Thursday, September 8, 2016

‘‘ப்ளீஸ்... எங்களை விட்ருங்களேன்!’' - தொடரும் கொலைகள்... ஒரு பெண்ணின் குரல்!

(இந்தக் கட்டுரை 02-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

‘‘ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த எங்களை வெளியில் அழைத்துவந்து சிறகுகொடுத்து பறக்கச் செய்த ஆண் சிங்கங்களே... முதலில் உங்களுக்குத் தலைவணங்குகிறோம்.
காலம் மாறிவிட்டது... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல உங்கள் அளவுக்கு கடவுள் எங்களை வலிமையாய்ப் படைக்கவில்லை. ஆனாலும், உங்களுடன் போட்டி போடும் அளவுக்கு நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்பதே சாதனைதான். இதற்குக் காரணம், எங்களுடைய அறிவு, திறமை, விடாமுயற்சி மட்டுமல்ல... அதையும் தாண்டி, ஒரு தந்தையாய், சகோதரனாய், உறவினராய், நண்பனாய், கணவனாய், காதலனாய் என எங்களுக்குப் பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது நீங்கள்தானே. இப்படி எல்லா வழிகளிலும் எங்களை மெருகேற்றிப் பார்க்கும் நீங்கள், எங்கள் உள்ளத்தை மட்டும் பார்க்காமல்போவது ஏன்? காதல் என்ற மூன்றெழுத்து மந்திரச் சொல் உங்களுக்குள் ஊடுருவி வெற்றிபெற்றால், உலகையே உங்கள் காலடிக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். அது சற்றுத் தோல்வியைத் தழுவினால், மதம்பிடித்த யானையாய் மாறிச் செய்வதறியாமல் செய்து சின்னாபின்னமாகி விடுகிறீர்கள்.
உங்களைப்போன்றே எங்களுக்கும் உள்ளம் இருக்கிறது. அதில், எத்தனை கனவுகளை நாங்கள் சுமந்துகொண்டிருக்கிறோம் என்று என்றாவது நீங்கள் எண்ணியிருப்பீர்களா? பெற்றவளுக்குத்தான் தெரியும் வலியின் விலை என்னவென்று? அதுபோல், எங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எங்களுக்குத்தான் தெரியும். பெற்றெடுத்துப் பெயர்வைத்த அன்னையிடம் அன்பைப் பெற்றிருக்கிறோம்; தோளில் போட்டுத் தூக்கிச்சென்ற தந்தையிடம் துணிவை வாங்கியிருக்கிறோம்; சண்டைபோடும் சகோதரனிடம் பாசத்தை அடகுவைத்திருக்கிறோம்; உறவுவளையத்துக்குள் ஒரு மலராய் மணம் வீசிக்கொண்டிருக்கிறோம்; ஊருக்குள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்துச் சென்றுகொண்டிருக்கிறோம். பல மலர்கள் ஒன்றாய்ச் சேருகிறபோதுதான் மாலையே உருவாகிறது. அந்த மாலைக்குள், நாங்களும் ஒரு மலராய் இருப்பது பெருமைகொள்ள வேண்டிய விஷயம் அல்லவா?
இந்த மலர்கள், எல்லாம் எங்களை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்... நாங்கள் என்னவாக வேண்டும் என்று என்ன கனவு கண்டிருப்பார்கள்? தலைசீவி, பொட்டுவைத்து... கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்த அந்த மலர்களின் ஆசையை நாங்கள் நிறைவேற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? படிக்கவைத்து ஆளாக்கிய பெற்றோருக்கு வேலைக்குச் சென்று உதவ வேண்டும் என்று நாங்கள் எண்ணக் கூடாதா... அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்ளக் கூடாதா... அவர்களின் ஆசைகளை நிறைவேற்றக் கூடாதா... நாங்கள் எப்படி வாழவேண்டும் என்று கனவு காண்பவர்களின் கோட்டையைத் தகர்க்க வேண்டுமா? எந்தப் பெற்றோரும் குழந்தைகள் கெட்டுப்போவதை விரும்பமாட்டார்களே? இந்த உலகத்தில் அவர்களுக்காக ஒருமுறை வாழ வழிவிடுங்களேன்.
