Wednesday, December 14, 2016

வர்தாவின் ஒருநாள்...

அலுவலக வேலையை முடித்துக்கொண்டு 9-12-16-ம் தேதி இரவு 10 மணிக்கு ஊருக்குச் சென்றேன். அங்கு, தண்ணீர் இல்லாமல் கருகி நிற்கும் நெற்பயிர்களைக் கண்டேன்; ஆடு, மாடுகளை விட்டு மேய்க்கும் அவலத்தையும் பார்த்தேன். வீட்டுக்குள் வந்து தொலைக்காட்சி முன்பு அமர்ந்துபோது, ‘12-ம் தேதி வர்தா புயல் சென்னையில் கரையைக் கடக்கும்’ என்று வானிலை மையத்தால் அறிவிக்கப்பட்ட செய்தியைக் காண முடிந்தது. ஞாயிற்றுக் கிழமை இரவு (11-12-16) சென்னை செல்வதற்காக காலையிலேயே தயார் ஆன என்னை வீட்டில் உள்ளவர்கள், ‘‘இரண்டு நாட்கள் தங்கிவிட்டுப் போங்கள்’’ என்று தடுத்தார்கள். அவர்களிடம் வாக்குவாதம் செய்ததில்... காலைப் பயணத்தில் முட்டுக்கட்டை விழுந்தது. இருந்தாலும், மதியம் குழந்தைகளுடன் விளையாட்டு, நல்ல விருந்து, சிறு உறக்கம் போக மீண்டும் மாலையிலேயே சென்னை செல்லத் தயாராகிவிட்டேன். வீட்டைவிட்டு இரவு 7.30 மணிக்குப் புறப்பட்ட நான், ஒரு தோசையோடு வயிற்றுப் பசியை முடித்துக்கொண்டு சரியாய் 9 மணிக்கு புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தேன். அப்போதே கண்மூடி தூங்கிய நான், குளிரால் உடல் நடுங்கியபோது மணியைப் பார்த்தேன். சரியாக ஐந்தைக் காட்டியது. அரை தூக்கத்தில் இருந்த நான், சென்னையைத் தொட்டுவிட்டோம் என்பதை புரிந்துகொண்டு பேருந்தின் கண்ணாடி வழியாக சாலையைப் பார்த்தபோது... கனமழையில் சென்னை நகரமே நனைந்துகொண்டிருந்தது. பிறகு, மீண்டும் உறக்கத்துக்கு தள்ளப்பட்டேன். கோயம்பேடு வந்ததை... நடத்துநர் தன் குரல் மூலம் அறிவித்தார். மழை பொழிவதைப் பார்த்து மனம் இரக்கப்பட்ட ஓட்டுநர், பேருந்தை... நிலையத்துக்குள் விட்டார். மழையில் நனைந்தபடியே வந்து சூடான ஆவின் பாலைப் பருகினேன். அருகில் வந்த ஒரு பெரியவர், ‘‘எனக்கும் ஒன்று வாங்கித் தர முடியுமா’’ என்றார். அவருக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டு அயனாவரம் நோக்கிச் செல்லும் தட எண்களின் பேருந்தின் இருப்பிடத்தை நோக்கி ஓடினேன். அரை மணி நேரம் காத்திருப்புக்குப் பின் மழைநீரில் நீந்தியபடி மாநகரப் பேருந்து ஒன்று வந்தது. அப்போது சரியாக மணி ஏழு. காற்றும் கனமழையும் சென்னை நகரில் ஆதிக்கம் செலுத்தியிருந்ததால் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. 7.40 மணிக்கு நான் இறங்கவேண்டிய பஸ் நிறுத்தத்தில் இறங்கி... மழையில் நனைந்தபடியே தங்கியிருந்த அறைக்குச் சென்றேன். காலைக் கடன்களை முடித்து... குளித்துவிட்டு அலுவலகத்துக்குத் தயாரானபோது... அருகில் இருந்த நண்பர் சூடாக இரண்டு தோசைகளைச் சுட்டுக்கொண்டுவந்து சாப்பிடக் கொடுத்தார். சாப்பிட்டு முடித்த அடுத்த வேளை... காற்றா, கனமழையா என்று இரண்டும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தன. அப்போது முடிவுசெய்தேன்.... இனிமேல் அலுவலகம் செய்வது ஆபத்து என்று... அறைக்குள்ளேயே முடங்கினேன். புயலை ரசித்துப் பார்க்க மொட்டை மாடிக்குச் சென்றேன்... ‘‘மரியாதையாய் உள்ளே போய்விடு’’ என்று மிரட்டுவதைப்போல் அதன் நிகழ்வுகள் இருந்தன. அதையும் மீறி நான் நின்றபோது என்னையே இழுத்துக்கொண்டு செல்ல அது திட்டமிட்டது. இனிமேல் அதனிடம் போட்டி போட முடியாது என்றபடியே கீழிறங்கிவந்தேன். அது ஆடிய பேயாட்டத்தில் பூட்டியிருந்த பக்கத்து அறை ஜன்னல்களும், கதவுகளும் டப்.. டப் என்று இரைச்சலை எழுப்பிக்கொண்டு இருந்தன. உடைந்து இருந்த ஜன்னல் வழியாக என் அறைக்குள் மழைநீர் வந்தது. அதை, சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காரணம், தண்ணீரை உள்ளே விடாமல் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், அந்த அறைக்குள்தான் துணிமணிகளும், புத்தகங்களும், சான்றிதழ்களும், இதரப் பொருட்களும் குழுமியிருந்தன. அவை நனைந்துவிட்டால் மழையா வருத்தப்படப் போகிறது. நான் தானே! ஆகையால் வெளியில் கிடந்த மரப் பலகையை வைத்து ஓரளவுக்கு தண்ணீர் வராதபடி அடைத்தேன். பின்பு, ஜன்னல் வழியே என் தெருச் சாலையை எட்டிப் பார்த்தேன். மழையில் நனையாமல் இருக்க குடை பிடித்துச் சென்ற ஒரு குமரியை, காற்றோ, அந்தக் குடையை உடைத்து கலாட்டா செய்தது. கனமழையோ குளிக்கவைத்து ரசித்துப் பார்த்தது. கண்மூடி திறப்பதற்குள் ஆயிரம் வாகனங்கள் பறக்கும் அந்தத் தெரு வெறிச்சோடி இருந்தது. மழைநீர் தார்ச்சாலையையும் மறைத்து இருந்தது. இடைப்பட்ட நேரத்தில் மின்கம்பங்கள் சரிந்துவிழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மொபைல் போனிலிருந்து யாருக்கும் தகவல் சொல்ல முடியவில்லை. கூடவே சார்ஜ் இறங்கிக்கொண்டிருந்தது. சுகர் பேஷன்ட்டாய் இருக்கும் ஒருவர், இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதாவது வயிற்றில் ஒன்றைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், கடைகள் எதுவும் இல்லாததால் அந்த வேலையைத் தண்ணீர் மட்டுமே செய்துகொண்டிருந்தது. அதன்மூலம் என் பசியைப் போக்கிக்கொண்ட நான் மேன்ஷனுக்குப் பின்னால் பார்த்தபோது மாமரமும், நெட்லிங் மரமும் முறிந்து விழுந்திருந்தன. மதியம் மழைவிட்ட நேரத்தில் மீண்டும் மாடிக்குச் சென்று சுற்றுப் பகுதிகளைப் பார்வையிட்டபோது எதிர்வீட்டில் இருந்த சிமென்ட் கூரைகள் பெய்ர்த்து எறியப்பட்டிருந்தன. பல மரங்கள்... வீடுகள், வாகனங்கள், கட்டடங்கள் மீது விழுந்துகிடந்தன. மாடி வீடுகளில் இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் தூக்கி வீசப்பட்டிருந்தன; காயப் போட்டிருந்த துணிகள் காற்றாடிபோல் பறந்துபோய் எங்கோ விழுந்துகிடந்தன. விதியை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்களும், போர்டுகளும் வீதிக்கு வந்தன; சாலைகளில் மரக் கிளைகளும், இலைகளும் குப்பைபோல் சேமித்துவைக்கப்பட்டிருந்தன. பேயாட்டம் ஆடிய மரங்கள், இலைகள், முறிக்கப்பட்ட கிளைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கேபிள் வயர்கள் போன்றவற்றால் சாலைகள் எல்லாம் போர்க்களம்போல் காட்சியளித்தன. பக்கத்து வீட்டில் தென்னை மரம் எதிராளி ஒருவர் வீட்டி மொட்டை மாடிமீது இளநிகளையும், தேங்காய்களையும், ஓலைகளையும் இறக்கிவைத்திருந்தது. புயலின் கோரத் தாண்டவத்திலும் ஒருசிலர், அதிலும் ஜாலியாய் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். பின்பு, பசி வயிற்றைக் கிள்ளியெடுக்க ஆரம்பித்தவுடன், தெருவில் நடக்க ஆரம்பித்தேன். எதையும் சாப்பிட வேண்டும் என்றால் முதலில் பணம் வேண்டும். அதற்காக ஏ.டி.எம்-களை நோக்கிப் படையெடுத்தேன். அவை, தன்னிடம் பணம் இல்லை என்பதை நாட்கள்தான் பல்லை இளித்துக் காண்பித்துக்கொண்டிருக்கும் எனத் தெரியவில்லை. இது, இன்று நேற்றா நடக்கிறது. மோடி அறிவித்த நாள் முதல் இதே பிரச்னைதான்.

No comments:

Post a Comment