Friday, September 2, 2016

கடந்த ஐந்து வருடங்களில் என்னவெல்லாம் செய்தார் ரோசய்யா?

(இந்தக் கட்டுரை 01-09-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள்... அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். ஆனால், ஐந்து ஆண்டுகளும் தன் பதவியைவிடாமல் முதல்வர் ஜெயலலிதா மூலம் தக்கவைத்துக்கொண்டவர் யார் என்றால்... அது, ஆளுநர் ரோசய்யாவாகத்தான் இருக்கும். அவரின் சுயசரிதையோடு, அவர் தமிழகத்தில் சாதித்த சாதனைகள் இதோ...

பிறப்பும்... அரசியலும்!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள விம்மூர் கிராமத்தில் 1933-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கே.ரோசய்யா, குண்டூரிலுள்ள இந்துக் கல்லூரியில் பி.காம் முடித்தார். 1952-ல் அதே கல்லூரியில் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-ல் முதல் முறையாக ஆந்திர மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 1974 மற்றும் 1980-ம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத் தொழில் துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராக 1977 முதல் 1979 வரை பணியாற்றினார். ஆந்திர சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவராக 1978 முதல் 1979 வரையிலும், பின்பு 1983 முதல் 1985 வரையிலும் இருந்தார். 1979 - 1980-ல் சென்னா ரெட்டி ஆட்சியில் சாலை மற்றும் கட்டடத் துறை அமைச்சராகவும், 1980 - 1981-ல் வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், 1982 - 1983-ல் உள்துறை அமைச்சராகவும், 1989 - 1990-ல் நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, சட்டமன்ற செயலகத்துறை அமைச்சராகவும், 1991 - 1992-ல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராகவும், 1992 - 1994-ல் நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

1995 முதல் 1997 வரை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். 1998-ல் நரசரொபேட் மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் நிதி, திட்டம், சட்டமன்றச் செயலகம், மருத்துவம், குடும்பநலத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2009 - 2010 வரை ஆந்திர மாநில முதல்வராகப் பணியாற்றினார். 2011-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஆளுநராக பதவி வகித்துவந்தார். கடந்த 31-ம் தேதியுடன் அவருடைய பதவிக்காலம் முடிந்தது. ஆந்திர மாநில பல்கலைக்கழகம், இவருக்கு 2007-ல் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
‘‘ஆளும் கட்சியினருக்கு ஆதரவு!’’
தமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா பதவியேற்றபோது, ‘‘நேற்றுவரை தீவிர அரசியல்வாதியாக இருந்தேன். இன்று, அரசியல்வாதியாக இல்லாமல் தமிழக கவர்னராகிவிட்டேன். தமிழகத்துக்கு ஓர் ஆலோசகராகவும், நல விரும்பியாகவும் இருப்பேன். அரசியலைமைப்புச் சட்டப்படி தமிழக அரசு செயல்படுவதை உறுதி செய்வதே எனது பணியாகும். தமிழக கவர்னர் என்கிற முறையில் எனது கடமையைச் சட்டப்படி சரிவரச் செய்வேன்.
தேவைப்படும்போது பத்திரிகையாளர்களை அழைத்துக் கலந்துரையாடுவேன்’’ என்று நிருபர்களிடம் பேட்டி அளித்தார். ஆனால், ‘‘அவர் சொன்னபடி நடந்துகொண்டாரோ, இல்லையோ... ஆனால், பதவியேற்ற நாள் முதல் இதுநாள்வரை ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக நடந்துகொண்டார் என்பதே 100 சதவிகிதம் உண்மை’’ என்கிறார்கள் தமிழக மக்கள்.

தேர்தல் கமிஷன் குட்டு!
வாக்காளர்களுக்குப் பணமும், பரிசுப் பொருட்களும் கொடுத்ததாக எழுந்த புகாரில், நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பு... அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது, திடீர் திருப்பமாக கவர்னர் ரோசய்யா, ‘‘இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அந்தத் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்துவிடுவார்கள். எனவே, அனைவரின் நலன்கருதி இரு தொகுதிகளிலும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகவும், முடிந்தால் ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்பாகவும் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரைத்தார். அதாவது, இந்தத் தேர்தல் விஷயத்தில் அ.தி.மு.க-வைவிட அதீத ஆர்வம் காட்டினார் ரோசய்யா. தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளின் தேர்தலையே ரத்துசெய்த தேர்தல் கமிஷன், ‘‘இப்படி கவர்னர் நடந்துகொண்டதைத் தவிர்த்து இருக்கலாம்’’ என ரோசய்யாவுக்கு குட்டும்வைத்தது.

