Tuesday, April 11, 2017

''ஆர்.கே.நகர் தேர்தலால் அ.தி.மு.க-வில் இன்னும் மாற்றம் வரும்!''

''ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படும்'' என்கின்றனர், அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உருவானது. ஜெயலலிதா தலைமையின் கீழ் மிகவும் கட்டுக்கோப்புடன் இருந்த அ.தி.மு.க., தற்போது இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கிறது. அவரது மறைவுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் தன்வசம் கொண்டுவர சசிகலா மேற்கொண்ட முயற்சி முழு அளவில் பலனளிக்காமல் போனதே இந்தப் பிளவுக்குக் காரணம் எனலாம். ஓ.பன்னீர்செல்வம், ஜெ-வின் உண்மையான விசுவாசி எனப் பெயரெடுத்ததுடன், அவருக்கு இக்கட்டான சூழ்நிலை உருவாகி (ஜெ. மறைவின்போது) மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றபோது... சசிகலா மற்றும் அவரது மன்னார்குடி உறவுகளின் மிரட்டலுக்கு வளைந்துகொடுக்காமல் தனி அணியாகப் பிரிந்தார்.
பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருப்பது தெரிந்தும் முதல்வர் பதவி ஏற்க முயற்சி மேற்கொண்டார். இதனால், ஓ.பி.எஸ்ஸுக்கும், சசிகலா தரப்புக்கும் மோதல் வெடிக்கத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி இரவு சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா சமாதி முன்பு திடீர் தியானம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு, பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்த சசிகலாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளால், தமிழக அரசியலே தடம்புரண்டது. பதிலுக்கு சசிகலா தரப்பும் பன்னீர்செல்வத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. 
உடைந்த அ.தி.மு.க.!
நாளுக்குநாள் அவர்கள் இருவருக்கும் மோதல் முற்றத் தொடங்கியதையடுத்து, சசிகலா தரப்பில் ஓர் அணியாகவும், ஓ.பி.எஸ் தரப்பில் மற்றோர் அணியாகவும் அ.தி.மு.க இரண்டாகப்  பிரிந்தது. இந்நிலையில்தான், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றனர். இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு பெருக, சசி அணியில் இருந்த சில எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ஓ.பி.எஸ் பக்கம் படையெடுக்கத் தொடங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த பலரை பணத்தையும், பதவியையும் காட்டி விலை பேசியது. அதற்கு விலைபோனவர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டினர்.
இந்த நிலையில்தான், ஆர்.கே.நகர்த் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும், 12-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க-வின் இரண்டு அணியினரைத் தவிர, பலம் பொருந்திய தி.மு.க., ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் தீபா, இன்னும் பிற கட்சிகளும் களத்தில் குதித்திருக்கின்றன. அ.தி.மு.க-வின் வெற்றி சின்னமான இரட்டை இலைக்குப் போட்டிபோட்டு...சசி அணியும், ஓ.பி.எஸ் அணியும் தேர்தல் ஆணையத்தை நாடின. ஆனால், விளைவு இரண்டுக்குமே அந்தச் சின்னம் கிடைக்கவில்லை. மாறாக, வெவ்வேறு சின்னங்களும், வெவ்வேறு பெயர்களும் வழங்கப்பட்டன. 
மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு!
இதனையடுத்து, தீவிர பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர். ஆர்.கே.நகர்த் தொகுதியைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ் அணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் மதுசூதனனுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சசி அணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றபோதும், அவர் குடும்பம் சம்பந்தப்பட்டவரே ஆட்சியையும், கட்சியையும் நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகச் சசிகலாவுடையச் சகோதரி மகனான டி.டி.வி.தினகரனே இந்தத் தேர்தலில் களமிறக்கப்பட்டார். ஏற்கெனவே, அந்த அணி மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தி, இந்தச் செயலால் மேலும் அதிகமானது. இதனால் கலக்கம் அடைந்த தினகரன் ஆதரவாளர்கள், இந்த இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் தவிர, இன்னும் சில கட்சியினரும் மக்களைப் பணத்தால் வளைக்க முயற்சி செய்கின்றனர். 
பணப் பட்டுவாடா!
இந்தநேரத்தில்தான் வருமானவரித் துறை, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட 35 இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தியது. அத்துடன், ஆர்.கே.நகர் முழுவதிலும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க கூடுதல் தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்களை மிஞ்சும்வகையில் பணப் பட்டுவாடா மிகவும் ஜரூராகவே நடந்துகொண்டிருக்கிறது. அந்தத் தொகுதியில் உள்ள முக்கியப் புள்ளிகள் மூலம் வாக்காளர்களை வேறோர் இடத்துக்கு வரச் சொல்லி பணப் பட்டுவாடா நடப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வாக்காளர்களோ, நேரடியாகப் பணத்தைப் பெறாமல், அந்த மதிப்புக்குரிய வீட்டுஉபயோகப் பொருட்களை கடைகளில் இருந்து எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. 
''அ.தி.மு.க-வில் இன்னும் மாற்றம் வரும்!''
இந்நிலையில்,அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர். ''தற்போது அ.தி.மு.க இரண்டு அணிகளாகப் பிரிந்துகிடக்கிறது. இது, இல்லாமல் தீபா அணி வேறு களத்தில் உள்ளது. ஆக, அ.தி.மு.க மூன்று அணிகளாக இத்தேர்தலை எதிர்கொண்டிருப்பதால், தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அ.தி.மு.க தொண்டர்கள்.. ஏன் சட்டமன்ற உறுப்பினர்களேகூட, ஓர் அணியைவிட்டு மற்றோர் அணிக்குத் தாவும் வாய்ப்புகளும் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தற்போது, குழப்பமான மனநிலையில் உள்ள அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஒரு தெளிவான விடை காணும் வகையில்தான் இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. இthiல் வெற்றிபெறும் அணியே மேலும் வலுப்பெறும் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது. தவிர, ஒருவேளை தினகரன் வெற்றிபெறும்பட்சத்தில், அவர்  முதல்வர் பதவி ஏற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அரசு நிர்வாகம் தலைகீழாக மாறும் சூழ்நிலை உருவாகக்கூடும். அவர் வைத்ததே சட்டமாக இருக்கும் என தற்போது பதவியில் உள்ளவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்களுக்கு தினகரன் மரியாதை கொடுப்பாரா என்பது கேள்விக்குறியாகி இருப்பதால், ஆர்.கே.நகர்த் தொகுதி தேர்தல் முடிவு, அ.தி.மு.க-வில் இன்னும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்த இடைத்தேர்தல்தான் ஒரு திருப்புமுனையாக இருக்கும்'' என்கின்றனர். 
ஒருதொகுதியின் இடைத்தேர்தலால் திருப்புமுனை ஏற்பட்டால் சரிதான்!
- ஜெ.பிரகாஷ்

No comments:

Post a Comment