இப்படி எண்ணற்ற கனவுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களைப் புரிந்துகொள்ளாமல், ‘ஒருதலை காதல்’ என்ற பெயரில் உங்களையும் அழித்துக்கொள்வதோடு எங்களையும் அழித்துவிடுகிறீர்கள். ஆசிட் வீசுவதும், அடித்துக் கொல்வதும், கத்தியால் குத்துவதுமா வாழ்க்கை? அறிவற்ற மனிதர்கள்தான் ஆணவக் கொலைக்காக அரிவாள், கத்தி தூக்குகின்றனர். ஆனால், அதைவிடக் கொடுமை ஒருதலை காதலுக்காக உருட்டுக்கட்டைகூட ஆயுதமாகிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது. கறந்தபால் காம்பில் ஏறாது... உடைந்த சங்கு ஊத வராது. என்பதைப்போல் போன உயிர் திரும்ப வராது. இதுதான் வாழ்க்கையின் அத்தியாயம். ‘பார்க்கிறோம்.... பழகுகிறோம்’ என்பதையெல்லாம் நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டால் காதலுக்கும், நட்புக்கும் என்ன வித்தியாசம்?
எங்கள் பின்னால் தொடர்ந்து வருவதும், தூரத்தில் நின்று பார்ப்பதும், தொல்லை கொடுப்பதுமா நாகரிகம்? ஒருத்தி, ‘உங்களைப் பிடிக்கவில்லை’, ‘உங்கள் காதலை ஏற்கவில்லை’ என்பதற்காக அவளைக் கொலை செய்வதுதான் உங்களின் எண்ணமா? அவளைத் தவிர, உலகத்தில் வேறு எந்தப் பெண்களும் இல்லையா? ‘எங்களுக்கும் இப்படிப்பட்ட கணவன் வரவேண்டும்’ என்கிற ஆசை இருக்கிறது. ஒருவேளை, உங்கள் காதலையே நாங்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ‘இவன் நமக்குச் சரிப்பட்டு வருவானா...’ ‘நம் வாழ்க்கை நன்றாக அமையுமா’ என்கிற கேள்விகளுக்கு விடை தேடுவதற்குள்... நீங்களே, எங்களுக்கு ‘விடை’ கொடுத்துவிடுகிறீர்கள்.
நாங்கள் (பள்ளிக்குழந்தைகள்) படித்து உயர்வதாகப் படம் எடுக்கிறார்களோ, இல்லையோ... காதலிப்பதாக எடுத்து காசு பார்த்துவிடுகிறார்கள் திரை நட்சத்திரங்கள். சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு. அதை ரசிக்க வேண்டுமே தவிர, அதன் மோகத்திலேயே வாழக் கூடாது. எதுவும் அறியாத சிறுவயதில், சிந்தனைக் கூடாரத்தை நோக்கிச் செல்லும் எங்களிடம், நீங்கள் காதலைக் கற்றுக்கொடுக்க நினைப்பதால்..
நாங்கள் படிப்பு என்னும் பாவாடை சட்டையை இழப்பதோடு, வாழ்க்கை என்னும் பார்வையையும் இழந்துவிடுகிறோம். ஒலிம்பிக்கில் கலந்துகொண்டவர்களைக்கூட ஒரே வாரத்தில் உலகம் மறந்துவிடும். ஆனால், ஒருதலை காதலால் உயிரைவிட்ட காரைக்கால் வினோதினி, சென்னை ஸ்வாதி, சேலம் வினுப்ரியா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா... ஆகியோரை வரலாறு என்றும் மறக்காது.
காதல் என்பது எல்லோருக்கும் உண்டு. அது எல்லா வயதிலும் வருவதில்லை. காதல் வரும் காலத்தில் உங்கள் மீதும் எங்களுக்குக் காதல் இருந்தால் நிச்சயம் காதலிப்போம். அதுவரை இதுபோன்ற விபரீதங்களை ஏற்படுத்தாமல் இருங்கள். ப்ளீஸ்... எங்களை விட்ருங்களேன்.’’
இப்படிக்கு,
உங்களால் வளர்க்கப்படும் மலர்கள்.
- அபிரா

No comments:

Post a Comment