Tuesday, April 5, 2016

200-வது ஆண்டில் கூர்க்கா படைப் பிரிவு!





(இந்தக் கட்டுரை 23-04-15 அன்று, 'விகடன்' இணையதளத்தில் வெளியானது.)


ந்திய ராணுவத்தின் மிகப் பழமையான 3-வது கூர்க்கா படைப்பிரிவு, தனது 200- வது ஆண்டு தினத்தை நாளை (24-ம் தேதி) கொண்டாடவுள்ளது. 1815-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி '1/3 கூர்க்கா ரைபிள்ஸ்' என்று அழைக்கப்படும் கூர்க்கா படைப் பிரிவு உருவாக்கப்பட்டது. சர் ராபர்ட் கோல்கூன் என்பவரால், உத்தராஞ் சலில்  (அல்மோராவில்) இந்த படைப் பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது.


நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்ட கூர்க்கா என்ற இவர்களின் இனப் பெயர், 18 சித்தர்களில் ஒருவரான கோரக்கநாதரின் பெயரில் இருந்து வந்தது. நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் இவர்கள் குடியேறினர். இந்தப் பிரிவி்ல் கூர்க்காக்கள் மட்டுமல்லாமல் குமான், கார்வால் பிராந்தியத்தைச் சேர்ந்த பிற சமூகத்தினரும் இடம்பெற்றிருந்தனர்.

இந்த படைப் பிரிவுக்கு முந்தைய படைப் பிரிவுகளாக மெட்ராஸ் ரெஜிமென்ட் (1758), பஞ்சாப் ரெஜிமென்ட் (1761)., ராஜ்புத்னா ரைபிள்ஸ் (1775), ராஜ்புத் ரெஜிமென்ட் (1778), ஜாட் ரெஜி மென்ட் (1795), குமான் ரெஜிமென்ட் (1813) ஆகியவை உருவாக்கப்பட்டன. இவைதான் இந்திய ராணுவத்தின் 'நேட்டிவ் படைப் பிரிவுகள்' என்று அழைக்கப்படும் மிகப் பழைமையான பிரிவுகளாகும்.
1814-1816-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான போரில், இந்த கூர்க்கா ரெஜிமென்ட் படையினர், மிகச் சிறப்பாகப் பணியாற்றி ஆங்கிலேயர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். ஆரம்பத்தில் கூர்க்கா இனத்தவரை சாதாரண போலீஸாராக நடத்திய ஆங்கிலேயர்கள், பின்னர்தான் அவர்களை ராணுவத்தில் இணைத்து படைப்பிரிவையும் உருவாக்கினர்.

1880-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி நடந்த 2-வது ஆப்கன் போரில் கூர்க்கா படைப் பிரிவினர் சிறப்பாகச் செயல்பட்டனர். அப்போது லெப்டினென்ட் கர்னல் பி.ஓ.டுன் என்பவர், இந்தப் பிரிவின் முதல் இந்திய கமாண்டிங் அதிகாரியாக இருந்தார்.
மேலும், கூர்க்கா படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள், சிறந்த கால்பந்து ஆட்டக்காரர்களும்கூட. இப்படைப் பிரிவினர், நாட்டின் முன்னணி கால்பந்து அணிகளான கொல்கத்தா, மோகன்பகான், ஈஸ்ட் பெங்கால் ஆகிய அணிகளில் இடம்பெற்று  பெருமை தேடித் தந்தனர். மக்கள் பணி, அமைதிப் பணி என பல்வேறு பணிகளி லும் போர்களிலும் கலந்துகொண்ட பெருமை கூர்க்கா படைப் பிரிவினருக்கு உண்டு.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். அதேபோல ருவாண்டாவுக்கு அனுப்பப்பட்ட ஐ.நா. அமைதிப்படையிலும் இடம்பெற்று இந்தியாவுக்கு நல்ல பெயரைத் தேடித் தந்துள்ளனர்.

2001-ம் ஆண்டு பூஜ் நிலநடுக்கத்தின்போது மிகச் சிறந்த முறையில் மீட்புப் பணியில் ஈடுபட்டதும் இந்தப் படைப் பிரிவினர்தான். சுதந்திரத்திற்குப் பின்னர் 177 விருதுகளைப் பெற்றுள்ள இந்தப் படைப் பிரிவினர், அசோகா, கீர்த்தி சக்ரா உள்பட 200-க்கும் மேற்பட்ட வீர விருதுகளைக் குவித்துள்ளனர்.

தொடரட்டும் இந்திய ராணுவத்தின் கூர்க்கா படைப்பிரிவினரின் சேவைகள் !

- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment