Saturday, September 17, 2016

திரு.வி.க-விடம்... அவர் மனைவி கேட்டது என்ன ? - திரு.வி.க நினைவு நாள் பகிர்வு

(இந்தக் கட்டுரை 17-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

‘‘காபி, வயப்படுத்தும் ஆற்றல்கொண்டது!’’
‘‘நல்லன கொண்டும், தீயன விலக்கியும் மற்றவர் வாழ்வதற்கு என் வாழ்க்கைக் குறிப்புகள் ஓரளவிலாது துணைபுரியும்’’ - என்றவர் திரு.வி.கல்யாணசுந்தரனார். அவர், 1883-ம் ஆண்டு விருத்தாசலனார் – சின்னம்மையார் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். பனை ஓலை வேய்ந்த சிறு குடில் வீட்டில் பாசத்துடன் வளர்க்கப்பட்டார். குழந்தைப் பருவத்தில் சீதபேதியினால் அவதிப்பட்டார். இடையிடையே ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளால் அவரின் கல்வி தடைப்பட்டது. யாழ்ப்பாணம் கதிரைவேலிடம் தமிழைக் கற்றறிந்தார். தன் பொருட்களைக் கொடுப்பது, வேட்டியைத் துவைப்பது எனச் சண்டையில்லாமல் தன் சகோதரருடன் இணக்கமாக இருந்தார். ஆவின் பாலை, தன் உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்வார். இதனால் டீ, காபி அருந்தமாட்டார். ஒருநாள், தலைவலியும் கண்வலியும் தொடர்ந்தபோது மருத்துவர் காபியில் மருந்தைக் கலந்துகொடுக்க... அதுமுதல் காபிக்கு அடிமையானார். ‘‘காபி, பொல்லாதது... ஏமாந்தால், அது எல்லோரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல் கொண்டது’’ என்று காபிக்கே இலக்கணம் கொடுத்தார்.
ஒரு சமயம் அமீனா என்ற அரசியல் பிரமுகரைக் கண்டு உடனிருந்த நண்பர்கள், ‘அமீனா, அமீனா’’ என்று அழைத்தப்படியே ஓடினர். ஆனால் திரு.வி.க-வோ, ‘‘அமீனாவுக்குக் கொம்பா முளைத்திருக்கிறது’’ என்று கேட்டுக்கொண்டு அதே இடத்திலேயே நின்றார். இதனைக் கேட்ட அமீனா, இவருடைய அஞ்சாநெஞ்சத்தைப் பாராட்டிச் சிரித்தப்படியே சென்றார்.
‘‘உங்களிடம் விரும்புவது கல்வி மட்டுமே!’’
ஒற்றுமையைக் குலைக்காத, அமைதிக்கு உருவான கமலாம்பிகை என்ற நங்கையை 1912-ல் திருமணம் செய்துகொண்டார். அவர், ‘‘தனக்குக் கல்வி போதிக்க வேண்டும்’’ என்று தன் கணவரிடம் கோரிக்கைவைத்தார். அதற்கு திரு.வி.க., ‘‘நீ இளமையில் பொன், புடவைகளை அல்லவா கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு வேறு எதையோ கேட்கிறாயே’’ என்றார். அதற்கு கமலாம்பிகை, ‘‘எனக்கு நகைகள் இருக்கின்றன. என் அன்னையாரின் விலை உயர்ந்த புடவைகள் பல இருக்கின்றன. நான் என்ன கேட்டாலும் வாங்கித்தர பெரியப்பா இருக்கிறார். ஆகவே, உங்களிடம் விரும்புவது கல்வி மட்டுமே’’ என்று பதிலளித்தாராம். அவர் கேட்டுக்கொண்டபடி அவருக்கு தமிழ் கற்பித்தார் திரு.வி.க.
மறுமணத்துக்கு மறுப்பு!
கமலாம்பிகை, இனிமையாகப் பாடக்கூடியவர். ஆகையால் அவரை, திருவொற்றியூர் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவரைப் பாடவைத்துக் கேட்டு மகிழ்வார். அவர்களுடைய இல்லற வாழ்க்கையின் பயனாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இரண்டும் இறந்துவிட்டன. கமலாம்பிகையும் எலும்புருக்கி நோயால் இறந்துபோனார். மனைவியை இழந்து துக்கத்தில் இருந்த திரு.வி.க-வைப் பலர், மறுமணம் செய்யச் சொல்லி வலியுறுத்தினர். அதற்கு அவர், ‘‘என் வயது 35. இந்த வயதில் ஓர் இளம்பெண்ணை மணம் செய்வது அறமா?’’ என்று அவர்களையே கேட்டு மறுத்துவிட்டார். வேறு சிலரிடம், ‘‘ ‘தேசபக்தன்’ கட்டுரைகளையொட்டி நான் சிறை செல்ல நேரிடலாம் என்று ஊர் பேசுவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்த நிலையில் மறுமணமா?’’ என்று சொல்லி மறுமணப் பேச்சுக்கே இடமில்லாமல் முற்றுப்புள்ளி வைத்தார்.
தொழிலாளர் தொண்டில் உறுதுணை!
சிறுவயதில் பெண் குழந்தைகளுடன் விளையாடியதால், பின்னாளில் பெண்ணினத்தைப் போற்றும் அளவுக்கு உயர்ந்தார். தமிழகத்தில் பெண் கல்லூரி அமைய எண்ணம் கொண்டிருந்தார். அந்த எண்ணம் யாழ்ப்பாணம் சென்று ராமநாதன் பள்ளிகளில் கண்டபோது எதிரொலித்தது. ஆனால், அவருடைய எண்ணம் நிறைவடையவில்லை. தன் குடும்பம் மட்டுமல்லாது, ஆசிரியர், நண்பர்கள், உறவினர்கள் பலருக்கும் சிறுசிறு வேலைகள் செய்து வந்தார். அதனாலேயே தொண்டு எண்ணம் அவர் நெஞ்சில் உதித்தது. ‘‘தொழிலாளர் சேவை நாட்டுக்கு மட்டும் உரியதன்று. அது, உலகுக்கும் உரியது. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடுவது உலகத் தொண்டில் ஈடுபடுவதாகும்’’ - என்று தொழிலாளர் தொண்டுக்குக் குரல் கொடுத்ததோடு அதில் உறுதுணையாக நின்றார்.
கட்டுப்பாடுகளை மீறியவர்!
ஒரு சமயம், திருவல்லிக்கேணி சிவனடியார் திருக்கூட்ட விழாவில், மாகேசுர பூஜை நடந்தது. அப்போது, உணவுக்குப் பெரும் கூட்டம் கூடியது. அந்த நேரத்தில் எச்சில் இலை எடுப்பவர் எங்கேயோ சென்றுவிட்டார். அதைக் கண்ட திரு.வி.க., உள்ளே புகுந்து இலைகளை எடுக்க ஆரம்பித்தார். அதைப் பார்த்த சிலரும் அந்த வேலையில் இறங்கினர். இதுபோல் ராயப்பேட்டை பாலசுப்ரமணிய பக்தஜன சபையிலும் செய்துள்ளார். கெளரவம் பார்க்காமல் வேலை செய்யக்கூடிய பண்பாளர் திரு.வி.க. அதே சபையில் திரு.வி.க-வின் பள்ளித் தோழரான ஏகாம்பரம் என்பவர் உறுப்பினராய் இருந்தார். அவர் உடலில் பெரிய அம்மை வார்த்தது. ‘அம்மை தொற்றுநோய்... இளைஞர்கள் அணுகுதல் கூடாது’ என்று கட்டுப்பாடு வீடுதோறும் வீறிட்டது. ஆனால், அவற்றையும் மீறிப்போய் அவருக்கு உதவினார் திரு.விக. இருந்தாலும், ஏகாம்பரத்தின் உயிரை அம்மை நோய் எடுத்துச் சென்றுவிட்டது. ‘இளைஞர்கள் சுடுகாட்டுக்குப் போகக் கூடாது’ என்று கட்டளை பிறந்தது. அதையும் மீறிச் சுடுகாடு சென்று அவருடைய ஈமக்கடன்களில் பங்கெடுத்துக்கொண்டவர் திரு.வி.க.
உறவினர் ஒருவர், ஆந்திராவில் அரசு வேலையில் இருந்தார். அவர், திரு.வி.க-வை மதிப்பதில்லை. இந்த நிலையில், அவருக்குத் திடீரென்று வேலை போனது. அவருடைய நிலைமையைத் தெரிந்தகொண்ட திரு.வி.க., ஜஸ்டிஸ் சதாசிவத்திடம் அழைத்துச் சென்று விவரத்தைச் சொன்னார். நிரபராதியாகி, இழந்த வேலையை மீண்டும் பெற்றார் அந்த உறவினர். தன்னை மதிக்காத மனிதர்களுக்குக்கூட உதவும் எண்ணம் கொண்டவராக விளங்கினார் திரு.வி.க.
கவர்னரை மிரட்டிய எழுத்து!
சென்னையின் கவர்னராக லார்டு வெலிங்டன் பதவி வகித்தபோது, பத்திரிகை ஆசிரியர்களைக் கண்டு பேச விரும்பினார். அதன்படி அனைத்து ஆசிரியர்களும் அவரைச் சந்தித்தனர். அப்போது, ‘‘ஆங்கில அரசாங்கத்தைத் தாக்கி எழுதக் கூடாது’’ என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார் வெலிங்டன். மேலும் திரு.வி.க-வைப் பார்த்து, ‘‘உங்களுடைய எழுத்து வேகம் உடையது என்றும், மக்களைக் கொதித்து எழச் செய்யக்கூடிய தன்மை உடையது என்றும் நான் அறிகிறேன். ஆகையால், வேகத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு அவருடைய எழுத்தில் அனல் பறந்தது. அதுபோல் ஒருமுறை ஞானியார் அடிகள், தியாகராயரிடம், ‘‘நீர் யாரிடம் தமிழ் பயின்றீர்’’ என்று வினவியிருக்கிறார். அதற்கு தியாகராயர், ‘‘நான் எந்தப் பள்ளிக்கும் போனதில்லை. எவரிடமும் தமிழ் பயிலவில்லை. என் பள்ளி திரு.வி.க-வே. அவர் பேச்சும், எழுத்தும் நான் பயின்றவை’’ என்று பதில் அளித்தாராம்.
மகாத்மாவின் பேச்சை மொழிபெயர்த்தார்!
திரு.வி.க-வின் உள்ளத்தில் காந்தியடிகளுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அவரை, ‘காந்தியடிகள்’ என்று முதன் முதலில் அழைத்தது திரு.வி.க-தான். ஒரு சமயம், காந்தியடிகளைச் சந்திப்பதற்காக விஜயராகவாச்சாரியார் கொடுத்த கடிதத்துடன் அரக்கோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்தார் திரு.வி.க. ரயிலில் இறங்கிய காந்தியடிகள், “ ‘தேசபக்தன்’ எந்த மொழிப் பத்திரிகை?’’ என்றார். “தமிழ்ப் பத்திரிகை’’ என திரு.வி.க சொல்ல, “நீங்கள் பட்டதாரியா?’’ என்றார் காந்தி. “நான் பட்டதாரி இல்லை. மெட்ரிகுலேஷன் வரை ஆங்கிலம் பயின்றவன். தமிழாசிரியனாக இருந்தவன். என்னால் நன்றாக மொழிபெயர்க்க முடியும். தொழிற்சங்கக் கூட்டங்களில் வாடியா, அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சுகளை நான்தான் மொழிபெயர்ப்பேன்’’ - என்றார் திரு.வி.க. “என் பேச்சை மொழிபெயர்ப்பீரா?’’ என காந்தியடிகள் கேட்க, “மொழிபெயர்ப்பென்’’ எனச் சொல்லி... தொழிலாளர் கூட்டத்தில் காந்தியின் பேச்சை அவரே மொழிபெயர்த்துக் கூறினார். அதுமுதற்கொண்டு திரு.வி.க-வை காந்தியடிகள் காணும்போதெல்லாம், “என்ன மொழிபெயர்ப்பாளரே’’ என்றே அழைத்துவந்தார்.
யார் ஒருவர் தன்னலம் கருதாது தன் மொழிக்காகவும், தன் மக்களுக்காகவும், தன் மண்ணுக்காகவும் உழைக்கிறாரோ அவருடைய வாழ்க்கை வரலாறு ஆகிறது. அப்படிப்பட்ட பன்முகத் திறன்கொண்டவராக விளங்கிய திரு.வி.க., 1953-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாள் இவ்வுலகை நீத்தார்.
‘‘தமிழுக்குக் கிடைத்த இரு சுடர்கள்... இரு திருவிளக்குகள் மறைமலையடிகளாரும், திரு.வி.க-வும்’’ என்றார் அறிஞர் அண்ணா.
‘‘தமிழ்நாட்டுக்கு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்குத் தாயாகவும் விளங்கியவர்’’ என்று பாராட்டினார் கல்கி.
‘‘இன்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் விதைத்த விதை வளர்ந்தே வருகிறது’’ - என்று எப்போதோ அவர் சொன்ன வரிகள், இன்று அவர் விதைத்த அனைத்துத் தொண்டுகளிலும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment