Wednesday, April 20, 2016

அட... சைக்கிளிங் போவதில் இவ்வளவு நன்மைகளா?

(இந்தக் கட்டுரை 19-04-16 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)

ணல் ரோடு, தார்ச்சாலையாக மாறிவிட்டது... மாட்டுவண்டி, மகிழுந்தாக மாறிவிட்டது... விளையாட்டுப் பொருட்கள் விஞ்ஞானப் பொருட்களாகி விட்டன. மனிதன் ரோபாவாக மாறிவிட்டான். இப்படி ஒவ்வொரு நாளும் விரல் நுனியில், அறிவியல் உலகத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை ஏதாவது ஒரு நோய் தாக்கிக்கொண்டிருப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவியலோடு அதன் சாதனங்களையும் பயன்படுத்துவதால்தான் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறோம்.
இதற்கு என்ன காரணம்? முறையான உணவும், சரியான உடற்பயிற்சியும் இல்லாததுதான் என்கிறார்கள் நிபுணர்கள். 
நம் மூதாதையர் வாழ்ந்த காலத்தில் ஆரோக்கியமான உணவும், அதிகமான உடல் உழைப்பும் இருந்தது. ஆனால், இன்று அது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதற்கு மற்றொரு காரணம்கூட சொல்லலாம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழைய பொருட்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில், நம் உடலை வலிமையாக்குவதாக இருந்தது. ஆனால், இன்று அவையெல்லாம் நம் வீட்டின் பரணிலோ அல்லது ஏதோ ஒரு மூலையிலோ இருக்கின்றன. இன்னும் சிலர், அவை எதற்கு என்று பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டு இடத்தைக் காலியாக வைத்துள்ளனர். இப்படி பலரால் மதிக்கப்படாமல் இருக்கும் ஒரு வாகனம்தான் சைக்கிள். சைக்கிள் ஓட்டும் பழக்கம் நம் தலைமுறையினரிடம் மறைந்து வருகிறது. சைக்கிள் ஸ்டாண்டுகளாக இருந்த இடங்கள் எல்லாம் இன்று பைக் ஸ்டாண்டுகளாக மாறிவிட்டன. இந்த நிலையில், மிகவும் எளிமையானதும், எல்லா வசதிக்கும் பெயர்போனதுமான சைக்கிள், தற்போது சில இளைஞர்கள் மத்தியில் புதுப்பொலிவுடன் வரத் தொடங்கியிருக்கிறது. உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கு சைக்கிளிங் ஓர் எளிய பயிற்சி. சைக்கிளிங் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.
நடிகர் ஆர்யா
‘அவரா இவர்?’ என்று கேட்பவரைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எப்பவுமே அவர்தான் இவர் என்று சொல்லும் அளவுக்கு உடலை சிக்கென வைத்திருப்பவர் நடிகர் ஆர்யா. அதற்கு முக்கியக் காரணம், அவர் நாள்தோறும் சைக்கிள் பயிற்சி செய்வதுதான். இவர், விடியற்காலை 4 மணி முதல் 7 மணி வரை சைக்கிள் ஓட்டுகிறார். ஆர்யா தன்னுடைய ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, பிட்னஸுக்கும் தினமும் நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டுவதையே முக்கியக் குறிக்கோளாக வைத்திருக்கிறார். அவருடன் சைக்கிள் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து இதற்காகத் தனியாக குரூப் ஒன்றையும் வைத்திருக்கிறார்.

சைக்கிள் அறிமுகம்
முதன்முதலாக 19-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமான சைக்கிள், தற்போது உலகம் எங்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமாக உள்ளன. 1839-ல் மேக்மில்லன் என்பவரால் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், ‘வெளாசிபிட்’ என்று பெயரிடப்பட்டு, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது. பின்னர் டன்லப் என்பவரால் ரப்பர் சக்கரம் கொண்டதாக, சைக்கிள் மாற்றியமைக்கப்பட்டது. சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம் போன்ற நாடுகளில் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். போக்குவரத்துக்கும் முதன்மையானதாக உள்ளது. போக்குவரத்துத் தவிர, குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருளாகவும் சைக்கிள் உள்ளது. மேலை நாடுகளில் உயர் பதவிகள் வசிக்கும் செல்வந்தர்கள்கூட தினந்தோறும் தங்கள் அலுவலகங்களுக்கு சைக்கிளிலேயே பயணிக்கின்றனர். இதனால், அவர்களுடைய ஆரோக்யம் நன்றாக இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கும், மாணவர்கள் பள்ளிகளுக்கும் சைக்கிளில் செல்வதைத்தான் விரும்புகின்றனர். சாலைகளில் இருபுறமும் சைக்கிள் செல்வதற்கு நேர்த்தியாகத் தளம் அமைத்து, சைக்கிளில் செல்வதை ஊக்குவிக்கிறார்கள்.
'சைக்கிள் ஓட்டுனா புது உலகம் இருக்கு'
தினந்தோறும் 20 கி.மீ. வரை சைக்கிளில் பணிக்குச் சென்றுவரும் பெங்களூர் ஐ.டி. ஊழியர் வல்லரசு சம்பத்குமாரை முகநூல் மூலம் பிடித்துப் பேசினோம். ‘
’பெங்களூரில் வேலை கிடைத்து ஒரு வருடம் பஸ்ஸில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது ஆபீஸ் நண்பர் ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானார். அவர், 'தொடர்ந்து 6 வருடங்கள் சைக்கிளிலேயே ஆபீஸ் வந்து போவதாகவும், இதுவரை எந்த நோயும் வந்ததில்லை' என்றும் சொன்னார். ஏற்கெனவே நான் சைக்கிள் வாங்கவேண்டும் என்று வைத்திருந்த ஆவலை, இவர் சொன்னவுடன் மேலும் தூண்டியது. இருந்தாலும் சொந்தமாக சைக்கிளை வாங்குறதுக்கு முன்னாடி வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பார்த்தேன். அதுல எந்த சைக்கிள் நமக்கு சவுகரியமாக இருக்குனு தேடிக் கண்டுபிடிச்சு வாங்க ஆரம்பிச்சேன். 14,000 ரூபாயில ஒரு சைக்கிள் இருந்துச்சு. அது எனக்கு ஓட்டுறதுக்குச் சரியா வரலை. அதனால 30,000 ரூபாய் கொடுத்து ஒரு சைக்கிளை வாங்கினேன். அதுதான் என்னோட கனவு சைக்கிள்னு நினச்சேன். அந்த சைக்கிள்லதான் நான் இப்பவும் ஆபீஸ் போய்ட்டு வர்றேன்.

நான் வெச்சிருக்கிற சைக்கிள் நல்லா இருக்கிற ரோட்டுல வேகமா போகும். டூவீலருக்கு எப்படி காத்தோட அளவு காட்டுமோ, அதுபோல நான் வச்சிருக்கிற சைக்கிளோட டயர்களுக்கும் காத்தோட அளவு காட்டும். பாதை சரியில்லாத இடத்துல ஓட்டுனா காத்த கம்மியாகிட்டுதான் ஓட்டணும். நானும், என் ப்ரெண்ட்ஸும் வாராவாரம் எங்காவது ஓர் இடத்தைத் தேர்வு செய்து சைக்கிள் பயணம் போவோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட பெங்களூர் டு திருவண்ணாமலை வரை சைக்கிளிலேயே பயணம் செய்தோம். அது எனக்குப் புது நம்பிக்கையைத் தந்தது. ஆறு மாசம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டிட்டுப் போனதால வழியில இருக்கிற டீக்கடை, பழக்கடையிலே இருக்கிறவங்களோட அறிமுகம் கிடைச்சுது. அவங்ககிட்ட நல்லாப் பழக முடியுது. அதன்மூலம் நிறைய ப்ரெண்ட்ஸ் கிடைச்சாங்க. என்னைப்போலவே சைக்கிள் ஓட்டிக்கிட்டுப் போறவங்களும் என்னைப் பார்த்து விஷ் பண்ணுவாங்க. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனக்கு ஆஸ்துமா இருந்ததால ஆரம்பத்துல என்னால் ரொம்ப தூரம் நடக்க முடியாது. ஓட முடியாது. மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்படுவேன். ஆனா இப்ப சுவாசம் நல்லா இருக்கு. ரொம்ப தூரம் நடக்க முடியுது. 5 கி.மீ. தூரம் வரை ஓட முடியுது. மூன்று வேளையும் அதிகமாகச் சாப்பிட முடியுது. உடம்பை நல்ல ஆரோக்யமாக வச்சுக்க முடியுது. நல்லா சதை பிடிச்சிருக்குது. இதுக்கெல்லாம் காரணம் சைக்கிள் ஓட்டுறதுதான். சைக்கிள் ஓட்டுனா புது உலகம் இருக்கு’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

'நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க'
தினமும் சைக்கிளிங் செய்யும் சென்னையைச் சேர்ந்த செந்திலிடம் பேசினோம். ''சாதாரணமானவர்களுக்கு ரூ.4,000 விலையில் உள்ள சைக்கிள்களே போதும். ரேஸ் போகிறவர்கள் ரூ.40,000 மேல் உள்ள சைக்கிள்களைப் பயன்படுத்தலாம். 4,000 ரூபாய் சைக்கிள் வைத்திருப்பவர்கள் நீண்ட தூரம் ஓட்டமுடியாது. அவர்கள், ரொம்ப கஷ்டப்பட்டு ஓட்டணும். அவர்களுக்கு வலு அதிகம் இருக்கும். பெரும்பாலும் சைக்கிளிங் போகிறவர்கள் தனியாகப் போகலாம். இருந்தாலும் ஒரு குரூப்பாகச் சேர்ந்து ஓட்டினால் களைப்பு தெரியாது. நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. ரொம்ப நேரம் ஓட்டுற மனநிறைவு கிடைக்கும். முதன்முதலாக சைக்கிள் ஓட்டுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமா தூரத்தை அதிகரிக்கணும். தொடக்கத்திலேயே குறிப்பா ஒருநாளைக்கு 30 - 40 கி.மீ சென்றால் உடலுக்கு நல்லது இல்லை. ஈவென்ட் வைத்திருப்பவர்கள் 200 கி.மீ தூரம் வரை போகலாம். பெரும்பாலும் நார்மல் சைக்கிள்களை சாதாரண கடைகளில் வாங்கலாம். ஆனால், ரேஸ்க்குச் செல்பவர்கள் அதற்கென்று உள்ள கடைகளில் போய் வாங்கலாம்'' என்றார்.
சைக்கிள் ஓட்டுவதால் நன்மைகள்:
சைக்கிளிங் செய்வதால், உடல் உறுப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடலுக்கும் உள்ளத்துக்கும் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து, ஹிப்போகேம்பஸ் பகுதியில் புதிய செல்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது. இதனால், நினைவாற்றல் மேம்படும். வாரத்துக்கு 5 நாட்கள் சராசரியாக 30 நிமிடங்கள் சைக்கிளிங் செய்வது நல்லது. அரை மணி நேர சைக்கிளிங் பயிற்சியில் 300 கலோரிகள் வரை எரிக்கப்படும். சைக்கிளிங் செய்யும்போது முதல் 10 நிமிடங்களில் உடலில் இருக்கும் நீர் வெளியேறும். 20 நிமிடங்களுக்குப்பிறகு குளுக்கோஸ் எரிக்கப்படும். 30 நிமிடங்களுக்குப்பிறகு கொழுப்புச் சத்து குறையும்.

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உடற்பயிற்சியாளர் லதாவிடம் பேசினோம். ‘‘சைக்கிளிங் நமது உடலை ஃபிட்டாக வைக்க உதவும் எளிய பயிற்சி. இதயத் துடிப்பை அதிகப்படுத்துவதோடு, இதயத்தை வலுப்படுத்துகிறது. எலும்பு மற்றும் மூட்டுகளை வலுவாக்குகிறது. தசைகளை வலிமையாக்குகிறது. உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கிறது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் இருக்கும் அதிகமான கலோரிகளை எரிக்கிறது. பாதத்தால் சைக்கிளை மிதிப்பதால் கால் தசைகள் கூடுதல் பலம் பெறுகின்றன. தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால் கை, கால் தசைகள் உறுதி பெறுகின்றன. உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களைக் கட்டுக்குள் வைக்கின்றன. உடல் வெப்பத்தையும், வியர்வையையும் வெளியேற்றுகிறது’’ என்றார்.
சைக்கிள் விற்பனை:
‘’எங்களிடம் ரூ.3,000 முதல் இரண்டேமுக்கால் லட்சம் ரூபாய் வரை சைக்கிள்கள் இருக்கின்றன. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எங்களிடம் சைக்கிள்கள் இருக்கின்றன. மாதத்துக்கு 150 முதல் 200 சைக்கிள்கள் வரை சேல்ஸ் ஆகின்றன. இது சம்மர் என்பதால், ஸ்கூல் பசங்க சைக்கிள்கள்தான் அதிகமாக சேல்ஸ் ஆகின்றன. குறிப்பாக 3,000 ரூபாய் உள்ள சைக்கிள்கள் மட்டும் ஒருநாளைக்கு 80 சேல்ஸ் ஆகின்றன. ரேஸ் சைக்கிள்கள் நார்மலாகத்தான் சேல்ஸ் ஆகின்றன. குழந்தைகளின் சைக்கிள்களும் ஓரளவுக்கு நன்றாக வியாபாரமாகின்றன. உடல் ஃபிட்னெஸுக்காக சின்னச்சின்ன  குழந்தைகளுக்கு இப்போதே சைக்கிள்கள் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர் பெற்றோர்கள்’’ என்கின்றனர் சைக்கிள் விற்பனையாளர்கள்.
சைக்கிள் மூலம் விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. சைக்கிள் கற்றுக்கொள்ளும்போது ஏற்படும் சின்னச்சின்ன காயங்களைவிட மரணமும் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2014-ம் ஆண்டில் 74 சைக்கிள் விபத்துகள் நடந்திருக்கின்றன. அதே ஆண்டில் சைக்கிள் மூலமாக 46 மரணங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
சைக்கிளிங் டிப்ஸ்:
சைக்கிள்களில் பல வகைகள் உள்ளன. அதில், நம் உடல் அமைப்புக்கும், வயதுக்கும் பொருத்தமான சைக்கிள்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. நிற்கும்போது, நம்முடைய இடுப்பு உயரத்துக்கு சீட் இருக்க வேண்டும். சீட் உயரம் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், முதுகுவலி உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். முதல் முறையாக சைக்கிளிங் செய்பவர்கள் மெதுவாகத் தொடங்கி நன்கு பழகிய பிறகு, வேகத்தையும், தொலைவையும் அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

தவறாமல் சைக்கிளிங் செல்வோம்... உடலை ஃபிட்னஸாக வைப்போம்.

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment