Saturday, February 13, 2016

குறளுக்குப் பொருள் தரும் குறுங்கவிதைகள்-3

41.பெற்றோர், மனைவி, பிள்ளைகளுக்கு
நல்வழியில் துணை நிற்பவனே
இல்வாழ்வான் ஆவான்!
-----------------------------------------------------------

42.துறவிக்கும், வறியவர்க்கும்,
வழியில்லாதவர்க்கும் 
இல்வாழ்வான் துணையாவான்!
--------------------------------------------------

43.தென்புலத்தார் முதல் தான் வரை
ஐவருக்கும் அறத்தைத் தவறாமல் 
செய்வது சிறப்பு!
------------------------------------------------------------

44.பழிக்கு அஞ்சி தேடிய பொருளை
உறவோடு உட்கொண்டால்
அவ்வாழ்க்கை ஒருநாளும் அழியாது!
------------------------------------------------------------

45.அன்புடனும், அறத்துடனும் 
இல்வாழ்க்கை விளங்குமானால்
பண்பும், பயனும் அதுவே!
---------------------------------------------------

46. அறநெறியில் இல்லறத்தை
 நடத்திப் பெற்றிடும் பலனை
வேறுநெறியில் பெற இயலுமோ?
------------------------------------------------------

47.  அறநெறியில் இல்வாழ்க்கை
வாழ முயல்பவன்
பலவற்றுக்கும் முதன்மையானவன்!
----------------------------------------------------------

48.அறவழியில் தன்னையும், பிறரையும்
கொண்டுசெல்பவரின் இல்வாழ்க்கை
துறவியின் தவத்தைவிட வலிமையானது!
------------------------------------------------------------------

49.அறமாகிய இல்வாழ்க்கையில்
பிறரின் பழிச்சொல் இடம்பெறாமல்
இருந்தால் நன்று!
----------------------------------------------------------

50.அகில அறநெறிகளைப் 
பின்பற்றி வாழ்பவன்
ஆகாயத்தில் தெய்வமாக மதிக்கப்படுவான்!
----------------------------------------------------------------------

51.இல்வாழ்க்கை குணங்களுடன்
தன் கணவனுடன் வாழ்பவளே
சிறந்த வாழ்க்கைத் துணை!
-------------------------------------------------------

52.இல்வாழ்க்கையில் நற்பண்பில்லா
மனைவி இல்லாவிட்டால் - அவன்
வேறு எச்சிறப்பும் பெற்றும் பயனில்லை!
-----------------------------------------------------------------

53. நற்பண்புடைய மனைவியால் - அவன்
வாழ்க்கையில் இல்லாதது என்ன?
அமையாவிட்டாலும் இருப்பது என்ன?
----------------------------------------------------------------

54.கற்பென்னும் மன உறுதி 
பெண்ணிடம் இருக்குமானால்
அதைவிட பெருமை வேறு எது?
---------------------------------------------------

55.பிறர் தெய்வம் தொழாது - கணவனையே 
தொழுது வாழும் இல்லாள்
பெய் என்றால் மழையும் பெய்யும்!
---------------------------------------------------------------------

56.தன்னையும் தன் கணவனையும்
கற்புநெறியுடன் காப்பாற்றி - தகுதிவாய்ந்த 
புகழுடன் இருப்பவளே மனைவி!
--------------------------------------------------------------------

57.நற்குணமுடைய பெண்ணைச் 
சிறைவைத்துக் காப்பதில் பயனில்லை...
தம்மைத்தாமே காப்பதுதான் சிறப்பு!
----------------------------------------------------------------

58.கணவனை மதித்து 
கடமையைச் செய்யும் மகளிர் 
தேவர் உலகத்தில் சிறப்புப் பெறுவர்!
-----------------------------------------------------------

59.புகழை விரும்பும் மனைவியைப் 
பெறாதவர் இகழ்ந்துபேசும் 
எதிரியிடம் சிங்கநடையைக் காட்டுவதில்லை!
----------------------------------------------------------------------------

60.நற்பண்பு பெற்ற இல்லாளே
இல்வாழ்க்கையின் சிறப்பு - அதைவிட
கூடுதல் சிறப்புப் பிள்ளைகள் பெறுவது!
--------------------------------------------------------------------

No comments:

Post a Comment