Saturday, September 17, 2016

'தமிழுக்காக மகளிடம் உரையாடிய தந்தை!' - மறைமலை அடிகள் நினைவு தினச் சிறப்புப் பகிர்வு

(இந்தக் கட்டுரை 15-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

‘‘என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள். ஒருவர், எதன்மீது காதல்கொள்கிறாரோ... அவர், அதன் முக்கியத்துவத்தை உணர முடியும். அதனால்தான் என்னவோ தெரியவில்லை, தமிழ் மொழியின்மீது தீராத காதல்கொண்டு, தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்து தமிழ்மொழிக்கு தன்னிகரில்லாத் தொண்டாற்றியவர் மறைமலையடிகள். அதன் பயனாகத்தான் இன்று நமது தமிழ், செம்மொழி தகுதியைப் பெற்றிருக்கிறது.
‘மும்மணிக் கோவை’ பாடினார்!
‘‘அடிகளே தென்னாடு... தென்னாடே அடிகள்’’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க-வால் புகழப்பட்ட மறைமலை அடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்... இப்படித் தமிழுக்காக வாழ்ந்த மறைமலை அடிகள், நாகை மாவட்டம் காடம்பாடி எனும் சிற்றூரில் 1876-ம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் சொக்கநாத பிள்ளை - சின்னம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது இயற்பெயர் சாமி வேதாச்சலம். தன்னுடன் சிறுவயது முதல் பழகிய செளந்திர வள்ளியம்மை என்ற பெண்ணை, மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. தன்னுடைய 22-வது வயதில் கடும்சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, திருவொற்றியூர் முருகன் மீது பக்திகொண்டு, ‘மும்மணிக் கோவை’ பாடினார். அதன் பயனாக, முருகப் பெருமான் அவர் நோயைக் குணமாக்கினார். ‘மும்மணிக் கோவை’யில் உள்ள புலவராற்றுப் படை என்னும் பாடல் நீண்ட ஆசிரியப்பாவால் ஆனது.

மகளிடம் நடத்திய உரையாடல்!
‘‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!’’''
- என்கிற பாடலை மகள் நீலாம்பிகை பாட... தந்தை சாமி வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ‘‘நீலா... இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு, ‘உடம்பாகிய யாக்கை’ என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் சாமி வேதாச்சலம்.
‘‘அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல... அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதிவைத்தவர் மறைமலை அடிகள். இவை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளன. ‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல... அவருடைய தனித்தமிழ் இயக்கம். தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது.
‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது... தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தமிழுக்கு விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.
பரிதிமாற்கலைஞர் கேட்ட கேள்வி!
மறைமலை அடிகள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுவதற்்காக அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த பரிதிமாற்கலைஞரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று கேள்வி கேட்டார். ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் மறைமலை அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது’’ என்று சொல்பவரை, ‘‘எப்படித் தேர்வு செய்யலாம்’’ என்று மற்ற உறுப்பினர்கள் கேட்டபோது, ‘‘ ‘அஃது’ என்பது, ஆயுதத் தொடர் குற்றியலுகரம். ‘எனக்கு’ என்பது, வன்தொடர்க் குற்றியலுகரம். ‘தெரியாது’ என்பது, உயிர்த்தொடர் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர். வேலை கிடைத்துவிட்டபோதிலும் பரிதிமாற்கலைஞரையே கேள்வி கேட்டு வியக்கவைத்தவர் மறைமலை அடிகள்.
மாநாட்டில் கலந்துகொள்ள மறுப்பு!
1933-ல் சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் அடிகள். அதில், ‘‘தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடம் தரவில்லை. பண்பட்ட பழைய மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டைய நலம்சார்ந்த புகழோடு வாழ்கிறது. பிறமொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்கும் என்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகிறோம். ஆதலால், எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக்கொள்வீர்களாக’’ என்று எழுதியிருந்தார். இதன்மூலம் அவர் தமிழ் வளர்ச்சிக்கு எங்ஙனம் விளங்கினார் என்பதைக் காணமுடிகிறது.
16-9-1943 அன்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியபோது... ஒருவர், ‘‘திராவிட நாடு பற்றி தங்கள் கருத்து யாது’’ எனக் கேள்வி கேட்டார். அதற்கு அடிகள், ‘‘இந்தியா முழுவதுமே திராவிட நாடுதான்’’ என்றார்.
தனித்தமிழ் இயக்கம்!
‘ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. இந்தச் சமயத்தில்தான் தன் பெயரை, ‘மறைமலை அடிகள்’ (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி - அடிகள்) என்று மாற்றிக்கொண்டார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.
காஞ்சி மடாதிபதியின் அறிவிப்பு!
முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிய முறையில் தமிழில் உரை எழுதினார். வடமொழியில் காளிதாசன் படைத்த, ‘சாகுந்தலம்’ எனும் காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இதைப் படித்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர ஸ்வாமிகள், ‘‘இதுபற்றி சிறந்த கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.100 பரிசு தரப்படும்’’ என்று 1957-ல் அறிவித்தார். மகா பெரியவரையே மயக்கிய நூல் அது.
‘இந்தி பொது மொழியா?’
மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். 1937-ல், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறை திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்? சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று அனுப்பிவைத்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ‘‘ஆங்கில மொழியில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம்’’ என்றார்.
இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார். சைவச் சித்தாந்த கொள்கை நெறி குறித்து கேள்வி எழுந்தபோது, ‘‘சைவத் திருமறைகள் 12-ம், மெய்க்கண்ட நூல்கள் 14-ம் அவற்றுக்கு மாறுபடாமல் அவற்றைத் தழுவிச் செல்லும் ஏனைய பிற நூல்களுமே சைவச் சித்தாந்த அடிப்படை முதன்மை நூல்களாக விளங்குகின்றன’’ என்று மறைமலை அடிகளார் தெரிவித்துள்ளார்.
திரு.வி.க. புகழுரை!
‘‘மறைமலை ஒரு பெரும் அறிவுக்கடல். தமிழ் நிலவு, சைவவான் அவற்றை நக்கீரரும் பிற்றைச் சிவஞான முனிவரும் ஓர் உருக்கொண்டு சிற்றை மறைமலையடிகளராகத் தோன்றித் தமிழ் வளர்க்கிறார்’’ என்று திரு.வி.க., மறைமலை அடிகளாரைப் புகழ்ந்துள்ளார்.
‘‘மறைமலையடிகளும், கா.சு.பிள்ளையும் என் வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்’’ என்றார் தந்தை பெரியார்.
‘தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மறைமலை அடிகள், 1950-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். மறைமலை அடிகள் தனித்தமிழ் கண்ட நாட்டில்தான், தமிழில் பேசுவதையே கேவலமாக நினைக்கும் காலம் உருவாகிவிட்டது.
‘‘தமிழில் பிறமொழிக் கலப்பை ஒதுக்கித் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள்... வல்லோசைகளைப் பெருக்காதீர்கள்’’ என்கிற மறைமலை அடிகளாரின் கூற்றுப்படி தமிழை வளர்ப்போம்.
- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment