லப்பட வேண்டும். பள்ளிக்கூட வாயிலில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். போக்குவரத்துத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்து அதை ஓர் அறிக்கையாகப் பள்ளி தொடங்குமுன் வெளியிட வேண்டும். தனியார் வாகன ஒப்பந்த உரிமையாளர்களையும் அழைத்து இதுபோன்ற விதிமுறைகளைப் போக்குவரத்துத் துறை அறிவுறுத்த வேண்டும். பள்ளிக் குழந்தைகளை ஏற்றக்கூடிய வாகனங்கள் பள்ளியின் பெயரில் இல்லாவிட்டாலும் (ஒப்பந்ததாரர் பெயரில் இருந்தாலும்) அதற்குப் பள்ளிக்கூடம்தான் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான முறையான அறிவிப்பை பள்ளிக்கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொடுக்க வேண்டும். வாகன ஒப்பந்ததாரர், குழந்தைகளைக் கொண்டுவந்து இறக்கிவிடுகிறார் என்றால்கூட, பள்ளி நிர்வாகம் அவர் எத்தனை குழந்தைகளை இறக்கிவிடுகிறார்; நம் பள்ளிக்கு மட்டும் ஏற்றிவருகிறாரா? என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்படிச் செய்தால் இதுபோன்று செய்யக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
‘‘கல்விக்குழு ஆய்வு நடத்த வேண்டும்!’’
குழந்தைகளின் நலனைக் கருதி பள்ளி வாகனங்களில் இதுபோன்ற விதிமுறைகள் இருக்கிறதா என்பதைப் பெற்றோர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். அப்படிப்பட்ட வாகனங்கள்தான் வருகின்றனவா என்பதை அவர்களும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படி இல்லாத வாகனங்களில் குழந்தைகளை அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைச் சேர்ப்பதே இதற்கு முதல் பாதுகாப்பு. அப்படி இல்லை என்றால், குழந்தைகள் எப்படி வருவார்கள் என்பதைப் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளி வாகனத்தில் வரவில்லை என்றால் வேறு எந்த வாகனத்தில் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்கு, கல்வியாளர்களைக் கொண்ட கல்விக் குழு சொன்ன பரிந்துரை, வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பள்ளிக்கூடமே மிகச் சிறந்த பாதுகாப்பு. அரசாங்கம், ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு புவியியல் எல்லையை வரையறுத்துக் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை எடுக்க அரசு என்று முன்வருகிறதோ அன்றுதான் குழந்தைகளுக்கு மெய்யான பாதுகாப்பு. ஆய்வுகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட கல்விக்குழுவும் அவ்வப்போது சென்று ஆய்வு நடத்த வேண்டும்.’’ என்றார்.
போக்குவரத்துத் துறையில் விசாரித்தபோது, ‘‘இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது’’ என்று முடித்துக்கொண்டார்கள்.
‘பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்’ என்பதே ஓங்கி ஒலிக்கப்படும் குரல்.
2016-ம் ஆண்டில் நடந்த பள்ளி வாகன விபத்துகள்!
1. ஜூன்-1: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 18 பேர் படுகாயம்.
2. ஜூன்-8: திருப்பூர் விஜயாபுரம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 22 குழந்தைகள் காயம்.
3. ஜூன்-8: மதுரை மாவட்டம் மேலூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் காயம்.
4. ஜூன்-10: சிதம்பரம் தீத்தாம்பாளையம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் படுகாயம்.  
5. ஜூன்-14: திருப்பூர் அணைப்புதூர் அருகே பள்ளி வாகனம் மோதியதில் 80 வயது மூதாட்டி இறந்துபோனார்.
6. ஜூன்-15: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு - குன்றத்தூர் இடையே 3 வயது கவிநிலா, பள்ளி வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டுக்குச் சென்றபோது, அதே வாகனத்தின் சக்கரம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தார்.
 ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment