Thursday, September 29, 2016

செல்ஃபி ஓர் ஆபத்து!

‘சொறி பிடிச்சவன் கையும், இரும்பு பிடிச்சவன் கையும் சும்மா இருக்காது’ என்பது பழமொழி. ஆனால், அதையே மாற்றி, ‘ஸ்மார்ட் போன் பிடித்தவர் கை... இன்று செல்ஃபி எடுக்காமல் சும்மா இருக்காது’ என்றால் மிகையாகாது. ‘செல்ஃபி’ என்கிற வார்த்தைகூட இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவராலும் உச்சரிக்கப்படும் அளவுக்கு முதலிடம் வகிக்கிறது. நிற்கும்போது, நடக்கும்போது, உட்காரும்போது, படுக்கும்போது என உலகமே செல்ஃபி மோகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, போப் ஆண்டவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என யாரையும் செல்ஃபி மோகம் விட்டுவைக்கவில்லை. அதிலும் குறிப்பாக செல்ஃபி இளசுகளை விடுவதாக இல்லை.


செல்ஃபி வரலாறு!
செல்ஃபி’ என்பது தன்னைத்தானே புகைப்படம் பிடித்துக்கொள்வதாகும். செல்ஃபி (Selfie) என்பது ஓர் ஆங்கிலச் சொல்லாகும். ஸ்மார்ட் போன்கள் வருகைக்குப் பின்னர் இதன் தாக்கம் அதிகரித்துவிட்டது. சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்ட்டாகிராம், டம்பிள்ளார் போன்றவற்றில் செல்ஃபி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த செல்ஃபியின் தாக்கம் ஏதோ கடந்த சில ஆண்டுகளில் தோன்றியது என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இது 175 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். முதன்முதலில் 1839-ம் ஆண்டு ராபர்ட் கர்னேலியஸ் என்பவர், தன்னுடைய கேமராவை ஸ்டான்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்து, கேமராவின் முன்னால்போய் அசையாமல் நின்றார். பிறகு மீண்டும் கேமராவின் கதவை மூடி, அந்த பிலிமை டெவலப் செய்தபோது கிடைத்ததுதான் உலகின் முதல் செல்ஃபி. இதன் பெருமைக்குச் சொந்தக்காரர்தான் ராபர்ட் கர்னேலியஸ். இருந்தாலும், செல்ஃபி எனும் வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் எனும் பெருமை நாதன் ஹோப் என்பவருக்கே கிடைத்தது. 2002-ம் ஆண்டில் நாதன் ஹோப்புக்கு ஏற்பட்ட சிறுவிபத்தில் அவருடைய உதடுகள் அடிப்பட்டன. அதை அப்படியே படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டார். அத்துடன், ‘‘ஃபோகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க. இது ஒரு செல்ஃபி, அதான் காரணம்’’ என்று ஒரு கமென்ட்டையும் எழுதியிருந்தார். அவர் எழுதிய செல்ஃபி என்கிற வார்த்தைதான் தற்போது பிரபலமாக ஆரம்பித்து இருக்கிறது.


செல்ஃபி பயன்பாடு!
செல்ஃபி’ என்கிற வார்த்தைக்கு ஆங்கில அகராதியில், ‘ஒருவர் டிஜிட்டல் கேமரா மூலமாகவோ, வெப்கேம், டேல்லெட், ஸ்மார்ட் போனின் முன்பக்க கேமரா போன்ற எதன் மூலமாகவோ, தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் புகைப்படம்’ என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகையானது, ‘2012-ம் ஆண்டு உலக அளவில் பிரபலமாய் இருந்த 10 வார்த்தைகளில் செல்ஃபியும் ஒன்று’ என்றது. 2013-ம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு அகராதி, ‘இந்த ஆண்டின் புகழ்பெற்ற வார்த்தை செல்ஃபிதான்’ என அறிவித்தது. 10 - 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எடுக்கும் புகைப்படங்களில் 30 சதவிகிதம் செல்ஃபி வகையறாவில் சேர்கின்றன என்கிறது ஓர் ஆய்வு. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்குச் சிறப்புச் சேர்ப்பவை இந்த செல்ஃபிக்கள்தான். இன்ஸ்டாக்ராம் எனும் வலைதளத்தில் 5.3 கோடி புகைப்படங்கள் செல்ஃபி வகையில் குவிந்துகிடக்கின்றன. உலகிலேயே நம்பர் 1 செல்ஃபி சிட்டி, பிலிப்பைன்ஸ்தான் என்றும், ஆண்களைவிட பெண்களைத்தான் செல்ஃபி மோகம் ஆட்டிப்படைப்பதாகவும் சொல்கிறது ஓர் ஆய்வு. மேலும், வாரந்தோறும் 40 சதவிகிதம் இளசுகள் தவறாமல் செல்ஃபி எடுப்பதாகவும், 47 சதவிகிதம் பெரியவர்கள் தங்களை செல்ஃபி எடுத்து இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


செல்ஃபி விபத்துகள்!
செல்ஃபியின் பயன்பாடும், சுவாரஸ்யங்களும் உலகெங்கும் பரவியிருக்கும் வேளையில் செல்ஃபிக்காக உயிரை விட்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தியாகும். இன்றைய தலைமுறையினரிடம் மிக அபாயமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள், பலர் ஆபத்துகளையும் கண்டுகொள்ளாமல் உயரமான கட்டடங்கள், கால்வாய்கள், அணைகள், பாலங்கள், வன விலங்குகள் என பலவற்றிலும் நெருங்கிச் சென்று செல்ஃபி எடுக்கிறார்கள். அப்படி செல்ஃபி எடுக்கையில் சிலர் கால் தவறிவிழுந்து பலியாகின்றனர்.

உலக அதிசயத்தில் ஒன்றான தாஜ்மஹாலைப் பார்வையிடச் சென்ற ஜப்பான் நாட்டுக்காரர் ஒருவர், செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது கட்டடத்திலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்தார். இலங்கையில் மாணவர் ஒருவர் ரயிலில் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது காயமடைந்தார். ரஷ்யாவில் செல்ஃபி எடுக்க முயன்ற பெண் ஒருவர் 40 அடி உயர பாலத்தில் இருந்து தவறிவிழுந்ததில் பலியானார். ரஷ்யாவில் மட்டும் செல்ஃபி எடுக்கையில் 10 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 100 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மலை உச்சியில் இருந்து போலந்து நாட்டுத் தம்பதியர் செல்ஃபி எடுக்க முயன்றபோது கால்தவறி கடலில் விழுந்து உயிரிழந்து உள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் வரதட்சணை கொண்டு வராத கடுப்பில் செல்ஃபி எடுக்கும்போது மனைவியை கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுவன் துப்பாக்கியைத் தனது நெற்றிப்பொட்டில் வைத்தபடி செல்ஃபி எடுக்கையில் குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். உத்தரப் பிரதேசத்தில் ரயில்வே டிராக்கில் நின்று ஓடும் ரயில்களின் முன்பாக செல்ஃபி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் பலியாகினர். கோவாவில் உள்ள கடற்கரைக் கிராமமான அன்ஜுனாவில் சாரத்தில் ஏறி செல்ஃபி எடுக்கையில் தவறி விழுந்த 2 பெண்களின் இடுப்புக்குக் கீழ் உடல் பாகங்கள் வேலை செய்யாமல் போயின. உத்தரப் பிரதேசம் கங்கை நதியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது அடுத்தடுத்து தவறிவிழுந்து நீரில் மூழ்கி நண்பர்கள் 7 பேர் பலியாகினர். திருப்பூரில் குடிபோதையில் நல்ல பாம்புடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தபோது, பாம்பு கடித்ததில் புது மாப்பிள்ளை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இப்படி கடந்த சில வருடங்களாக செல்போன்களில் எடுக்கப்படும் ஆபத்தான ‘செல்ஃபி’களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பல்வேறு எச்சரிக்கைக்குப் பிறகும் ‘செல்ஃபி’ மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. செல்ஃபி எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக பலியாவோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. அதில், கடந்த 2015-ம் ஆண்டில், உலக அளவில் செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களில் எண்ணிக்கை 27. இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் வரும்போது செல்ஃபி எடுப்பது, 60 அடி உயரமான கட்டடத்தில் இருந்து செல்ஃபி எடுப்பது என ஆபத்தான பகுதிகளில் விபரீதம் அறியாமல் நடந்துகொண்டதால் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது’ எனக் குறிப்பிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மும்பையில் 16 இடங்களில், செல்ஃபி எடுக்க காவல் துறை தடை விதித்துள்ளதுடன், ‘No selfie zone’ என்று எழுதப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.


செல்ஃபி சர்ச்சைகள்!
செல்ஃபியினால் மரணங்கள் நிகழ்வது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அதனால் ஏற்படும் சர்ச்சைகளும் அதிகம். ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுடன் விசாரணைக்குச் சென்ற அந்த மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சோம்யா குர்ஜார் செல்ஃபி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா தனது மனைவி ரீவா சோலங்கியுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் சிங்கங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை விட்டுத் தப்பிச்சென்ற விஜய் மல்லைய்யாவுடன் செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கினார் டோலிவுட் நடிகர் அல்லரி நரேஷ். சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங், பாலிவுட் நடிகை கரினா கபூருடன் செல்பி எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.


செல்ஃபி பிரச்னைகள்!
செல்ஃபியினால் சர்ச்சைகள், விபத்துகள் மட்டுமல்லாது பிரச்னைகளும் உருவாகின்றன. உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்கள் நான்கு பேர் மது அருந்துவதை செல்ஃபி எடுத்து, அதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்துள்ளனர். அந்த நண்பர்களின் உறவினர் அதைப் பார்த்துவிட்டு வீட்டில் சொல்ல மானம் போய்விட்டது அந்த இளைஞருக்கு. இதேபோல், தன் காதலனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வெளிவர அந்தப் பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அந்தப் பையனை திட்டி சண்டை, போலீஸ் எனச் சென்றிருக்கிறது அந்த செல்ஃபி கேஸ். செல்போன் ரிப்பேர் ஆனதால், அதைச் சரிசெய்ய கடையில் கொண்டுபோய் கொடுத்திருக்கிறார் ஒரு மாணவி. அதிலிருந்த, செல்ஃபிக்களை அந்தக் கடைக்காரன் சமூக வலைதளங்களில் வெளியிட அவமானத்தில் தற்கொலை செய்துகொண்டார் அந்த மாணவி. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க... மும்பையில் பிரபல வங்கியொன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர், தான் குளிக்கும்போது, உடை மாற்றும்போது செல்ஃபி எடுத்து அதைத் தன் காதலனுக்கு அனுப்பிவைத்துள்ளார். அதை, அவனின் உயிர் நண்பன் திருடியிருக்கிறான். பிறகு, தன் கடனை அடைப்பதற்காக வங்கி அதிகாரியான நண்பனின் காதலிக்கு அந்தப் படங்களை அனுப்பிவைத்து பணப் பேரம் நடத்தியுள்ளான். அதிர்ந்துபோன காதலி, போலீஸில் சொல்ல... அகப்பட்டான் அந்தக் கயவன். இப்படிச் சில பெண்கள் அவசரத்தில் எல்லாவற்றையும் செல்ஃபி எடுத்து அனுப்பிவிட்டு அப்புறம் அவஸ்தைபடுகிறார்கள்.


செல்ஃபியும் நடிகைகளும்!
தன்னைத்தானே செல்போனில் படம் எடுத்து அழகு பார்க்கும் செல்ஃபி கலாசாரம், அவரவர் திருப்தியோடு நின்றுகொண்டால் பிரச்னையில்லை. அடிமைத்தனமாக உருவாகி, அடுத்தடுத்த விபரீதங்களை உருவாக்குவதில்தான் பிரச்னையே உருவாகிறது. தமிழ்ப் படங்களில் நடித்த சில முன்னணி நடிகைகளின் அந்தரங்க செல்ஃபி போட்டோக்கள் வாட்ஸ்-அப்பில் வலம்வந்து கோலிவுட்டில் பரபரப்பை உண்டாக்கின. கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ்ப் படவுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர், உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்தபடி தன் இடை குறைந்த செல்ஃபி போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.


செல்ஃபி ஆபத்துகள்!
செல்ஃபி, உடலுக்கும் தீங்கு விளைவிக்கிறது எனப் பேசப்படுகிறது. ஸ்மார்ட் போன்கள் மூலம் அடிக்கடி செல்ஃபி எடுப்பதால் முகத்தில் சுருக்கம் ஏற்படும், தோல் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எந்தக் கையால் போனை பிடித்துக்கொண்டு நாம் செல்ஃபி எடுக்கிறோம் என்பதைக்கூட நம் முகத்தைவைத்தே கூறமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள். நிறைய செல்ஃபி எடுப்பவர்களின் முகத் திசுக்கள் ஒரு பக்கம் மாசடைந்திருக்கும். தோலில் உள்ள தாதுக்களைக் காந்த அலைகள் மாற்றிவிடுகின்றன. மொபைலில் இருந்து வெளிப்படும் எல்.இ.டி ஒளி, ஆக்சிஜன் எதிர்வினை புரிவதால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றத்தை ஏற்படுத்துவதோடு, சருமப் புற்றுநோய் வருவதற்கான அபாயங்களும் உண்டாகின்றன. போனில் இருந்து வெளிப்படும் ஒளியானது சருமத்தில் உள்ள நுண்துளைகள் வழியாக அடிப்பகுதிக்குள் ஊடுருவுவதால் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தி மெலனின் பிக்மென்ட் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் முகத்தில் உள்ள செல்கள் பழுதடைந்து கரும்புள்ளிகளையும் கருந்திட்டுகளையும் ஏற்படுத்துவதோடு, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கிறது.


செல்ஃபியின் உடைந்தபோது சிலை!
செல்ஃபி எடுக்கும்போது பலியானவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கே ஓர் இளைஞர் 126 ஆண்டு பழமை வாய்ந்த சிலையை உடைத்துள்ளார். போர்ச்சுக்கல் நாட்டு ரோசியோ ரயில் நிலையத்தில் 126 ஆண்டு பழமை வாய்ந்த சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது, 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை. அதற்குப் பக்கத்தில் நின்று செல்ஃபி எடுப்பதற்காக சிலை மீது ஏறியபோது அந்தச் சிலை கீழே விழுந்து உடைந்தது. பயத்தில் தப்பி ஓட நினைத்த அந்த இளைஞரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

செல்ஃபியைத் தடுக்க மாத்திரைகள்!
செல்ஃபி மோகத்தைத் தடுக்க ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. ‘மின்ட்ஸ்’ - புதினா வாசனையுடன் கூடிய இனிப்புச் சுவையுடன் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தினமும் 2 அல்லது 3 மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், செல்ஃபி எடுக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் என அந்த மாத்திரை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்களுக்கு தினமும் ஒரு மாத்திரையும், பெண்களுக்கு 5 மாத்திரைகளும் என அந்த கம்பெனிகள் விளம்பரம் செய்துள்ளன.

செல்ஃபியின் மூலம் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கலாம்!
இப்போதெல்லாம் ஒரு நபரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அவரைப் பற்றிய தகவல்களைச் சமூக வலைதளங்களிலோ, இணையதளங்களிலோ தேடிப் பார்ப்பது சர்வதேச விதியாகிவிட்டது. அப்படித் தேடும்போது அகப்படும் புகைப்படங்கள் உங்களுடைய விதியை நிர்ணயிக்கக் கூடும். குறிப்பாக வேலை தேடும் தருணங்களில் உங்களுடைய குணாதிசயத்தை உங்கள் புகைப்படங்கள் பேசும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். செல்ஃபியை வைத்து உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். ஸ்மார்ட்போன்கள், ஜி.பி.எஸ் பின்னணியில் இயங்கிக்கொண்டே இருக்கும். அது உங்களுடைய இருப்பிடத்தை உங்கள் செல்ஃபியில் ரகசியக் குறியீடுகளாகப் பதிவுசெய்து வைத்துக்கொள்ளும். கூடவே நாள், நேரம் போன்றவற்றையும் பதிவு செய்துகொள்ளும். இது ‘ஜியோ டேக்’ எனப்படும். அந்த செல்ஃபியை, ஒருவர் டவுண்லோடு செய்து அதற்கென்றே இருக்கும் சில மென்பொருட்களில் இயக்கும்போது அதன் எடுக்கப்பட்ட விலாசம் கிடைத்துவிடும். சில இணையதளங்கள்கூட இந்த டீகோடிங் வேலையைச் செய்கின்றன.

செல்ஃபி எடுக்கும்போது பின்பற்றப்பட வேண்டியவை:
* சமூக வலைதளங்களில் செல்ஃபிக்களை வெளியிடும்போது அது, தம்முடைய தன்னம்பிக்கையை வலுவிழக்கச் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* செல்பி எடுக்கும்போது ஜி.பி.எஸ்/லொக்கேஷன் ஆப்ஷன்களை ஆஃப் பண்ணி வைக்கவேண்டும்.
* செல்ஃபிக்காக அதிக நேரத்தைச் செலவிடக் கூடாது.
* சிரத்தைமிகுந்த இடங்களில் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* பாதுகாப்போடு செல்ஃபி எடுப்பது அவசியம்.

செல்ஃபி குறித்த நோக்கம்!
செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்து அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில், நார்சிஸம் (தன் உடல் மீது ஆர்வம்) நோக்கம் கொண்டவர்கள் செல்ஃபி மீது அதிக ஆர்வமாக இருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தங்களது இயல்பைத் தாண்டிய மேம்படுத்திய தோற்றத்தை இதன்மூலம் வெளிப்படுத்த விரும்புகின்றனர். மனிதவள மேம்பாட்டாளர்களைப் பொறுத்தவரை செல்ஃபி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும்போது சமூக வலைதளங்களில் இருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்துகொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

செல்ஃபி உளவியல் பாதிப்பு!
‘அதிகமாக செல்ஃபி எடுக்கும் மனநிலை உளவியல் பாதிப்பு’ என்கிறது மருத்துவ ஆய்வு. இதை அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ உறுதிப்படுத்துகிறது. இதற்கு அவர்கள், ‘செல்ஃபிட்டீஸ்’ (Selfitis) என்று பெயரிட்டுள்ளனர். இதை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். சிலர், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று செல்ஃபிக்களையாவது எடுப்பார்கள். இவர்கள் அதை ரசிப்பதோடு சரி. சமூக வலைதளங்களில் வெளியிடமாட்டார்கள். இவர்கள் முதல் வகையைச் சேர்ந்த பார்டர்லைன் செல்ஃபிட்டிஸ் (Borderline selfitis). அடுத்து, இரண்டாவது வகையைச் சேர்ந்த அக்யூட் செல்ஃபிட்டிஸ் (Acute selfitis). இவர்கள், ஒருநாளைக்கு குறைந்தபட்சம் மூன்று செல்ஃபிக்களை எடுத்து, மூன்றையுமே சமூக வலைதளங்களில் பதிவுசெய்து... அதன் லைக் மற்றும் கமென்ட்டைக் கவனிப்பவர்கள். மூன்றாவது வகை க்ரோனிக் செல்ஃபிட்டிஸ் (Cronic selfitis). இவர்கள் நாள் முழுவதும் செல்ஃபி எடுத்து... அதை அப்படியே சமூக வலைதளங்கள், குழுக்களில் பதிவு செய்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. இதை ஓ.சி.டி (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தற்போதைக்கு இதற்கு மருத்துவம் இல்லை என்றும், Cognitive Behavioural Therapy (CBT)  எனும் ‘அறிவாற்றல் ஒருங்கிணைப்பு சிகிச்சை’ மூலமாகத்தான் தற்காலிகத் தீர்வு காணமுடியும் என்றும் எச்சரிக்கிறது அமெரிக்கன் சைக்யாட்ரிஸ்ட் அசோசியேஷன்.


- ஜெ.பிரகாஷ்


No comments:

Post a Comment