ஜெ-வுடன் நெருக்கம்!
முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கப் போகிறவர்கள், அவரிடம் நெருங்கி நிற்கக் கூடாது; கை குலுக்கக் கூடாது; சால்வை அணிவிக்கக் கூடாது; (கையில்தான் தர வேண்டும்) பொக்கேயைத் தள்ளி நின்றுதான் நீட்டவேண்டும் என
இன்ஸ்ட்ரக்ஷன்கள் தரப்படும். ஆனால், இதையும் மீறி ஜெயலலிதாவின் நெற்றியிலேயே ஒருவர் பொட்டு வைத்திருக்கிறார் என்றால், அது ஆச்சர்யமான விஷயம்தானே. அந்த அதிர்ஷ்டஷாலி வேறு யாருமில்லை. ரோசய்யாவின் மருமகள்தான். மகன் ஸ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி. ரோசய்யாவின் பேரனும், ஸ்ரீமன் நாராயணமூர்த்தியின் மகனுமான அனிருத்தின் திருமண அழைப்பிதழைத் தருவதற்காக ஸ்ரீமன் நாராயணமூர்த்தியும், அவருடைய மனைவியும் ஜெயலலிதாவை கோட்டையில் சந்தித்தனர். அப்போதுதான் ஜெயலலிதாவின் நெற்றியில் குங்குமம்வைத்தார், ஸ்ரீமன் நாராயணமூர்த்தியின் மனைவி. ஜெயலலிதாவும் ஏற்றுக்கொண்டார். ‘‘அ.தி.மு.க அரசுடன், கவர்னர் ரோசய்யா வெகு இணக்கமாகச் செயல்பட்டதுதான் அந்த அளவுக்குக் காரணம்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கவர்னர்கள் பதவிபறிப்பு!
2014-ல் மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்த பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல்வேறு மாநில கவர்னர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் தன்னை மாற்றாத அளவுக்கு பார்த்துக்கொண்டார். ஆந்திர காங்கிரஸ் அமைச்சரவைகளில் பலமுறை மந்திரியாகவும் கடைசியாக முதல்வராகவும் பதவிவகித்தவர் ரோசய்யா. இதனால், 2011-ல் ரோசய்யாவை தமிழக கவர்னராக நியமித்தது, அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ். இந்த நிலையில், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தபோதும் காங்கிரஸ்காரரான ரோசய்யா மட்டும் விட்டுவைக்கப்பட்டதற்குக் காரணம், ஜெயலலிதாவிடம் அவர் காட்டிய மரியாதைதான்.

எதிர்க் கட்சியும் ரோசய்யாவும்!
தமிழக அமைச்சர்கள் மீது எதிர்க் கட்சிகள் ஆளுநர் ரோசய்யாவிடம் ஊழல் புகார் பட்டியலைத் தந்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு எந்தவித பதில் நடவடிக்கையும் எடுக்கப்பட இல்லை. அதுபோல், துணைவேந்தர் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொல்ல, அவர் மீது அவதூறு வழக்குப் போட்டார் கவர்னர் ரோசய்யா. இத்தனைக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், ரோசய்யாவும் காங்கிரஸ்காரர்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க பாசக்காரர் ரோசய்யா. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆளும் கட்சியின் நலனைக் காக்கும் வகையில் செயல்படுவதற்கு இவரின் ராஜபோக வாழ்க்கையும் ஒரு காரணம்.

ஆளுநரின் 4 ஆண்டு செலவு!
மக்களின் வரிப் பணத்தில் ஆளுநர்கள், ஆடம்பர வாழ்க்கையை ராஜபோகமாய் வாழ்கிறார்கள் என்ற விமர்சனம் நீண்டகாலமாக இருந்துவருகிறது. மத்திய அரசின் ரப்பர் ஸ்டாம்பாக, ஏஜென்டாகச் செயல்படும் கவர்னர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் சார்பில் பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இப்படிச் செய்யப்படும் செலவுகள் கோடிகளைத் தாண்டுகின்றன. 2011 ஆகஸ்ட் மாதம் ஆளுநராக பொறுப்பேற்றுகொண்ட ரோசய்யா, கடந்த நான்கு ஆண்டுகளில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெற்றிருந்தார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன்.

சென்னை கிண்டியில் அரண்மனைபோல் சகல வசதிகளுடன் இருக்கும் ராஜ்பவனில்தான் ஆளுநர் அலுவலகம், வீடு, ஊழியர்களுக்கான அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் இருக்கின்றன. இவற்றைப் பராமரிக்க, சீரமைக்க கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.27 கோடியும், 2011 ஆகஸ்ட் முதல் 2015 மே வரை மின்கட்டணமாக ரூ.36.24 லட்சமும் செலவாகியிருக்கிறது. மாதம் ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சராசரியாக மாதம் ஒரு லட்சம் ரூபாயை மின்கட்டணமாகச் செலுத்தி இருக்கிறார்கள். கடுமையான மின்வெட்டு இருந்த காலத்தில்கூட ராஜ்பவனில் மின்சாரப் பயன்பாடு உச்சத்தில் இருந்திருக்கிறது. மெர்சடைஸ் பென்ஸ், ஸ்கோடா சொகுசு கார்கள் உட்பட 4 கார்கள், ஒரு மோட்டார் பைக் கடந்த நான்கு ஆண்டுகளில் புதிதாக வாங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய். நான்கு ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசிக் கட்டணம் சுமார் 36 லட்ச ரூபாய். மாதம்தோறும் 80 ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பேசியிருக்கிறார்கள். இது தவிர வாகனங்கள் பராமரிப்புச் செலவுகள், ஊழியர்களுக்கான செலவுகள் என லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இப்படி, ஆளுநர்கள் ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருப்பதற்காகவே கவர்னர்களின் செலவுகளுக்கு கரன்சிகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து வழக்கறிஞர் லோகநாதன், “கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ஆளுநரின் பயணத்துக்கு ரூ.1.22 கோடி செலவாகியிருக்கிறது. இதில் உள்நாட்டுப் பயணச் செலவு ரூ.1.20 கோடி. 470 முறை விமானங்களில் பறந்திருக்கிறார் ரோசய்யா. 1,400-க்கும் மேற்பட்ட விழாக்களில் பங்கேற்றுள்ளார். அதில் அரசு விழாக்கள் 15 சதவிகிதம் மட்டுமே. ஆனால், 85 சதவிகிதம் அளவுக்குத் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இப்படித் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தியிருக்கிறார் ரோசய்யா. தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஆளுநருக்குக் கிடைத்த பரிசுப் பொருட்கள் எத்தனை, அவை எல்லாம் யார் கணக்கில் சேரும் என்பதையெல்லாம் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டேன். பதில் கிடைக்கவில்லை’’ என்றார்.
குழந்தைகளுக்குப் போதனை!
‘‘ஆசிரியர்கள் நல்ல சிந்தனை, பரந்த மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் குணம் உள்ளிட்ட சிறந்த நற்பண்புகளை சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். இந்தப் பண்புகளைக் கல்வி நிலையங்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளுக்குப் போதித்து வளர்த்தாலே இந்தியா வல்லரசு நாடாக மாறும்’’ என்று ஒரு கல்வி விழாவில் பேசியிருந்தார். ஆனால், அவர் பதவியில் இருந்தபோதுதான் தமிழகத்தில், சில கொடுமைகளும் நடந்தேறின. சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், பள்ளி வாகனத்தில் இருந்த துளை வழியே கீழேவிழுந்து இறந்துபோனாள். அதுமட்டுமல்லாது, எத்தனையோ குழந்தைகள் பாலியல் வன்முறைக்குச் சிக்கிச் சீரழிந்தனர். குழந்தைகள் மது குடித்த கொடுமையும் அவர் பதவியில் இருந்தபோதுதான் அரங்கேறியது.

வைரவிழாவில் கருணாநிதி பெயரைத் தவறவிட்டார்!
தமிழக சட்டப்பேரவை வைரவிழாவின்போது தி.மு.க தலைவர் கருணாநிதியின் பெயரை ரோசய்யா சொல்லவில்லை. இதுதொடர்பாக அப்போது கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘வைரவிழாவில் ஆளுநர் ரோசய்யா தமிழக முதல்வராக இருந்தவர்களின் பெயர்களை எல்லாம் வரிசைப்படுத்திச் சொன்னார். ஆனால், என் பெயரை மட்டும் விட்டுவிட்டார். அவர் நல்ல மனிதர். யாருக்கும், எதற்கும் பயப்படாதவர். வேண்டும் என்று விட்டிருக்கமாட்டார்’’ என்று அதில் கூறியிருந்தார்.

திரைப்படத் துறை பிரச்னை!
‘விஸ்வரூபம்’ பட விவகாரம், நாடு தழுவிய அளவில் கவனத்தை ஈர்த்தபோது, தமிழக சட்டப்பேரவையில் இதுதொடர்பாக ஆளுநர் ரோசய்யா தன் உரையில், ‘‘சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகளைத் திறம்படக் கையாளக் காவல் துறைக்குத் தமது வழிகாட்டுதலை வழங்கி உறுதியான ஆதரவையும், முழுமையான சுதந்திரத்தையும் அளித்துள்ள முதலமைச்சரை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். முதலமைச்சரின் உறுதியான, தீர்க்கமான முடிவின் காரணமாக உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய ‘டேம் 999’, போன்ற திரைப்படங்கள் உரிய தருணத்தில் தடைசெய்யப்பட்டதால், பெரும் பாதிப்புக்கு இட்டுச் சென்றிருக்கக்கூடிய சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் எதுவும் மாநிலத்தில் எழாமல் தடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற திரைப்படங்களைத் தயாரிக்கும்போது, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களுடைய உணர்வுகள் புண்படாதவகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். ஆனால், இவருடைய பதவிக்காலத்தில்தான், ‘தலைவா’, ‘கத்தி’ போன்ற திரைப்படங்களும் பிரச்னைக்குள்ளாகின. ‘மனம் புண்படாத வகையில் திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்’ என்றவர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து, இவரோ அல்லது தமிழக அரசோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment