Saturday, September 17, 2016

‘சாண்டில்யன்’ என்னும் சகாப்தம்!

(இந்தக் கட்டுரை, 11-09-16 அன்று 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)
‘‘மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ - இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான்’ சாண்டில்யன் தன்னுடைய, ‘போராட்டங்கள்’ நூலில் எழுதிய வரிகள்.
‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’’ என்கிற தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தவர் சாண்டில்யன்.
சினிமா, நாடகம், சங்கீதம் மீது காதல்!
அந்த மாபெரும் எழுத்தாளர், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரைச் சேர்ந்த சடகோபன் அய்யங்கார் - பூங்கோதைவல்லி தம்பதியருக்கு 1910, நவம்பர் 6-ம் தேதி மகனாய்ப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே தந்தையின் இலக்கிய ருசியால் வளர்க்கப்பட்டார். காலை எட்டு மணி வரை உறங்கப் பிரியப்பட்ட சாண்டில்யனை, விடியற்காலை ஐந்து மணிக்கே எழுப்பி முகுந்தமாலை சொல்ல வைத்துவிடுவாராம் அவரது தந்தை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம்பெற்ற அவர், அப்போதே தேச விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டார். மூதறிஞர் ராஜாஜியின் தாக்கத்தால் அதில் ஒரு துரும்பாக அவரும் அடித்துச் செல்லப்பெற்றார். சினிமா, நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் மீது கல்லூரிக் காலத்திலிருந்தே காதல் கொண்டிருந்தார்.  
‘‘சும்மா கதை எழுது தம்பி!’’
1932-ல் சென்னை தி.நகரில் குடியேறியது சாண்டில்யனின் குடும்பம். அங்கேதான் கல்கியும், சாமிநாத சர்மாவும் வசித்துவந்தனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாமிநாத சர்மா நடத்திய பஜனையில் கல்கியும், சாண்டில்யனும் கலந்துகொண்டனர். இதனால் அவர்களின் நட்புப் பாலம் விரிந்தது. இருவரும் சாண்டில்யனை கதை எழுதச் சொன்னார்கள். ஆனால் மறுத்துவிட்டார். ‘திராவிடன்’ பத்திரிகை ஆசிரியர் சுப்பிரமணியம், ‘‘சும்மா கதை எழுது தம்பி’’ என்று கட்டாயப்படுத்த, அதன் காரணமாகவே, அவருடைய ‘சாந்த சீலன்’ என்னும் முதல் சிறுகதை உதயமானது. அது, காங்கிரஸை ஆதரித்த கதை... அவருடைய தந்தைக்கும், அவருக்குமான கதை. ‘‘காங்கிரஸ் கதையை நமது பேப்பரில் எப்படிப் போடலாம்’’ என்று ‘திராவிடன்’ நிர்வாகிகள் கொந்தளித்தனர். இதனால் சுப்பிரமணியம் சிக்கலுக்குள்ளானார். ‘‘கதைதான் நன்றாக எழுதுகிறாயே... இன்னும் எழுதேன்’’ என்று கல்கியும், சாமிநாத சர்மாவும் சொல்ல... ‘கண்ணம்மாவின் காதல்’, அதிர்ஷ்டம்’ ஆகிய கதைகள் ‘ஆனந்த விகடனி’ல் பிரசுரமாயின. அதன்பிறகு ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் நிவாஸன், அவரைப் பத்திரிகையாளராக்கினார். உயர் நீதிமன்ற வழக்குச் சம்பந்தமான செய்திகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் மட்டுமே வந்துகொண்டிருந்தன. அதை மாற்றி, தமிழ்ப் பத்திரிகைகளில் இடம்பெற புத்துயிர் ஊட்டினார். அந்தக் காலத்தில் தள்ளாட்டத்தில் இருந்த தமிழ்மொழியைத் தலைநிமிரச் செய்தார்.
‘சினிமா பார்ப்பது கெடுதலா?’
‘பலாத்காரம்’ என்கிற தமிழகத்தின் முதல் அரசியல் நாவலை எழுதினார். அந்த நூலுக்கு, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி முன்னுரை எழுதியிருந்தார். இந்த நாவலுக்குப் பிறகு அவருடைய மதிப்புக் கூடியது. பிற்காலத்தில், ‘புரட்சிப்பெண்’ என்ற தலைப்பில் அந்த நாவல் வெளிவந்தது. பி.என்.ரெட்டியிடமும், சித்தூர் நாகையாவிடமும் சினிமாவில் திரைக்கதை எழுதும் கலையைக் கற்றுக்கொண்டு அதில் கால்பதித்தார். ‘அம்மா’, ‘தியாகய்யா’, ‘என் வீடு’ ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதினார். மீண்டும் ‘சுதேசமித்திரனி’ல் சேர்ந்து சரித்திரக் கதைகளை எழுத ஆரம்பித்தார். ‘அமுதசுரபி’ நிர்வாகத்தாரின் வற்புறுத்தலால், அந்த இதழுக்கு சரித்திரச் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். அதே இதழில், ‘ஜீவபூமி’ என்கிற கதையையும் தொடராக எழுதினார். ‘ஜீவபூமி’ தொடருக்குப் பிறகு, ‘மலைவாசல்’ என்ற தொடரை எழுதினார். இந்தப் புதினத்துக்குக் கிடைத்த வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத ஆரம்பித்தார். ‘கன்னிமாடம்’, ‘கடல்புறா’ (மூன்று பாகங்கள்), ‘யவனராணி’ மூங்கில்கோட்டை’, ‘ராஜ பேரிகை’, ‘அவனி சுந்தரி’, ‘பல்லவ பீடம்’ முதலிய பிரமாண்டமான நாவல்களை எழுதினார். இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் ‘கடல்புறா’. இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான். 1948-ல், ‘‘பத்திரிகைத் தொழிலைத் தொழிற்சங்க ரீதியில் அமைக்க வேண்டும்’’ என்று குரல்கொடுத்தார். ‘‘பத்திரிகை ஊழியர்களுக்குத் தொழிற்சங்க அமைப்பு வேண்டும்’’ என்ற கருத்தை முதன்முதலில் இந்தியாவில் பதித்தவரும் இவர்தான். ‘தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை’த் தொடங்கினார். அது, ‘தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்’ என்ற பெயரில் பிரபலமடைந்தது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொன்னார். சினிமா பற்றி ராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து, ‘சினிமா பார்ப்பது கெடுதலா?’ என்ற கட்டுரையை 1952-இல் எழுதினார். 1987 வரை தன் எழுத்துப் பயணத்தில் முத்திரை பதித்த அவர், அதே ஆண்டில் மறைந்தார்.
''எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு!''
ஒரு சமயம் கல்லூரிப் பெண்கள் சிலர் சாண்டில்யனைச் சந்திக்கச் சென்றிருக்கின்றனர். அப்போது ஒரு மாணவி, ‘‘சில வேளைகளில் உங்கள் நாவல்களில் அதிகமாகக்கூட (செக்ஸியாக) எழுதிவிடுகிறீர்களே’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘‘எந்த இடத்தில் அதிகம் என்று சொல்ல முடியுமா” என்று வினவியிருக்கிறார். அதற்கு அந்த மாணவி, ‘‘அதெப்படி முடியும்? பல இடங்களில் இருக்கின்றன’’ எனச் சொல்ல... ‘‘எந்த இடத்திலும் இலக்கிய வரம்பை மீறி, பண்பாட்டு வரம்பை மீறி, எதுவும் இருக்காது. எல்லாவற்றுக்கும் ஒரு பாரம்பர்யம் உண்டு. இலக்கியத்துக்கும் அப்படித்தான்’’ என்று பதிலளித்திருக்கிறார்.
‘‘சாண்டில்யனுடைய ‘கடல் புறா’ நாவலைப் படித்தபிறகுதான், தான் நீண்ட கடல் பயணம் செய்ய விரும்பினேன்’’ என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒருமுறை கூறியிருந்தார்.
''வாசகர்களை ஈர்க்கக்கூடியவை...''
சாண்டில்யன் வாசகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘நான் 10-ம் வகுப்பு படித்தபோது என் தந்தை எனக்குச் செலவு கொடுத்த பணத்தில் சாண்டில்யனின், ‘ராஜ பேரிகை’ நாவலை வாங்கிப் படித்தேன். அந்த அளவுக்கு அவருடைய நாவல்கள் மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். இன்றும் நிறையப் பேர் சரித்திர நாவல்களை எழுதலாம். ஆனால் அவர் இறந்தபிறகும் சரித்திர நாவல்களுக்கு ஓர் அங்கீகாரம் இருக்கிறது என்றால் அது அவருக்கு மட்டும்தான். எத்தனை முறை மறுபதிப்பு செய்யப்பட்டாலும் அவருடைய நாவல்களுக்கு என்று தனிப்பட்ட வாசகர்கள் உண்டு. அவற்றை வெளியிடும் பதிப்பகத்தாருக்கும் ஒருபோதும் விற்பனை குறைவதில்லை. அவருடைய நாவல்கள் வாசகர்களை ஈர்க்கக்கூடியவை... பிரமிப்பானவை. உதாரணத்துக்குச் சொல்லப்போனால், ‘விஜய ராணி’யில் ஓர் இளவரசி குதிரையில் இறங்கும் காட்சியை இரண்டு அத்தியாயங்களுக்கு எழுதியிருப்பார். அதேபோல் அவருடைய இன்னொரு நாவலில் போர்க்காட்சியைத் திரையில் பார்க்கும்படியான அளவுக்கு தன் கண்முன்னே காட்டியிருப்பார். ஆங்கில கிழக்கிழந்திய கம்பெனியில் சாதாரண எழுத்தராக இருந்த ராபர்ட் கிளைவை, மிகப்பெரிய கத்திச்சண்டை வீரராகச் சித்தரித்தவர் சாண்டில்யன். இன்றும் சென்னை கன்னிமரா நூலகத்துக்குச் சென்று அவருடைய சில நூல்களைப் படிக்கத் தேடினால், அது குறிப்புதவிப் பகுதியில் மட்டுமே உள்ளது. நூலகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு அதை வாடகைக்குக் கொடுப்பதில்லை. அந்த அளவுக்குப் பாதுகாக்கப்படுகிறது’’ என்றார்.
‘‘எழுத்துக்கும் சாவுக்கும் சம்பந்தம் உண்டா என்று கேட்காதீர்கள். நல்ல எழுத்து சாவதில்லையே தவிர, நல்ல மனிதன் செத்துப்போகிறான்’’ - ‘போராட்டங்கள்’ நூலில் அவர் எழுதிய வரிகள்.
அவருடைய எழுத்து, சாகவில்லை என்பதை நிரூபித்துவிட்டார்.
- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment