Friday, September 2, 2016

மூன்று மாநிலம்... மூன்று மரணம்... மடிந்து போனதா மனிதநேயம்...?


(இந்தக் கட்டுரை 31-08-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


வ்வொரு மாநிலங்களுக்கும் மருத்துவத் துறைக்கென்று மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. அது தவிர, அந்தந்த மாநிலங்களும் ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்குகின்றன. இருந்தாலும் எல்லா அரசு மருத்துவமனைகளும் நோயாளிகளிடமே பணத்தைப் பிடுங்கித் திங்கின்றன. பணம் தராதவர்களைக் கடைநிலை ஊழியர்கள் முதல் மருத்துவர்கள் வரை கவனிப்பது கிடையாது. இந்தத் துறையில், இந்தியாவில் என்னதான் நடக்கிறது என்பதைக் காணக் கடந்த ஒரு வாரத்துக்குள் நடந்த கீழ்க்கண்ட சம்பவங்களே இதற்கு உதாரணம்.
சம்பவம் - 1
ஒடிசா மாநிலம், காலாகண்டி மாவட்டம் மேலகாகரா கிராமத்தைச் சேர்ந்தவர் டானா மஜி. இவரது மனைவி காசநோய்க்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எனவே, மனைவியின் உடலை கிராமத்துக்கு எடுத்துச்செல்ல அரசின் இலவச ஆம்புலன்ஸ் வசதியை மஜி கேட்டார். ஆம்புலன்ஸ் இருந்தும் அதிகாரிகள் அதைத் தர மறுத்துவிட்டனர். தனியார் வாகனத்தில் எடுத்துச் செல்லவும் அவரிடம் பணம் இல்லை. பலரிடம் உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை.
ஆகையால், மனைவியின் பிணத்தை ஒரு போர்வையால் சுற்றி, அதைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு நடந்துசென்றார். தனது தாயின் பிணத்தை, தந்தை இப்படித் சுமந்து செல்வதைப் பார்த்து, அவரது 12 வயது மகளும் கண்ணீர் சிந்தியபடியே சென்றார். மருத்துவமனையில் இருந்து 60 கி.மீ தொலைவில் அவரது கிராமம் இருந்தது. இதை வழிநெடுக பலரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் உதவவில்லை. இதுபற்றிச் செய்தியாளர்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். 10 கி.மீ தூரம் மஜி நடந்தே சென்றபிறகு ஆம்புலன்ஸ் வந்தது. அதன்பிறகு மனைவியின் பிணத்தை அதில்வைத்து சொந்தக் கிராமத்துக்கு எடுத்துச் சென்றார்.
சம்பவம் - 2
மத்தியப் பிரதேச தாமோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்சிங் லோதி. இவர், பிறந்து 5 நாள் ஆன கைக்குழந்தை மற்றும் தாய் சனியா பாய் உடன், மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனைக்குச் செல்ல தனியார் பஸ்ஸில் பயணம் செய்தார். பஸ்ஸிலேயே மனைவி உயிரிழந்ததை அறிந்த கண்டக்டர், அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றார்.
அங்கிருந்து மருத்துவமனைக்குச் செல்ல 20 கி.மீ பயணம் செய்ய வேண்டும். ராம்சிங் எவ்வளவோ கெஞ்சியும் கண்டக்டர் அவர்களை பஸ்ஸிலிருந்து இறக்கிவிட்டதால், செய்வதறியாது காட்டுப் பகுதியில் தவித்தார். இந்த நிலையில் ஹசாரி மற்றும் ராஜேஷ் படேல் ஆகிய இரு வழக்கறிஞர்கள் இவர்களின் பரிதாப நிலையைப் பார்த்து உதவி செய்தனர்.
சம்பவம் - 3
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபாசல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார். இவரது மகன் அன்ஸ், கடந்த சில நாட்களாகக் கடும் காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து சுனில்குமார், அன்ஸை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிறுவன் அன்ஸுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கவே, கான்பூரின் லாலா லஜபதிராய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு, அரைமணி நேரம் சுனில்குமாரை அலட்சியப்படுத்திய மருத்துவமனை மருத்துவர்கள், 250 மீட்டர் தூரத்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளனர்.
ஸ்ட்ரெச்சர் வசதி செய்து தரும்படி சுனில்குமார் கேட்க, மருத்துவமனை வழங்க மறுத்திருக்கிறது. வேறு வழியில்லாமல் சுனில்குமார், தனது மகனைத் தோளில் போட்டு சுமந்து சென்றுள்ளார். குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்ஸை, மருத்துவர்கள் சோதித்துப் பார்த்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.  ஸ்ட்ரெச்சர்கூடத் தராத நிலையிலும், சுமார் 250 மீட்டர் தூரத்துக்குத் தனது மகனைத் தோளிலேயே தூக்கிச் சென்றும் காப்பாற்ற முடியாத நிலை கண்டு சுனில்குமார், மிகுந்த மனவேதனைக்கு ஆளானார்.
‘‘நிரந்தரத் தீர்வு ஏற்படுவதில்லை!’’
‘‘டோனா மஜிக்கு, உதவ யாரும் இல்லை. அதைவிடக் கொடுமை மருத்துவமனை நிர்வாகமே உதவவில்லை. இது அவருக்கு மட்டும் நடந்த சம்பவம் அல்ல. எல்லாருக்கும், எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இப்படித்தான் நடக்கின்றன. கடல்தாண்டி இருக்கும் பஹ்ரைன் பிரதமரும் இளவரசருமான கலீஃபா பின் சல்மான் அல் கலீபாவுக்கு இருக்கும் மனிதநேயம்கூட இங்கு எவருக்கும் இல்லாதது மிகுந்த வேதனையளிக்கிறது. பொதுவாக அரசு மருத்துவமனைகளில் அனைத்தும் இலவசம் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், உள்ளே சென்று அட்மிஷன் போட்டுவிட்டால், அனைத்துக்கும் பணம் கேட்கின்றனர். சாதாரண வாட்ச்மேனுக்குக்கூட 100 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களுக்கு அடுத்து, லஞ்சம் தலைவிரித்து ஆடுவது அரசு மருத்துவமனைகளில்தான். ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, தாய்-சேய் பாதுகாப்பு வாகனங்கள் என அனைத்தும் மருத்துவமனைகளில் இருந்தாலும் பணத்தைக் காண்பிக்கும்போது மட்டுமே அவை வரத் தயாராகின்றன. அதனால்தான் இந்த அவலங்கள் நடைபெறுகின்றன. இதற்கு ஒருபோதும் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதில்லை’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
‘இலவசம்’ என்பதுகூட ‘இருக்கும்’ வசம் உள்ள மக்களுக்குத்தானா?

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment